ஊர்பொறுக்கி பலநாளாகிவிட்டபடியால் எங்காவது ஒரு குட்டி பிக்னிக் போவோமென்று நினைத்திருந்த நேரத்தில் பீட்டரின் கோர்ட்டிலிருந்து சம்மன்ஸ் வந்திருப்பதாக நண்பர் சொன்னார். என்ன கோர்ட், எதுக்கு சம்மன் அப்படினு ஒரு பக்கம் இருந்தாலும், போகாமல் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஞாயிறன்று கிளம்பினோம்.
சபர்பன் ரயிலில் 40 நிமிடப் பயணம். அங்கே எல்லாமே டூரிஸ்ட் ரேட்டில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்த படியால், இங்கேயே மூட்டை முடிச்சு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் (அதாவது ரொட்டி, சீஸ், சாலட் இன்னபிற) கட்டிக்கொண்டு சென்றோம்.
ஊரின் பெயர் Peterhof. டச்சு மொழியில் பீட்டரின் கோர்ட் (court) என்று அர்த்தம். ரஷ்யாவின் வெர்ஸாய் என்றும் அழைக்கப்படும் ஊர் இது. சுமார் நூற்றைம்பது நீரூற்றுகளும் (fountains) நான்கு தொடரூற்றுகளும் (Cascades) என அமர்க்களப்படுத்தும் இவ்வூரின் அரண்மனைகள் 'தண்ணி வச்சு காட்டும் வித்தைக்கு' நிகராக வேறொன்றை பூலோகத்தில் காணவியலாது என்று பில்டப் நிறையவே கொடுத்திருந்தார்கள்.
ரயில் நிலையத்தில் இறங்கினால் பேருந்துகள் அனைத்திலும் fountains என்று அடைமொழியில் எழுதிவைத்திருக்கிறார்கள். பத்துநிமிடத்தில் ராட்சத வாயிற்கதவுகளின் அருகில் எங்களை இறக்கிவிட்டார்கள். கடலை, சிப்ஸ், பாப்கார்ன் அதோடு வெகுநாளைக்குப் பிறகு பஞ்சுமிட்டாயும் (அநியாயம் என்னவென்றால் ஒரு மிட்டாய் 1 யூரோ! எனக்கு நம்மூர் எக்ஸிபிஷனும் பீச்சும் நினைவுக்கு வந்து தொலைத்தது) என தயாராய் வைத்திருந்த வஸ்துக்களோடு அரண்மனை காம்ப்ளெக்ஸினுள் நுழைந்தவுடன் வாயைப்பிளந்தபடி எடுத்த படம் இது...
நெப்ட்யூனைத்தாண்டினால் வந்தது Oak Fountain.
இந்த அப்பர் தோட்டம் ஜுஜுபி என்பது போலவும் அரண்மனைக்கு பின்னாலிருக்கும் லோயர் தோட்டம் தான் சுந்தரமானது என்றும் கூகிளாண்டவர் சூடமடித்து சத்தியம் செய்திருந்ததால் அதனை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.
எல்லாருக்கும் ஏற்படும் வலமா இடமா பிரச்சனையில் அதன் அரசியல்களை விலக்கி - அப்போதைக்கு அரண்மனைக்கு வலது பக்கமே செல்வது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.
திரும்பிய திசை அப்படியொன்றும் மோசமானதில்லை என்று ஆறுதலளிப்பது போல வரவேற்றது Fountain of the Square Pool.
இதைத்தாண்டினால் வலதுசாரி என்பது எப்போதுமே கரடுமுரடானதல்ல என்பதாக அரசியல் பேசும் பாதை
கீழெயுள்ள படத்தில் அரண்மனைக்கு மேலே இருப்பது Upper Gardens-ம் நாம் இதுவரை பார்த்த நீரூற்றுகளும். கீழே இருப்பது தான் Lower Gardens. அதைப்பற்றி அடுத்த பகுதியில்...
பிகு: கடைசி படம் மட்டும் வலையில் சுட்டது
(தொடரும்)