233. அடுத்தவர் வீட்டிற்குள் எட்டிப்பாருங்கள்!

நம் வீட்டில் நடக்கும், இருக்கும் விஷயங்களை விட அடுத்தவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பது பலமடங்கு சுவையானது இல்லியா? அவன் என்ன சொன்னான், ஏன் சொன்னான், இந்த மாசம் ஏன் சம்பளம் பிடிச்சுட்டாங்க, ஈ.எம்.ஐ கட்ட முடியல இந்த மாசம் தொடங்கி அடுத்தவங்க என்ன செய்யறாங்கனு ஒக்காந்து அனலைஸ் பண்ணி அத நாலுபேர்கிட்ட பகிர்ந்துகிறதுல இருக்குற அல்ப சந்தோஷத்துக்கு ஈடு இணையே கிடையாது.

பக்கத்தாத்து அம்பியாகட்டும், எதிர்த்த வீட்டு முருகனாகட்டும் - இப்படி நம்மள மாதிரியான சாதாரண ஆளுங்க வீட்டுக்குள்ளயும் வாழ்க்கைக்குள்ளயும் தேவையில்லாம மூக்கை நுழைச்சு எட்டிப்பார்க்கும் நமக்கு சுளையா வந்து ஒரு பெரிய ஆளு வந்து மாட்டினா சும்மா விட்ருவோமா சான்ஸை?

விஜயகாந்த் ராதிகாவ வச்சிருந்தாரு, எம் சி ஆரு ஜெயலலிதா கூட சுத்தினாரு, கலைஞர் வேற என்னமோ செஞ்சாருன்னு எல்லாம் நேரா போட்டா கேஸ் வரும்கறதால வாரமலர் துணுக்குமூட்டை தொடங்கி இண்டிபெண்டன்ட் வரைக்கும் இந்த மாதிரியான செய்திகளை ஏதோ பெரிய ரீபஸ் போட்டியாட்டம் க்ளூ க்ளூவா கொடுத்து நம்மள பைத்தியம் அடிச்சிர்றாங்க. ஆனா பாருங்க, இதப் பத்தி குறை சொல்றேனே தவிர நானும் சான்ஸ் கிடச்சா படிக்காம விடறதில்லேங்குறது வேற மேட்டர்.

இப்படி அடுத்தவங்களப் பத்தி பேசுறது மனித இயல்புனு சும்மா போயிடமுடியுமா? அடுத்தவங்களோட தனிமனித சுதந்திரம்,தனிப்பட்ட வாழ்க்கைல நாம தலையிடுறோமேனு ஒரு நிமிஷம் கூட தோணமாட்டேங்குதே. பத்திரிகைகளுக்கு காசு பார்க்கணும். அதுக்குச் சொல்ற சாக்கு பொதுவாழ்க்கைல ஈடுபட்டா - all is fair game. எனக்கென்ன டவுட்டுன்னா நீங்களும் நானும் எதுனாச்சும் மனித நடமாட்டம் அற்ற தீவுல இருக்கிறோமா? பொதுவாழ்க்கைல இல்லியா? நாமும் சமூகத்துல ஒரு பொதுவெளியில தான இயங்கறோம். இன்னிக்கு கமலஹாசனோட மனைவிகள்னு ஜூவில கட்டுரை போட்டா நாக்கை தொங்கப்போட்டுகிட்டு படிக்கிற நாம, நம்மளோட எலும்புக்கூடுகள் வெளில வந்தா இதே ஆர்வத்தோட அடுத்தவங்க படிக்கறத விரும்புவோமா?

எலும்புக்கூடுகள் இல்லாம ஒருத்தரும் இல்லை. காந்தியும் நேருவும் என்ன புத்தர் வரைக்கும் இதே கதைதான். நமக்கு இருக்கும் மதிப்பு நாம இயங்கும் தளத்தில் நமது திறமைக்கானதாக மட்டுமில்லாமல் நமது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் இருந்தால்? திரும்பிப்பார்த்தால் எல்லாரும் ஏதாவதொரு தருணத்தில் சறுக்கியிருப்போம். இப்போது நினைத்தால் ஏன் அவ்வாறு செய்தோம்னு புரியாதுன்னாலும், கண்கெட்ட சூரிய நமஸ்காரம் பண்ணி புண்ணியமில்லேங்கிறதால தவறுகளை பீரோக்களில் இறுக்கமாக பூட்டிவச்சுட்டு தெனாவட்டா திரியிறோம். ஆனா பாருங்க, எப்படிப்பட்ட லாக்கருக்கும் ஒரு சாவி இருக்கு. அந்த சாவிக்கும் ஒரு டூப்ளிகேட் இருக்கு.

ஒரு பிரபலத்தின் நிலைமையில் நாம் இருந்தால் இம்மாதிரி விஷய(ம)ங்கள் வெளியாகும் போது ஏற்படும் மன உளைச்சலை இருந்து அனுபவித்தால் தான் தெரியுமோ என்னவோ? அதுவரைக்கும் ‘பத்திகிச்சு' தாராளமா படிச்சு அரிப்பத் தீத்துக்கலாம்.

--------------------
கீழ இருக்கும் படத்துக்காக ஒரு முன்னுரை எழுதணும்னு ஆரமிச்சு என்னவோ சீரியஸா போச்சு. எனக்கு வந்த மின்னஞ்சலின் படி இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸோட ஆபீஸ் ரூமாம். இல்லேங்கிறேன் நானு. ஏன் இல்லேனு பத்துவினாடிகளுக்குள்ள கண்டுபிடிச்சு சொல்ற அனைவருக்குமே ‘வலையுலக தகவல் தொழில்நுட்ப வாழ்நாள் சாதனையாளர்/சாதனையாளினி' அப்படிங்கற பட்டத்தை கொடுக்கத்தயார். வலையுலக கைநாட்டுகள்னு சொல்லிக்கிற அல்லாருக்கும்,அரசியல்வாதியாட்டம் இன்ஷ்டண்ட் டாக்டர் பட்டம் மாதிரி தகுதியோட, இந்தப்பட்டத்தை போட்டு தகுதியை வளர்த்துக்க அருமையான சான்ஸ்.



என்ன கண்டுபிடிச்சாச்சா?

 

வார்ப்புரு | தமிழாக்கம்