202. ஜனநாயகம் வாழ்க! ராதிகா செல்வி வாழ்க வாழ்க!

சமூகம் தனக்கு இழைத்த கொடுமைகளுக்காக வாளேந்திய மாவீரன் வெங்கடேச பண்ணையாரை அநியாயமாக காவல்துறை அடியாட்கள் மூலம் போட்டுத்தள்ளிய ஜெயலலிதா என்னும் கொடூர அரக்கியின் மூக்கை அறுக்க வழியென்ன? வெங்கடேச பண்ணையாரின் விதவையை, முற்றிலும் தொலைத்த அன்பு மனைவியை - மத்திய உள்துறை இணையமைச்சர் ஆக்கிப் பார்ப்பதே சரியான தீர்வு! கொடூர காவல்துறையினரை கட்டுப்படுத்தி மட்டுப்படுத்த அவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவரையே அவர்களின் தலைவியாக ஆக்குவதை ஸ்வீட் ஐரனி என்பதா சர்க்கிள் ஆப் லைப் என்பதா?

அப்படியே அவ்வப்போது பம்மும் நாடார் சமூகத்தையும், தனிக்கட்சி தொடங்க வித்திடும் சுப்ரீம் ஸ்டாரையும் வழிக்கு கொண்டு வந்தாற்போலாயிற்று!

என்னே மதிநுட்பம்! அர்த்தசாஸ்திரத்தை மிஞ்சும் சாணக்கியத்தனம்! கண்டு உள்ளம் மகிழ்கிறது ஐயா! எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் விக்கித்து திகைத்து ஸ்தம்பித்து நிற்கிறேன்!

201. என்-கவுண்டரில் மாட்டிய பெருந்தலை

சர சரவென புனித பிம்பங்கள் ஐபி என்னு வலையில் சாய்ந்து கொண்டிருக்கும் இந்த புண்ணிய காலத்திலே என் கவுண்டர் சும்மா எத்தன பேரு ஆன்லைன்ல இருக்காங்கன்னு காட்டிகிட்டு தூங்கிட்ருந்தாரு... இப்படி தூங்கவா கஷ்டப்பட்டு வேலைமெனக்கெட்டு ப்ளாக்ல வேலை செய்யச் சேர்த்தேன்னு திட்டி என்னமோ ஐ.பியாமே அதையும் சேர்த்து பிடிச்சுவைங்க கவுண்டரேனு சொல்லிவச்சுருந்தேன்..

நான் ஏதோ கோக்குமாக்க கெண்டமீனுக்கு வளைச்ச வலையில சுறாமீனே மாட்டிருக்குன்னா ஆச்சரியப்படாம எப்படி? இவ்வளவு பெருந்தலை தெரியல-வின் கவுண்டரில் வந்து விழும் என்று நானே எதிர்பார்க்கவில்லை. அதுவும் சந்தேகத்திற்கே இடமில்லாதவாறு கனகச்சிதமா ஸ்க்ரீன் ஷாட் பிடிச்சு வச்சி எனக்கு அலெர்ட் மெயிலனுப்பினாரு கவுண்டரு..

அந்தப் பிரபலம் யாருன்னு நான் பேரச் சொல்லலாமா இல்ல பூடகமா சொல்லி அனாமதேயமா மொத்தலாமான்னு இன்னும் எங்கள் கட்சிப் பொதுக்குழு முடிவெடுக்காத பட்சத்திலும்; பேரு சொல்லாம விடற அளவுக்கு இரக்க குணமெல்லாம் எனக்கு கிடையாதுங்கறதுனாலயும்; விஷயத்தினோட க்ராவிட்டிய கருதி, தார்மீக காரணங்களுக்காக மற்ற பதிவர்களையும் உஷார் படுத்த வேண்டியதான என் சமூகப் பொறுப்பினது அவசியத்தையும் உணர்ந்து எந்த இடர்பாடு வரினும் அந்த திமிங்கலத்தின் பேரை வெளியிடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

அதற்கு முன்னர் Operation "make the fat lady sing" விவரங்கள்....

எப்படி இந்த குறிப்பிட்ட நபர் தான் என் பதிவிற்கு வந்தார் என்று முடிவு செய்தேன் சிறுபிள்ளைத்தனமாக பலர் கேள்விகேட்க கூடும். அதற்கு என் பதில் - தமிழ் வலையுலகில் எனக்கும் சரி, அனைவருக்கும் சரி இந்த நாட்டிலேயே இவர் ஒருவரைத் தவிர வேறு ஒருவரையும் பரிச்சயம் கிடையாது. ஏனென்றால் அவ்ளோ பிரபலமான பழம்பெரும் ஆள் இவர். குட்டியூண்டு நாட்டில் அமர்ந்துகொண்டு சொந்தமாக வெப்சைட்டே வைத்து நடத்திவரும் இவர், தன்னை யாரும் கண்டே பிடிக்க முடியாது என்று பகல் கனவு கண்டு என் கவுண்டரிடம் வகையாகச் நேற்றைக்கு சிக்கியிருக்கிறார்.

வந்த ஐபி அட்ரஸ்: 2*2.*7.*0*.223 (சம்பந்தப்பட்டவரின் ப்ரைவஸியை பாதுகாக்கவேண்டி ஐபியை மாஸ்க் செய்துள்ளேன். மேலதிக விவரங்களுக்கென எந்த கோர்டிலும் வந்து நிருபிக்க மேலும் பல விவரங்களைத் தர முடியும்)

Browser: MSIE 6.0; OS: Windows XP; Resolution: 1024x768; 15th May 2007 12:11:28 PM

சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த முதல் பதிவு

சிக்கிய அன்று என் பதிவில் பார்த்த கடைசி பதிவு

இதற்கு மேல் விவரங்கள் வேண்டுவோர் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த விவரங்கள் போதுமா புனிதபிம்பமே? ஒழுங்காக மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்திருந்தால் இந்த அவல நிலை ஏற்பட்டிருக்குமா? எண்ணிப்பாருங்கள்...

இந்தத் திமிங்கிலத்திடம் நானே மெயிலனுப்பி கேட்டும் "அர்த்தமற்ற முறையில் ப்ளாக்மெயில் செய்கிறேன்" என்று பதிலனுப்பாத படியால் இதோ அவரின் முகத்திரையை கிழிப்பதென முடிவு செய்து, எப்படி அணுகலாம் என்று சிந்தித்த போது இவ்விஷயங்களில் நமக்கு முன்னோடியான பெனாத்தலாரின் துணையை நாடினேன். அவரும் ப்ளாஷில் போட்டு ப்ளாஷ் செய்யலாம் என்று ஐடியா கொடுக்கவே.. கீழுள்ள ப்ளாஷில் அந்த திமிங்கலத்தின் முகத்திரை கிழிவதை பாருங்கள்...



என் கவுண்டரில் இவரின் தடயங்கள் இன்னும் இருக்கின்றன. வேண்டுவோர்க்கு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி வைக்கப்படும்.

200. current affairs பாட்டுக்கு பாட்டு!

இந்த பரபரப்பான நேரத்தில், பாடல்கள் எழுதி வெப்பத்தை தணிக்க பவுர்ணமி பாண்டியன் வராத சூழ்நிலையில், ஏற்கனவே வந்து பிரபலமான ரெண்டு பாட்ட போட்டு ஒப்பேத்தலாம்னு நினைச்சதன் பயனே இப்பதிவு! லிரிக்ஸெல்லாம் கிட்டத்தட்ட சரியாத்தான் இருக்குன்னு நினைக்கிறேன். படிக்கறவங்களும் தோணுற பாட்டா போட்டா, சர்வேசன் மாதிரி இங்க தனியா பாட்டுக்கு பாட்டு ஒண்ணே நடத்திடலாம். ஆரம்பத்திற்கு ரெண்டு பாட்டுலேர்ந்து எந்த அடிய வேணா எடுத்துப் பாடலாம்... ஓகே கால்ஸ் & கய்ஸ்! ஸ்டார்ட் தி மீசிக்!

ஒருவன் ஒருவன் முதலாளி (முத்து)
பாடியது: எஸ்.பி.பி
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

பல்லவி:
ஒருவன் ஒருவன் முதலாளி! உலகில் மற்றவன் தொழிலாளி!
கணிப்பைப்போட்டவன் கோமாளி பாம்-ஐப்போட்டவன் அறிவாளீ

அநுபல்லவி:
தேர்தலை வெல்ல சேனல்கள் எதற்கு?
பூத்தை பறிக்க செல்போன் எதற்கு?
Sun ஆ Son ஆ போர்க்களம் எதற்கு?
ஆசைதுறந்தால் நீ மந்திரியெனக்கு!

சரணம் 1:
மகனின் மீது தலைவருக்கு ஆசை... பதவி மீது எல்லாருக்கும் ஆசை!
மகன் தான் எப்பவும் ஜெயிக்கிறது! இதை பேரனோ உணர மறுக்கிறது!
கையில் ஒரு சேனல் இருந்தால் கட்சிதான் அதற்கு எஜமானன்!
கழுத்துவரைக்கும் காசுஇருந்தாலும் நான் தான் உனக்கு எஜமானன்!
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு! கணிப்பை மாற்றிப் போட்டுவிடு!

சரணம் 2:
வானம் எனக்கு பூமியும் எனக்கு... வரம்புகள் மீறாட்டி வாய்ப்புண்டு உனக்கு!
டிவியும் உனக்கு காசும் உனக்கு, என் ரத்தத்தோடு சண்டைகள் எதற்கு?
ஒதுங்கச்சொல்லுது தலைமையடா! அடங்கி இருப்பது உன் கடமையடா!
சன்னில் மதுரைய பாக்கும்போது ஐயோ ஐயோ எரிகிறதே!
சங்கமப்பொண்ணு பார்க்கும்போது பதவி கேட்டு துளைக்கிறதே!
முத்து எங்கே போவாரு? அட செல்வியும் இனிமே பேசாது!
(or )
பொறுமை உனக்குப் போதாது அட வறுமை எனக்கு வாராது
(இந்த வரி மட்டும் க்ளியரா காதுல விழலை!)

பல்லவி:
ஒருவன் ஒருவன் முதலாளி! உலகில் மற்றவன் தொழிலாளி!
கணிப்பைப்போட்டவன் கோமாளி பாம்-ஐப்போட்டவன் அறிவாளீ
---------------------------
சீச்சீ சீச்சீ..(மஜா)
பாடியது: ஹரிணி, சங்கர் மகாதேவன்

இசை: வித்யாசாகர்

பல்லவி:
தயா: என்ன பழக்கமிது.. சின்ன பிள்ளைப் போல!
முக: பித்து பிடிக்கிறதே! நீ சர்வே போட்டதால!

அநுபல்லவி:
மு.க: வம்பு பண்ணுற வம்பு பண்ணுற! நீ இப்பவே ரொம்ப ரொம்ப வம்பு பண்ணுற!

தயா: டிச்சு பண்ணுற நீ டிச்சு பண்ணுற! சன்ன தாக்கி தேவையில்லாம தப்பு பண்ணுற!

முக: அட என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ? உன்ன என்னென்னமோ பண்ணப் போறேன்! என்ன பண்ணுவ!


சரணம் 1:
முக: என்னுடைய ஆசை ஸ்டாலின வைக்க நினைக்க! உன்னுடைய ஆச அத தட்டிவிட நினைக்க! நம்முடைய பாசம் இத்தோட முடிக்க!

தயா: நானோ அங்க சும்மா ஒரமா கிடக்க! உம்மகனோ வந்து வம்பு பண்ணி கெடுக்க! மொத்தத்துல மருதையில் பாம் பல வெடிக்க!

முக: உங்கண்ணன பாத்து கேட்டும் கெஞ்சியும் நான் சொல்ல!

தயா: அவன் வயசு.. கோளாறு.. அவன் சர்வே எடுத்து தொலைக்க..

முக: நீங்க மூக்க நுழைக்க! நான் ஒட்ட அறுக்க! அட மொத்தத்துல தூக்கம்கெட்டு கண்கள்சிவக்க...

பல்லவி:
சீச்சி சீச்சீ...


சரணம் 2:
முக: நள்ளிரவு நேரம் பிடிச்சு போட்ட சீன! திரும்ப திரும்ப போட்டு ஆட்சிக்கு வந்த என்ன! கிளம்பிவிட்ட நீயும் என்னுயிரை தொலைக்க!

தயா: சீனு போட்டு ஆட்சிகொடுத்த சன்ன விட்ட! பாம் போட்டு சீனு விட்ட சன்ன பிடிச்ச! எங்கண்ணன் வருவானே அத்தனையும் கெடுக்க!

முக: அட எதுவும் இனி நடக்கும்! தெரிஞ்சு அடங்கி நீ நடக்க!

தயா: உங்க பெத்தபாசத்தில் நான் சகல பதவியும் துறக்க!

முக: நீ உன்ன பின்னேற்ற! நான் கனிய முன்னேற்ற! இப்போதைக்கு மக்களாட்சி நல்லா நடக்க!

பல்லவி:
சீச்சி சீச்சி!

மு.க: வம்பு பண்ணுற வம்பு பண்ணுற! நீ இப்பவே ரொம்ப ரொம்ப வம்பு பண்ணுற!

தயா: டிச்சு பண்ணுற நீ டிச்சு பண்ணுற! சன்ன தூக்கிவச்சு தேவையில்லாம தப்பு பண்ணுற!

*************************************

பயமறியா தன்மானச் சிங்கம், பாம்-அறியா அஞ்சாநெஞ்சன் பெனாத்தலாருக்கு ஸ்பெஷல் நன்னி!

டோனி ப்ளேர் நமக்குத் தரும் பாடங்கள்

வரும் ஜூன் - 27 அன்று பிரதமர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுக்கொள்ளப் போவதாக நேற்று பிரிட்டானியப் பிரதமர் டோனி ப்ளேர் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக சொல்லிவந்தாலும், அறிக்கை வந்தவுடன் பார்க்க, இந்தியனான எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர் என்ன லூசா? இருக்கிற ஐந்து பசங்களெல்லாம் வளர்ந்து பெரியாளாகவில்லை. ப்ரான்சில் திராட்சைத்தோட்டம் வாங்கிப்போடவில்லை. இது எல்லாம் மேலோட்டமாகத் தோன்றினாலும் அடிப்படையிலேயே புரியாத புதிராய்த் தெரிந்தது இந்த அறிவிப்பு. அதுவும் தன் வாரிசு என்று கோர்டன் பிரவுனை ஆதரிப்பதாகவும், ஆனால் கட்சியின் பொதுக்குழுவே அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்குமென்றும் அறிவித்திருக்கிறார்.

ப்ளேரின் ஆட்சி கவிழ்க்கப்படவில்லை. இம்பீச் செய்யப்படவில்லை. தேர்தலில் தோற்கடித்துத் துரத்தப்படவில்லை. தாமாகவே மனமுவந்து (இது சந்தேகமாயிருந்தாலும்) பதவி விலகுகிறார். இதைவிடவும் கலியுகத்தில், ஒரு இந்தியனுக்கு ஆச்சரியம் தரும் விஷயம் இருக்கிறதா என்ன? இருந்தால் ஆட்சிக்கட்டில், இல்லையேல் மரணக்கட்டில் என்ற 'பற்றற்ற' கொள்கையுடைய அரசியல்வாதிகளையே கண்டவர்கள் நாம்.

ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு பிறகு தேர்தலில் ஒருவர் போட்டியிடக்கூடாது என்று பெரும்பான்மையான ஜனநாயக நாடுகளைப் போல் சட்டமேற்றுவதில் என்ன பிரச்சனை? நிரந்தர முதல்வர் என்ற முட்டாள்தனமான கனவுதான் காரணமா? இருக்கிற ஐந்துகோடி பேரில் அவர் ஒருவரை விட்டால் திறமையான தலைவர் அடுத்த தலைமுறையில் கூட கிடைக்க மாட்டார் என்ற அவநம்பிக்கையா? நிரந்தரமாக பதவியெடுத்துக்கொள்ளும் ஆட்சிகளெல்லாம் அவை ஆரம்ப காலகட்டத்தில் எத்தகைய மக்களாட்சியாக இருந்தாலும் காலப்போக்கில் பதவிபோதையில் ஒரு கேவலமான மன்னராட்சி நிலைக்குத்தான் சூழ்நிலைகளால் தள்ளப்படுகின்றன. உகாண்டாவின் இடி அமீன் தொடங்கி இன்றைய ஜிம்பாப்வேயின் முகாபே வரைக்கும் முகத்தில் அறையும் உதாரணங்கள் கணக்கில் அடங்கா. அவ்வாறு ஒரு குடும்பத்திற்கோ ஒரு தனியாளுக்கோ மாற்று ஏற்படாதவகையில் அடாவடி அரசியல் செய்யத்தூண்டுவதற்கு காரணம் இந்த நிரந்தர முதல்வர் கனவும் அது தரும் போதையும் தான்.

தனிநபர் ஒழுக்கம் பற்றியெல்லாம் பொழுதைக்கழிப்பது வீண். ஆட்சியாளர்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்பு இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கக் கூட பொழுதில்லாமல் தேர்தல்நேரத்து வாக்குறுதிகளுக்காக வெக்கமில்லாமல் கண்ணைக் கட்டி வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு புத்திசொல்ல நான் யார்? ஒருவேளை நான் தமிழனில்லையோ? இல்லை மனநலக் காப்பகங்களில் இருக்கவேண்டியவனோ? மாற்றுக்கட்சிகளும் இல்லை, மாற்றுத்தலைவர்களும் இல்லை என்ற நொண்டிச்சாக்கு சொல்லிக்கொண்டோ, தெரியாத மோகினிக்கு தெரிந்த பிசாசே மேலென்று விதியை நொந்துகொண்டோ திரும்பவும் அதே ரவுடிகளுக்கும் ஊழல்பெருச்சாளிகளுக்கும் தொடர்ந்து வாக்களிக்கும் மக்கள் எக்கேடுதான் இன்னும் கெடவேண்டும்? தேர்தல் புறக்கணிப்பு? புரட்சி, மறுமலர்ச்சி என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் கட்சிகள் அனைத்தும் ஊழலில் ஊறியதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே. மக்கள் புரட்சியைக் கையிலெடுத்தால் ரஷ்யாவின் கதியா நமக்கு என்றெல்லாம் அசரவேண்டாம். ரஷ்யர்களின் வாழ்க்கை பல நிலைகளில் நம்மைவிட நன்றாகவே இருக்கின்றது. இதோ போன வாரம் துருக்கியில் நடக்கவில்லை மக்களின் புரட்சி? இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக நாடெங்கும் லட்சக்கணக்கில் ஆர்ப்பாட்டம் செய்து பாராளுமன்றமே சட்டத்தை திருத்தி அமைக்கவில்லை?

ச்வதர்ம பரிபாலனா என்னும் தர்ம கோட்பாட்டை அதன் அர்த்தமே திரியும் அளவுக்கு சுருக்கி தம் குடும்ப/உ.பி.சகோ குடும்ப பரிபாலனம் என்ரு அர்த்தம் கற்பித்து நாட்டைச் சுருட்டும் இவர்களுக்கு வேண்டுமென்றால் மட்டும் வெட்கமில்லாமல் பிரியாணிப்பொட்டலமும் / உற்சாக பானமும் வாங்கவாவது கட்சி மாநாட்டுக்கூட்டங்களில் லட்சக்கணக்கில் கூடும் தமிழர்கள் ஏன் தங்களுக்கென ஊழலற்ற ஆட்சி/அடிப்படைக் கல்வி/தொழிற் சார்ந்த முன்னேற்றம் போன்றவற்றிற்கு கூடுவதில்லை என்று நினைத்துப்பார்க்கவே நாறுகிறது. அந்த நாற்றத்திற்கு ஏசி ரூமில் சமூகசீர்த்திருத்தம் பேசும் நாமும் காரணம் என்பது நாற்றத்தைவிடவும் குமட்டுகிறது.

நம் மக்களிடையே பரவலான ஜோக் ஆட்டோ அனுப்புவார்கள் என்பது. எண்ணிப்பாருங்கள். இதைவிடவும் கேவலமாக ஜனநாயகம் நடத்தப்பட முடியுமா? எல்லா நாடுகளிலும் லஞ்சமும் உண்டு ஊழலும் உண்டு. ஆனால் நாட்டின் நலன் என்று வரும்போது அதுவே முக்கியத்துவம் பெறுகிறது அல்லது குறைந்தபட்சம் பயம் காரணமாகவாவது அத்தகைய தனிநபர் சுருட்டல்கள் குறைக்கப்படுகின்றன. இது ஏன்? இங்கே வெள்ளைக்காரன் தோல் பெரும்பாலும் வெள்ளையாகவே இருக்கிறது. ஏன் என்பதுதான் ஆச்சரியம். ஆப்ரிக்கா, ஆசியா, தென்னமெரிக்கா போன்ற கண்டங்களில் ஒருசில நாடுகள் தவிர்த்து பெரும்பாலும் இந்த தனிநபர்/ஆட்சியாளர்/தொழிலதிபர் என்று நேரத்திற்கு தகுந்தாற்போல நாட்டையும் ஆட்சியையும் நடத்தும் ஆட்சியாளர்களே அதிகம். அது ஏன்? வெள்ளையர்களின் குறுக்கீடா? அல்லது சுதந்திரம் பெற்றபின்னும், அதன் அர்த்தம் என்னவென்றே உணர மறுக்கும் மக்களின் விதியா?

வெறும் சினிமா நடிகைக்கு ஆயிரம்கோடி சொத்து எங்கேயிருந்து வந்தது? ப்ரூப் ரீடராக வாழ்க்கையைத் தொடங்கியவருக்கு அதைவிடவும் பெரிய அளவிலான சொத்துகள் எங்கேயிருந்து வந்தது? இவை வெறும் தமிழ்நாட்டின் அவலங்கள் தான். அகில இந்திய அளவில் இன்னும் மோசமான உதாரணங்கள் உண்டு.

மறுபடியும் ப்ளேருக்கே வருவோம். அவருக்கு நெருக்கடி இருந்தது உண்மைதான். அது ஈராக்கில் நடந்த யுத்தத்தினால். புஷ்ஷுடன் அவருக்கு இருந்த அத்தியந்த நட்பினால். கோர்டன் பிரவுன் கொஞ்ச நாட்களாக அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இவை மட்டும் அவரை பதவி விலகச் செய்தது என்று சொன்னால் சிரிக்கத்தான் வேண்டும். மூன்றாவது முறையும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் தாக்குப்பிடிக்க முடியாதா? ப்ளேருக்கு ஆட்டோ அனுப்பத்தெரியாதா? ஈராக் விஷயம் தவிர்த்து அவரின் சாதனைகள் பல. யோசித்துப்பார்த்தால் வட அயர்லாந்தின் புதிய அரசு, ஆப்ரிக்காவிற்கு அதிக நிதி என அவரின் வெளியுறவுத்துறை சாதனைகள் தவிர உள்நாட்டிலேயே பொருளாதாரம், சுகாதாரத்துறை போன்றவை சீரிய அளவில் வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றன. இப்போது ஏன் விலக வேண்டும்?

ஒரே விளக்கம் தான் தோன்றுகிறது. 'போதுமென்ற மனமே'. ப்ளேரின் கைகள் ஒன்றும் அவ்வளவு சுத்தமில்லை என்று பல சர்ச்சைகள் வந்துபோயிருந்தாலும் நம் நாட்டுடன் ஒப்பிட்டால் லாலு சிலுக்குவார்ப்பட்டியில் ஒரு வீடு வாங்கினார் என்றுதான் ஒப்பிட முடியும். ஒரு மிகச் செல்வாக்குவாய்ந்த/சக்திவாய்ந்த நாட்டின் தலைவராக இருப்பது எத்தனை கடினம் என்று எவருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. "but enough is enough" என்று சொல்வார்களே அதுபோல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் நாட்டின் தலைவராயிருந்தால், நாட்டு மக்களுக்கு தான் சேவகன் என்பது மறந்து நாடே தம் குடும்பச் சொத்து என்ற எண்ணம் வந்துவிடலாம். இதுவும் பல இடங்களில் திரும்பத் திரும்ப நிருபிக்கப்பட்டிருக்கிறது. "the sad part about history is everybody reads it but dont learn from it"

அவ்வளவு சக்திவாய்ந்த பதவியிலிருந்து ஒருவன் எவ்வித சீரியஸான threatகளும் இல்லாத சமயத்திலும் தன்னிச்சையாக வெளியேற முடிகிறதென்னால் அவனுக்கு தமிழனென்ற முறையில் ஆழ்ந்த அனுதாபத்தையும் அவனின் கையாலாகாத தனத்தை எள்ளியும் எதிர்ப்புகளை சமாளிக்கமுடியாத ஆண்மையற்றத்தனத்தை கிண்டலடித்தும் போர்வாளாய் பணியாற்ற மறுத்த சோம்பேறித்தனத்தை கண்டித்தும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

டோனி ப்ளேர் வாழ்க வளமுடன்! நாங்கள் உன்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம். கற்றுக்கொள்வோமா என்ற கேள்வி அவசியமற்றது, இப்போதைக்கு.

மற்றுமொரு வயித்தெரிச்சல் பிரான்சில் நடந்த தேர்தல். சார்க்கோஸியும் ராயலும் விவாதம் செய்ததில் தொடங்கி தேர்தல் நடந்த விதம் வரை எத்தனையோ இருக்கு நாம் கற்றுக்கொள்ள.

"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" - எம்.ஜி.ஆர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தருமிக்கு நன்றி).

---------------------------------
டிஸ்கி:
1. நான் திமுகவும் கிடையாது. அதிமுகவும் கிடையாது. பாஜகவும் கிடையாது. வி.காந்தும் கிடையாது. மொத்தத்தில் ஒருமுறைகூட ஓட்டே போட்டிராத தமிழன்.

2. இது ஏசி ரூமில் இருந்து எழுதியதுதான்.

3. ஏன் ஒரிசாவில் இல்லையா, குஜராத் எரியவில்லையா என்ற கேள்விகளெல்லாம் இங்கே அர்த்தமற்றதாகின்றது. எல்லா மாநிலங்களில் சேற்றை வாரியிறைத்துக்கொள்கிறார்கள் என்றால் நாமும் ஏன் செய்யவேண்டும்?

4. பிற மாநிலங்களைவிட திராவிட கட்சிகளின் ஆட்சியில் வளர்ச்சி நன்றாகவே இருக்கிறது என்று சொல்வோர் இருக்கலாம். நான் அந்த வாக்கியத்தில் in spite of என்று சேர்த்துக்கொள்ளச் சொல்கிறேன்.

5. ப்ளேர் செய்தது போல இது நம்மூரில் நடக்கும் காலமும் வருமா என்ற வயித்தெரிச்சலில் எழுதியது.

197. No Oil for You! - Russia vs Estonia

சைன்பெல்டோட சூப் நாஜி நினைவுக்கு வர்றாரா? அவர் குடுக்கற சூப்ப வாங்கிட்டு அடக்கமா போகணும். கேள்வி கேட்டாலோ வேற ஏதாவது தப்பு சொன்னாலோ சூப்ப திரும்ப பிடுங்கிட்டு "no Soup for you"னு சொல்லித்துரத்திடுவாரு.

கிட்டத்தட்ட அதே கதை நடக்குது. என்ன கொஞ்சம் பெரிய அளவுல. போன தடவை ரஷ்யா உக்ரைனோட விளையாடினப்போ வேடிக்கை பார்த்த இ.யூ இந்த தடவை கோதாவுல இறங்கியிருக்கு.

முன்கதைச்சுருக்கம்: வழக்கம்போல எஸ்டோனியால ஆரம்பிக்குது. எஸ்டோனியாங்கறது ஒரு குட்டி பால்டிக் நாடு. சோவியத் யூனியனோட பாதுகாப்பிலேர்ந்து வெளியேறி 2004ல ஐரோப்பிய கூட்டமைப்புல இணைஞ்சுது.

இப்ப எஸ்டோனியா காரங்க என்ன செஞ்சாங்கன்னா அவங்க தலைநகரான டாலின்ல இருக்குற ஒரு சோவியத் கால சிலைய எடுத்து வேற இடத்துல வப்போம்னாங்க. சாதா சிலையா இருந்தா ரஷ்யாவும் கண்டுக்காம இருந்திருக்கும். ஆனா இது என்ன சிலைன்னா இரண்டாம் உலகப்போர்ல சிவப்பு ராணுவம் பாஸிஸத்த ஜெயிச்சு வெற்றிபெற்றதுக்கான நினைவுச்சின்னம். சில சோவியத் ராணுவத்தினரோட உடல்களும் அங்க அடக்கம் செய்யப்பட்டிருக்கு அந்தச் சிலைய சுத்தி. அந்த உடல்களையெல்லாம் தோண்டி எடுத்து யாருயாருன்னு identify பண்ணி வேறொரு இடுகாட்டில புதைக்கப்போறோம்னு எஸ்டோனியா சொல்லிச்சு.

ரஷ்யா ரொம்ப பெருமைப்பட்டுக்கற விஷயம்னா இந்த இரண்டாம் உலகப்போர் வெற்றிதான். அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சேர்ந்து இழந்த ஆட்களவிட பலமடங்கு அதிகம் ரஷ்யர்கள் இறந்துபோயிருக்காங்க. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரமே நரகமா இருந்துச்சு. அப்புறமா இந்த சிவப்பு ராணுவம் சுதாரிச்சு அதிவீரத்தோட போராடி கிழக்கு ஐரோப்பாவுலேர்ந்து ஹிட்லரோட படைய விரட்டியடிச்சு முதல்ல பெர்லினப் பிடிச்சது வரைக்கும் வரலாறு. இந்தப் போர்ல பங்கெடுத்தவங்களுக்கு வருஷாவருஷம் அஞ்சலி செலுத்தி அதையே பெரிய விழாவாவும் கொண்டாடுறது ரஷ்ய வழக்கம். இப்படி தங்களோட வெற்றிக்கு, பாஸிஸத்தின் அழிவுக்கு சின்னமாக இருக்கும் சிலைய அகற்றக்கூடாதுன்னு எஸ்டோனியால மூணில் ஒரு பங்கு இருக்கற ரஷ்யக்குடியினர் குரலெழுப்பினாங்க. அதுக்கு எஸ்டோனியா நாட்டுக்காரங்க ஜெர்மனி காலனியா இருந்தோம், அப்புறம் சோவியத் காலனியா ஆனோம் இதுல பெருமைப்பட என்ன இருக்கு... எங்களை அம்பது வருஷம் அடிமையா வச்சிருந்த சோவியத்தின் சின்னம் வேணாம்னு சொல்ல ஆரமிச்சுட்டாங்க. ரஷ்யக்குடியினர் சேர்ந்து ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தி போலீஸோட சண்ட போட்டதுல ஒருத்தர் செத்தும் போயிட்டாரு. நூத்துக்கணக்கான ரஷ்யக்குடியினர் கைதுசெய்யப்பட்டாங்க. இது நடந்தது ஏப்ரல் 24.

இப்போ ரஷ்யாவோட கண்ல இது பட்டுருச்சு. அது எப்படி சோவியத் காலச் சின்னத்த, அதுவும் ரஷ்யர்களோட பெருமைக்கு சின்னமா இருக்குற ஒரு சிலைய இடமாத்தம் செய்வீங்க.. அதோடு கூட புதைக்கப்பட்ட உடல்களை திரும்பவும் தோண்டி எடுக்குறது ரொம்ப கீழ்த்தரமானதுன்னு அறிக்கைவிட ஆரமிச்சாங்க. சொல்லிப்பாத்தாங்க கேக்கலை. அரசியல் கலந்தா அப்புறம் சூடுக்கு பஞ்சமா? அமெரிக்கா வேற அது எஸ்டோனியாவோட சொந்த விவகாரம்னு சொல்ல ஆரமிச்சோன்ன ரஷ்ய அரசியல் கட்சிகள் சில nationalism த்த கையிலெடுத்தாங்க. மாஸ்கோவோட மேயர் லுஷ்கோவ அறிக்கைவிட்டாரு "ரஷ்யக்கடைகள்ல எஸ்டோனியப் பொருட்களை விற்கக்கூடாதுன்னு". Sedmoi Continent, Kopeika மாதிரி பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் செயின்களெல்லாம் கூட இதுல சேந்துக்க ஆரமிச்சாங்க. ஆனா இந்த மாதிரி புறக்கணிப்புகள்னால, க்யூபாவுக்கு எதிர்த்தாப்புல அமெரிக்கா செஞ்சா மாதிரி, ஒரு *யிரும் செய்யமுடியாதுன்னு புரிஞ்சு பழைய அஸ்திரத்த எடுக்க ஆரமிச்சுருச்சு ரஷ்யா.

அதான் வழக்கமான எண்ணெய் எரிவாயு அஸ்திரம். ரஷ்யாவோட மொத்த எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதியில இருபத்திஐந்து சதவிகிதம் எஸ்டோனியாவுக்கு ரயில் மூலமா போய் அங்கேர்ந்து எஸ்டோனியாவோட பங்குபோக மிச்சம் ஐரோப்பாவுக்கு போகுது. மே. 1 லிருந்து ரயில் கம்பெனி எஸ்டோனியா போற ரயில் பாதைய சீரமைக்க போறதா திடீர் அறிக்கைவிட்டு ரயில் போக்குவரத்த பலமடங்கு குறைச்சிருச்சு. இதுமூலமா எஸ்டோனியாவுக்கும், அதன்மூலமா ஐரோப்பாவுக்கும் வரவேண்டிய எரிவாயு வராம சிக்கல் ஏற்பட்டிருக்கு. இதுனால ஏற்றுமதி செய்கிற ரஷ்ய எண்ணெய், கருநிலக்கரி மற்றும் எரிவாயு கம்பெனிகள் ஐரோப்பாவுக்கு அனுப்ப உக்ரைனிய மற்றும் ரஷ்ய துறைமுகங்கள் வழியா அனுப்புவோம்னு சொல்லிருக்காங்க. ரயில்வே நிர்வாகத்தினர் இதுக்கு சுத்தமா அரசியல் சம்பந்தமேயில்லேன்னு அறிக்கைவிட்டாலும் நம்பறது கஷ்டமா இருக்கு.

இதுதவிர, நாஷி "Ours" அப்படின்னு சொல்லி ஒரு அமைப்பு. ரொம்ப nationalist ஆளுங்க. மாஸ்கோவுல எஸ்டோனியாவோட தூதரகத்துக்கு முன்னாடி கடந்த ஆறு நாட்களா கூடாரமே போட்டு "No To Fascists Estonia"னு கலாட்டா செய்ய ஆரமிச்சாங்க. இதுனால தூதரகத்து செயல்பாடுகள் பாதிக்கப்படுதுன்னு எஸ்டோனியா சொல்லியும் போலீஸ் அவங்களை கைது செய்யல. அதுனால தூதரக அலுவல்கள் தற்காலிகமா முடக்கப்படும்னு எஸ்டோனியா சொல்லிருச்சு. இதத்தவிர ரஷ்ய-எஸ்டோனிய பார்டர்லயும் இதே ஆளுங்க சேர்ந்து cross border trafficஐயும் தொல்லைப்படுத்தறத செய்திகள் வர ஆரமிச்சுருச்சு.

அதுனால எஸ்டோனியா தன் பக்கத்து நியாயத்த ரஷ்ய மக்களுக்கு சொல்லியாகணும்னு நினைச்சு நேத்திக்கு (02/05/07) எஸ்டோனியாவோட ரஷ்யத்தூதர் மரீனா கல்ஜூரன் ஒரு பிரபலமான நாளிதழோட அலுவலகத்துல பிரஸ் மீட் வச்சாங்க. அது நடந்துகிட்டிருக்கும்போது இந்த நாஷி ஆளுங்க உள்ள புகுந்து கலாட்டா செஞ்சு, தூதரோட பாதுகாப்பு அதிகாரிங்க pepper spray எல்லாம் பயன்படுத்தி தூதர கார்ல ஏத்த படாதபாடு பட்டுருக்காங்க. ஆனா தூதர் மேல எந்தக் காயமும் இல்லை. அவங்க காரைத் துரத்திகிட்டே கொஞ்ச தூரம் நாஷி ஆளுங்க ஓடிருக்காங்க.

நேத்திக்கே சாயந்திரமா எஸ்டோனிய தூதுவர பாத்துட்டு தூதரகத்துலேர்ந்து வெளியே வந்த ஸ்வீடிஷ் தூதுவரோட காரும் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கு. குழப்பத்துல எஸ்டோனியா தூதுவர்னு நினச்சு ரவுடிக்கும்பல் ரகளை செஞ்சிருச்சு. காரோட சைட் வ்யூ மிரர்கள் உடஞ்சி, ஸ்வீடிஷ் கொடி கிழிக்கப்பட்டு போலீஸ் வந்து காருக்குள்ள பாதுகாப்பா இருந்த தூதுவர சுத்தி கேரோ செஞ்சிகிட்டிருந்த நாஷி ஆட்கள கைதுசெய்ய பதினஞ்சு நிமிஷம் ஆயிருச்சு. இங்கேயும் தூதுவர்மேல கைகூட படல. இந்த ரெண்டு நிகழ்ச்சிகளிலும் போலீஸால கும்பல கைதுசெஞ்சு கேஸெல்லாம் போட முடியல. ஏன்னா ரஷ்ய கிரிமினல் விதிகளின் படி இந்த மாதிரி demonstrations நடத்த பொதுமக்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனா பாதிக்கப்பட்ட ஆளுக்கு அடியோ காயமோ பட்டாலேயொழிய ரகளை செஞ்சவங்களுக்கு வெறும் அபராதம் மட்டும்தான் விதிக்கமுடியும். அதையே செஞ்சு போலீஸும் விட்டிருச்சு. அதுக்கப்புறம் கலாட்ட செஞ்ச அமைப்போட செய்திக்குறிப்புகள்ல தவறா ஸ்வீடிஷ் தூதுவர் கேரோ செய்யப்பட்டதுக்கு மன்னிப்பு கேட்டிருக்காங்க.

ஸ்வீடீஷ் தூதுவர் நேரா ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கிட்டயே போய் முறையிட்டும் வேற ஒண்ணும் செய்ய முடியலை. இதுதவிர ஸ்வீடன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் ரஷ்ய தூதர கூப்பிட்டு கண்டனம் சொல்லிருக்கு. இதுஇப்படியிருக்க, எஸ்டோனிய அதிபர் Toomas Hendrik "try to remain civilized"னு ரஷ்யாவ பாத்து சொல்லிருக்காரு. இதுக்கப்புறமும் இ.யூ சும்மா இருக்கமுடியுமா? ரஷ்யாவுல இருக்கிற ஐரோப்பிய ஒன்றியத்த சேர்ந்த தூதுவர்களுக்கும் தூதரகங்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது வியன்னா கன்வென்ஷன்ல கையெழுத்து போட்டிருக்கிற ரஷ்யாவோட கடமைனு அறிக்கை விட்டிருச்சு. இது என்னன்ன எரியிற தீயில எண்ணெய ஊத்துறா மாதிரி. அவங்க அறிக்கைல எஸ்டோனியாவுக்குன்னு சொல்லலை. ஐரோப்பிய ஒன்றியத்த சேர்ந்தன்னு சொல்லி எஸ்டோனியா எங்காளு, நீ(=ரஷ்யா) வெளியில தனிமைல இருக்குற நாடுங்கறா மாதிரி சொன்னது இப்ப இங்க பிரச்சனையாப் போச்சு.

அமெரிக்கா வேற போலந்துல ஏவுகணைத்தளம் அமைக்கப்போறோம்னு சொல்லிகிட்டிருக்கு. அத ரொம்பத் தீவிரமா எதிர்க்குது ரஷ்யா. ஏன்னா ரஷ்யாவோட ஏவுகணைகள்தான் அதோட primary deterrent. வடகொரியாவுக்கும் ஈரானுக்கும் எதிராத்தான் இந்தத்தளம்னு அமெரிக்கா சொன்னாலும் பூடின் ஒத்துக்கல. ஏன்னா இந்த ஏவுகணைத்தளம் போலந்துல வந்துட்டா ரஷ்யாவோட strategic defense பல்லிளிக்க ஆரமிச்சுரும்.

இப்போ இந்த வெளியுறவுத்துறை பிரச்சனை வேற. பூடினுக்கு இன்னும் ஓராண்டே பதவி பாக்கி இருக்கற இந்த நேரத்துல அமெரிக்கா ஒருபக்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஒருபக்கம், இதுதவிர தனியா உள்நாட்டுல ஆங்காங்கே பெரிய அளவுல anti government protests.. எல்லாத்தையும் எப்படி சமாளிக்க போறார்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

-------------
எழுத ஒண்ணுமேயில்லாத நேரத்துல இந்தமாதிரி ஏதாவது வந்து அவலாயிடுது. அந்த வகையில எஸ்டோனியாவுக்கு ரொம்ப நன்றி. என்ன குரூரமான ஆளுன்னு வாயடைச்சு போயிடாதீங்க. இருநூறத் தொடறது ரொம்பவே கஷ்டம்பா...பட்டாதான் தெரியும். :))
------------
சுட்டீஸ்:
http://www.moscowtimes.ru/stories/2007/05/03/001.html
http://www.spiegel.de/international/europe/0,1518,480739,00.html
----------
UpDates on 04/05

இன்றைக்கு எஸ்டோனியாவின் அதிபர் அலுவலகம் அமெரிக்க உள்துறைச் செயலர் காண்டோலீஸா ரைஸ் இவ்விஷயத்தில் எஸ்டோனியாவை ஆதரிப்பதாக தொலைபேசியில் சொன்னதாக அறிவித்துள்ளது.

எஸ்டோனியாவின் கோரிக்கைக்கு இணங்க நாடோவும் ஐ.ஒன்றியமும் மிகக் கடுமையான முறையில் ரஷ்யாவை கண்டித்துள்ளன. ஐ.ஒன்றியம் WTOவில் ரஷ்யா சேர்வதற்கு இது இன்னுமொரு தடைக்கல் என்ற தொனியில் அறிக்கை விட்டுள்ளது. வரும் மே.18 ஐ.ஒ-ரஷ்ய மாநாடு சமாராவில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்டோனிய தூதர் இருவார விடுமுறையென தாய்நாட்டிற்கு சென்றுவிட்டார். நாஷி அமைப்பு ஆட்கள் எஸ்டோனிய தூதரகத்தின் முன் நடத்திவந்த ஆர்ப்பாட்டத்தை, தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப தூதர் வெளியேறிவிட்டதால், நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

 

வார்ப்புரு | தமிழாக்கம்