House of Sand and Fog

இந்தப் படத்தை இப்போதுதான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. 2003-ல் வெளிவந்து ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் என்று தெரிந்திருந்தும் ஏனோ இதுவரை பார்க்கவில்லை.

பொதுவாக படங்களைப் பொருத்தவரை ஒரு ஹீரோ/ஹீரோயின் மற்றும் வில்லன் distinct-ஆக இருப்பது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் எல்லோரும் நல்லவர்களே. முக்கியமான மூவர், வாழ்க்கையில் நன்றாக இருந்து இப்போது இரானிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து கஷ்டப்படும் பெஹ்ரானி(Ben Kingsley) கதாப்பாத்திரம் ஒரு புறமென்றால் அநியாயமாக County office செய்த தவறுக்காக தன் தந்தை அளித்த வீட்டை இழக்கும் காத்தி(Jeniffer Connelly). இவர்களுக்கு நடுவில் காத்தியின் நிலையை கண்டு முதலில் பரிதாபப்பட்டு, பின்னர் காதலனாக மாறி, காதலுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்போய் வேலையையே இழக்கும் போலீஸ் அதிகாரி லெஸ்டர் (Ron Eldard).

இம்மூவரில் யாருமே வில்லன்கள் அல்ல. சில சமயம் கெட்ட காரியங்கள் செய்தாலும், அது வாழ்வில் நடக்கக்கூடிய விஷயங்களாகவே, சிறிதும் சினிமாத்தனமில்லாமல் யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் Vadim Perelman. இதில் மிகவும் பரிதாபதுக்குரிய கதாபத்திரம்பெஹ்ரானியுடையது என்பது என் கருத்து. ஒரு காலத்தில் இரானில் Colonel-ஆக இருந்து, மிக வசதியுடன் வாழ்ந்து, அங்கு புரட்சி நடந்தபோது அமெரிக்காவிற்கு தப்பித்து வரும் பாத்திரம். நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன், வாழ்க்கையில் ஏழைகள் பணக்காரர்களாகலாம், ஆனால் பணம்படைத்தோர் ஏழையாவது சாவினும் கொடிதென்று. இதன் ஆழத்தை இப்படத்தைப் பார்த்தபின்னரே உணர்கிறேன்.
வசதியுடன் வாழ்ந்த பெஹ்ரானியால் அமெரிக்காவிற்கு வந்தும் தன் பழைய வாழ்வை மறக்கமுடியவில்லை. சாலைகள் இடும் பணியாளராகவும், பின்னர் ஒரு convenience store- clerk-ஆகவும் வாழ்ந்தாலும் தன் பழைய mercedes-ல் பவனி வருகிறார். வீட்டிற்கு செல்லும்முன் அழுக்கடைந்த துணிகளை மாற்றி பளபள சூட்டிற்கு மாறும் காட்சிகள் மிகவும் அற்புதம். அதேபோல், லெஸ்டர் வந்து மிரட்டும் போது, அதே பழைய மிடுக்குடன் பதிலளிக்கிறார். அதே மாதிரி கடைசி 15 நிமிடம் நிஜமாகவே கண்ணீர்த்துளிகளை வரவழைக்கும்.

பென் கிங்க்ஸ்லீயின் நடிப்புப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம். இவருக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றிப்போது வருத்தமாயிருக்கிறது. Sean Pennக்கு கிடைத்ததும் நியாயந்தான். அவரின் mystic river-ம் அருமையான படம். அப்பாவி உயிர்கள் அநியாயமாக பலியாவதுதான் அடிப்படை இருபடங்களிலும். பார்க்கவில்லையெனின் வாங்கிப் பாருங்கள்.

அரசு மருத்துவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

இன்றைய தேதியில் அரசியலைத் தொழிலாகக் கொண்டோரைத் தவிர மிகவும் சாடப்படும் வர்க்கம் மருத்துவர்கள் தான் என்று நினைக்கிறேன். எந்த ஒரு மருத்துவரையும் விட்டு வைப்பதில்லை. முதலிலேயே நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் எல்லாத்துறைகளைப் போல இத்துறையிலும் பெருச்சாளிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களைப் பற்றி பேசுவதில் சிறிதும் பிரயோசனமில்லை.

ஆனால் அத்தகைய சிறுபான்மையினரால் ஒட்டுமொத்த மருத்துவ வர்க்கமே அநியாயமாக கெட்ட பெயருக்குள்ளாகின்றது.முக்கியமாக அரசு மருத்துவர்களைப் பற்றி. முன்பே கூறியது போல், ஊழல்க்காரர்களைப் பற்றி பேசவில்லை. அரசு மருத்துவரென்றாலே அவர் அத்தகையவர் என்ற கருத்து நிலவுகின்றது. இதை நான் என் கண்ணால் பார்த்திருக்கின்றேன். மிகச்சமீபத்தில் தமிழகத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில் பார்வையாளனாய் (observer) இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மருத்துவத்துறையை சார்ந்தவனாயினும்,அயல்நாட்டில் படித்ததால் அங்கே சேரும்முன்னர் எனக்கும்கூட கொஞ்ச கெட்ட அபிப்பிராயம் இருந்தது..அதைத்தவிர இந்தியன், ரமணா பார்த்தது கூட காரணமாக இருக்கலாம்!

முதலில் இந்த எ.மு.சி பிரிவின் அமைப்பை பற்றி கூறிவிடுகிறேன். 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர், இரு மருத்துவர்கள், நான்கு பட்டதாரி மாணவர்கள். ஒரு குழு அறுவைச் சிகிச்சையும், ஒரு குழு வெளிநோயாளிகளையும் கவனித்துக் கொள்ளும். இதில் மூன்றாவது குழு மற்ற இரு குழுக்கள் பணி முடிந்தபின்னர், 24 மணி நேர அவசர சிகிச்சையை கவனித்துக்கொள்ளும். இது சுழற்சி முறையில் நடைபெற்று வரும்.

வெளிநோயாளிகள் பிரிவைப் பற்றி இப்போது. காலை 8-ல் இருந்து 8 30க்குள் இரு மருத்துவர்களும் வந்திடுவர். தலைமை மருத்துவர்களுக்கு அநேகமாக அலுவலக காரியங்களுக்கே நேரம் சரியாகப்போய்விடும். இந்த போர்ட், அந்த போர்ட் என்று சொல்லி அவர் வருவதற்கே 11 ஆகிவிடும். காலை 8 மணிக்கு முன்னர் நானே ஒரு நாளும் போனது கிடையாது. ஆனால் அப்போது இருக்கும் கூட்டம் சொல்லிமாளாது. ஒரு நாளைக்கு 200-300 என்பது சர்வ சாதாரணமாக நடக்கக்கூடியது. இதில் என்ன பெரிய விஷயம், தனியார் பொது மருத்துவர்கள் பார்ப்பதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பொது மருத்துவமல்ல இது. ஒரு நாளைக்கு 150 வெளிநோயாளிகளைப் பார்க்கும் நிபுணர்களை அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறெங்கும் காணமுடியாது. அதிகபட்சம் 50. அதுவே மிக அதிகம். இதில் குழுவிற்கு வரும் கூட்டத்தில் அட்மிட் செய்யவேண்டியோர் குறைந்தபட்சம் 20 என்று வைத்துக்கொள்வோம். இந்நோயாளிகள் டிஸ்சார்ஜ்- ஆகும் வரை இக்குழுவே கவனித்துக் கொள்ளும்.

இப்போது அறுவைச் சிகிச்சை பற்றி. நான் பார்த்த வரையில் காலை 745-க்குள் பட்டதாரி மாணவர்கள் வந்து நோயாளிகளை தயார்ப்படுத்துவதில் ஈடுபடுவர். 830-9பதுக்குள் மற்ற இரு மருத்துவர்கள் அவர்களின் முந்தைய நாளின் அட்டவணையின்படி 24-மணி நேரச் சிகிச்சைப் பிரிவிலிருந்தோ வீட்டிலிருந்தோ வந்துவிடுவர். வாரத்தில் பாதி நாட்கள் அங்கு தான் காலைச் சிற்றுண்டி அவர்களுக்கு. தலைமை மருத்துவர்களும் வந்திடுவர். ஓரு நாளில் surgery-யின் தன்மையை பொறுத்து 3-4 வரை செய்ய முடியும். அதுவும் எ.மு.சி அறுவை சிகிச்சைகள் மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது அதிக physical exertion உண்டாக்கக் கூடியவை. (பெரும்பாலும் சுத்தியலும் கையுமாய் அலைவதால் தான் எ.மு. மருத்துவர்களை 'carpenters' என்று மற்ற மருத்துவர்கள் கிண்டலடிப்பர்.) இந்நிலையில் ஒருநாளில் அதிகபட்சமாக 7 நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யமுடியும்.

இப்போது முந்தைய பத்தியைப் பார்த்தீர்களானால் அதில் ஒரு நாளைக்கு 20 நோயாளிகள் அட்மிட் செய்யப்படுகின்றனர். ஆனால் அடுத்த நாள் அறுவை சிகிச்சை செய்யமுடிவதோ 7 பேருக்கு மட்டுந்தான். மிச்சம் 14 முடிக்கவே இன்னும் இரு அறுவைச் சிகிச்சை நாட்கள்
தேவைப்படும். ஆனால் அவ்விரு நாட்களுக்குள் அட்மிட் ஆகியும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கமுடியாமல் மேலும் தள்ளிப்போடப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40! உயிருக்கே ஆபத்து என்ற நிலை இருந்தாலேயொழிய seniority முறையில் தான் நடக்கும். இது ஒரு குழுவிற்கு மட்டும். மற்ற இரு குழுக்களுக்கும் இதே நிலைதான்.

சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கமுடியவில்லையெனின் நோயாளியின் நிரந்தர disability-களும் இன்னபிற complications-um வர வாய்ப்புகள் மிக மிக அதிகம். அப்படிப்பட்ட நிலையில், சிகிச்சையால் முழுகுணமாகாமல் போகலாம். இப்படி ஆவதில் மருத்துவர்களைக் குறை கூற முடியுமா என்று சிந்தித்து பாருங்கள்.

நான் இதுவரை சொன்னது எல்லாம், எவ்வித தங்குதடையின்றி இந்த சிகிச்சை மையம் இயந்திரம் போல் செயல்பட்டால். எ.மு. சிகிச்சைப் பிரிவின் மருத்துவர்கள் அடிதடி, சாலைவிபத்துக்கள் போன்ற MLC(medico-legal cases) வழக்குகள் போன்றவற்றிற்கு சாட்சி சொல்ல போகவேண்டும். undergraduate மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு பாடம் மற்றும் லெக்சர்கள் எடுக்கவேண்டும். அதைத்தவிர அவர்கள் குடும்ப சூழ்நிலைகள். அடுத்தது bureaucracy. சில நோயாளிகளுக்கு அவ்வளவு அவசரம் இல்லையாயினும் அரசியல் பின்னணியோடு வருவோர் ஏராளம். அவர்களுக்கு முதலில் சிகிச்சை அளியுங்கள் என்று dean தன் கைப்பட எழுதிய கடிதங்களை நான் அங்கு இருந்த குறைந்தகாலத்திலேயே ஏராளமாக பார்த்திருக்கிறேன்.

இவைத்தவிர அறுவைச்சிகிச்சைக்கான உபகரணங்கள் பழைமையானதாகவும், பல நேரம் வேலையே செய்யாதாகவும் இருக்கும். நம்பினால் நம்புங்கள். மின்சாரம் இல்லாமல் unipolar hemiarthroplasty செய்யப்பட்டு பார்த்திருக்கிறேன். இவ்வகை சிகிச்சை இப்போது மேல்நாடுகளில் செய்யப்படுவதில்லை. அதற்கு பதில் bipolar வந்துவிட்டது. ஆனால் அதை செய்வதற்கான உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் கிடையாது. அதே போல் ஒருமுறை open செய்த பின்னர் மின்சாரம் கட் ஆனதால் bleeders-ஐ கட்டுப்படுத்த மருத்துவர்கள் பட்டபாடு பார்த்தால் தான் தெரியும். நான் டார்ச் லைட் பிடிக்க, மற்ற மருத்துவர்கள் லிகேட் பண்ணுவதற்குள் திண்டாட்டமாகிவிட்டது. பாதி நாட்கள் குளிர்சாதன வசதி இருக்காது. கையுறைகளை autoclave முறையில் recycle செய்வதையும் இங்குதான் பார்த்தேன். எ.மு அறுவை சிகிச்சை தியேட்டர்களில் check X-Ray எடுக்க வசதி கிடையாது. இதெல்லாம் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரிவதில்லை.

அதே போல் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மருந்துசீட்டுகளை கொஞ்சம் கவனித்து பாருங்கள். இந்த துறையை பொறுத்தவரை இருப்பது 6 மருந்துகள் தான். அதில் ஒரு பாரசிட்டமால், டைக்லோபினாக், பி காம்ப்ளெக்ஸ், அமாக்ஸிசிலின் இன்னும் எதொ ரெண்டு இருக்கும். ஞாபகமில்லை. எந்த condition-க்கும் இதுதான் available மாத்திரைகள். புதிய தலைமுறை மருந்துகள் எவ்வளவோ வந்தபின்னும், இந்த மருந்துகள் பயனில்லை என்று கூறவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட conditions- களுக்குத்தான் பயன்படுத்த முடியும். மருந்துகளை நிர்ணயிப்பது இந்த மருத்துவர்கள் அல்ல. அதற்கென்று ஒரு மாநில குழு இருக்கிறது. அது என்ன செய்கின்றது என்று எனக்கு விளங்கவில்லை.

நல்ல மருத்துவர்கள் பலர் இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. கைகட்டி நின்று கொண்டு, இருக்கின்றவற்றை வைத்துக்கொண்டு தங்களால் இயன்றவரை சிறப்பாக செய்யமுயன்றும், பலனின்றி அந்நோயாளிகளிடமிருந்தே தாங்கள் செய்யாத தவறுகளுக்காக வசவும் வாங்கிக்கொண்டு இருந்து வருகின்றனர். இது தமிழ்நாடு முழுக்கவும் முக்கால்வாசி அரசு மருத்துவர்களின் நிலை என்று நான் நினைக்கிறேன். இதையெல்லாம் விட கொடுமை நவீன உபகரணங்கள் கிடங்கில் கிடந்தாலும், திறப்பு விழா நடத்த 5-வது கூட பாஸ் பண்ணாத ஒரு வட்டத்திற்கோ மாவட்டத்திற்கோ காத்துகிடக்க வேண்டிய அவலநிலையே நம்நாட்டில் இருக்கிறது. யாரை குற்றஞ்சொல்ல?

இப்படத்தில் இருப்பது என்னவென்று யூகியுங்கள் பார்ப்போம் :)

hue மட்டும் மாத்தியிருக்கேன்.

இது என்ன?? - Image hosted by Photobucket.com

சரியாகச் சொல்வோர்க்கு ஆயிர பொற்காசுகள் தரும் நிலைமைல இல்ல.. ஆனா ஒரு "ஓ" போடலாம்!

 

வார்ப்புரு | தமிழாக்கம்