173. How Big is Your P*nis?

இதைப் படித்தவுடன்:

1) பொதுவில் கேட்க்கக்கூடாத கேள்வியைக் கேட்கிறான் நாகரிகமற்றவன். இந்தப்பதிவை தொடர்ந்து படித்துத்தொலைப்பதா? வேண்டாமா?

2) ஏதாவது Kinsey/Freud வகையறா உளவியல் ப்ளாக்கிற்கு வந்துவிட்டோமா?

3) ஏதாவது பம்ப், மூலிகைக் களிம்பு விற்கிற தளமாக இருக்குமோ?

4) இருப்பதைவிட பெரிய எண்ணாக சொன்னால்தான் என்ன? இல்லை உண்மையான பதிலைச் சொல்லித்தான் பார்ப்போமா?

என்றெல்லாம் கிடுகிடுவென்று மனதில் எண்ணங்கள் ஓட ஆரம்பித்திருக்குமே. அதற்கெல்லாம் ஒரு sudden brake போட்டுவிட்டு பதிவின் விஷயத்திற்கு வருகிறேன்.

1) அது எவ்வளவு 'நளினமாக' இருக்கிறதோ அவ்வளவு மதிப்பு அதிகம். சமூகத்தில் மற்ற ஆண்களிடத்தில் கண்டிப்பாக உண்டு. பல ஆண்கள் தங்களுக்கு அவ்வாறு வாய்த்திருக்ககூடாதா என்று தினம்தினம் ஏங்குவார்கள். ஆனால் இவ்விஷயத்தில் பெண்கள் 'எக்ஸ்ட்ரா'வாக மதிப்பார்களா என்பது காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் பட்டிமன்றத்தலைப்பு. அதனால் அதை விட்டுவிடுவோம்.

2) பெரும்பாலான ஆண்கள் பலதடவை பொதுவில் expose செய்கிறார்கள். பெண்களைக் கவர மட்டுமில்லாமல் தேவையற்ற போட்டிகளை சமாளிக்கவும்.

3) பொழுதுபோகாமல், கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல், அதனுடன் விளையாடுவோர் சதவிகிதம் பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் மிக அதிகம். இரண்டு மூன்று மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. பெண்கள் வெளியிலேயே காட்ட மாட்டனர். தேவைப்பட்டாலேயொழிய.

4) தேவையே இல்லாமல் அமுக்கிப்பார்ப்பது, வேலை செய்கிறதா என்று அடிக்கடி எடுத்துப்பார்த்து சோதனை செய்வது..

சரி வேண்டாம் ரொம்ப மஞ்சப்பத்திரிகை வாடை வீசுவது போல இருப்பதால் இப்போது நிஜமாகவே விஷயத்திற்கு வருகிறேன். நீண்ட நாட்களுக்கு முன் இதை ஒரு தளத்தில் படித்துவிட்டு மறந்துபோயிருந்தேன். இப்போது ஏனோ நினைவுக்கு வந்தது.

ஆராய்ச்சியின் படி மேற்கூறிய சகலமும் செய்வதில் ஆண்களே முதலிடம் செல்போன் விஷயத்தில். இனிமேல் பொது இடங்களில் சுற்றுமுற்றும் கொஞ்சம் கூர்ந்து கவனித்து பாருங்கள். ஒருவர் போன் மணியடித்தால் அனைவரும் எடுத்துச் பார்த்துக்கொள்வது. அதிலும் அவரதை விட நம்முடையது விலையுயர்ந்த மாடலாக இருந்தால் அப்போதுதான் நினைவுக்கு வந்தது போல எஸ். எம். எஸ் அடிக்கத் தொடங்குவது.

எடுத்து எடுத்து பாட்டரி சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது. இல்லையென்றால் குருட்டாம்போக்காக சில நம்பர்களை அமுக்கி டயல் செய்து பிஸியாக இருப்பதாக காட்டிக்கொள்வது.

ஓட்டல்களைப் போன்ற இடங்களில் தேவையேயில்லாமல் டேபிளில் எடுத்து வைத்திருப்பது. அதை சுற்றி சுற்றி விளையாடுவது. இடுப்பில் சொருகிக்கொள்வது. எடுப்பது.

இப்படி எத்தனை காரியங்கள் செய்ய முடிகிறது செல்போன்களைக் கொண்டு ஆண்களால். முக்கால்வாசி நேரம் அதில் அழைப்பே வராது. அழைக்கவும் ஆளிருக்க மாட்டனர். பெரும்பாலோர் செல் போன் வாங்குவதில், பொதுவில் அம்மாடலை எடுத்தால் எத்தனை பேரிடம் இருக்கும், எடுத்தால் என்ன மரியாதை கிடைக்கும் என்பதெல்லாம் பார்த்துதான் விலையுயர்ந்த மாடல்களை வாங்குகின்றனர். வெளிப்படையாக இல்லாவிட்டாலும், உளவியல் ரீதியாகவாவது.

பெண்கள் பெரும்பாலும் ஹாண்ட் பாக்கினுள்ளேயே வைத்திருப்பர். தேவைப்பட்டாலேயொழிய அதைவைத்து பொதுவில் விளையாட்டு காட்ட மாட்டார்கள்.

அதுவும் ஒவ்வொரு முறையும் வேட்டையாடு விளையாடு ரிங்டோனாக 'பார்த்த முதல் நாளாய்' கேட்டுக்கேட்டு எனக்கு அலுத்துவிட்டது. சன் ம்யூஸிக் நிறுத்தினாலும் இவர்கள் நிறுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஆக மொத்தம், பெரும்பாலான ஆண்கள் செல் போன் வாங்குவதே தங்கள் ஆண்மையின் பிரதிபலிப்பின் வடிவாகக் கொண்டு பெண்களைக் கவரத்தான் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தான் வசதி வாய்ந்தவன் என்று காட்ட அல்லவாம். மாறாக தான் எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளப்படவேண்டிய/கூடிய ஒரு பொறுப்புள்ள, powerful முக்கியஸ்தன் என்பதைச் சுட்டத்தானாம்.

சுட்டி இங்கே.

ஏன் 'அதனுடன்' சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது என்று சந்தேகமாகவா இருக்கிறது??? பார்க்க இங்கே. இருபக்க நியாயங்களும் இருக்கின்றன இங்கே.

---------------------------------
பதிவின் தலைப்பிலுள்ள கேள்விக்கு வந்துட்டோமா?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?


(அய்யா சாமி, செல்போன் மாடலச் சொன்னேன்பா. அதப்பத்தி மட்டும் சொல்லுங்க. என் பதிவ புகழ்பெற்ற 'டாக்டர் பிரகாஷ்' பதிவா ஆக்கிடாதீங்க!! அவரே வேற வெளியில வர்றாராம். :)))

172. கோவைப்பக்கம் ஒரு நாள்

1. திருச்சி ரோடில் மேம்பாலம் கட்டுவதாகச் சொல்லி சூலூர் தாண்டியவுடன் போக்குவரத்தைத் திருப்பிவிட்டு டார்ச்சர் கொடுக்கிறார்கள். ஒண்டிப்புதூர் குறுக்குத்தெருக்களையெல்லாம் காணும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்திருக்கிறது நெடுஞ்சாலைத்துறை. பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களெல்லாம் இன்னும் சில கிலோமீட்டர் ஊரைச் சுற்றி வரவேண்டுமென்று நண்பர் கூறினார். மேம்பாலம் கட்டி இருபுறமும் ரோடெல்லாம் போட்டு, தண்டவாளத்தின் மேல் போடுவார்களே அந்தப் பகுதியை மட்டும் விட்டுவைத்திருப்பதாக கேள்வி. அதற்கு என்று விடியப்போகிறதோ, 2008 என்று ட்ரைவர் தகவல் சொன்னார், ஆண்டவனுக்கே வெளிச்சம்.

2. இராஜஸ்தானி சங்க் திருமண மண்டபம் செல்ல வேண்டியிருந்தது. வித்தியாசமான செட்-அப். கீழே டைனிங். மேலே மண்டபம். இனிமேல் ஓசிச் சாப்பாடு சாப்பிட சம்பிரதாயத்துக்குக்கூட மணமக்களை வாழ்த்தவேண்டாம் என்று தோன்றியது.

3. ரொம்ப நாள் கழித்து ரேஸ் கோர்ஸ் ரோடு, கே.ஜி தியேட்டர், ஹாஸ்பிடல் (!) எல்லாம் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. பழைய ஞாபகங்கள் நிறைய. பள்ளி விடுமுறை நாட்களில் சித்தப்பாவின் ஹீரோ ஹோண்டாவில் ஏறி வேலை மெனக்கெட்டு சேரன் டவர்ஸ் போக வேண்டுமென்று அடம்பிடித்து (விண்டோ ஷாப்பிங் செய்யக்கூட ஒன்றுமில்லை அங்கே அப்போது), பைக் முன்னாடி அமர்ந்தபடி நேரு ஸ்டேடியத்தை ஒரு ரவுண்ட், அவினாசி ரோட்டில் நார்த் கோயம்பத்தூருக்கு பிரியும் மேம்பால ரவுண்டானா ஏறி இறங்கி, கேஜி ஹாஸ்பிடல் பழமுதிர்ச்சோலையில் ஜூஸோ இல்லை கௌரிசங்கரில் டிபனோ என இனிதே கழிந்தது தினமென்று சுபம் போட்ட நாட்கள். லைப் தான் எத்தனை சிம்பிளாக இருந்திருக்கிறது என்று நினைத்து எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. "குயிலப் புடிச்சு கூண்டிலடச்சு கூவச்சொல்லுகிற உலகம்" என்று ஏன் வைரமுத்து உருகி உருகி எழுதினார் என்று ஓரளவுக்கு புரியவும் செய்கிறது.

4. அவினாசி ரோடு மேம்பால ரவுண்டானா இப்போது ரொம்ப மாறிவிட்டது. பெரிய நகரங்களுக்கு மத்தியில் இங்கே கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டது வழக்கமாக தென்படும் பிரம்மாண்ட சென்னை சில்க்ஸ், போத்தீஸ் போன்றவற்றிற்காக சிரித்து கிளுகிளுப்பூட்டும் அழகான ராட்சசிகள் ஆப்செண்ட். அதற்கு மாறாக ஜான் ப்ளேயர்ஸ், லூயி பிலிப், வான் ஹூசன், ஆலென் சோலி என்று முறைத்து முறைத்துப் பார்க்கும் அரவிந்தசாமி அண்ணாக்கள் மயம். கோவையில் மட்டும் ஏனிப்படி என்று விளங்கவில்லை.

5. இருந்த கொஞ்ச நேரத்தில் பார்த்த சன் நியுஸ். சென்னையில் மழையால் விளைந்த சேதத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் வேட்டியை மடித்துக்கட்டியபடி சேற்றில் இறங்கிப் பார்வையிட்டார். அடுத்து, சென்னையின் புதுமேயர் பதவியேற்பு நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் என்கிற முறையில் திரு. ஸ்டாலின் உடனிருக்கையில் வெள்ளிச் செங்கோலுடன் பதவியேற்கிறார்.

வழமையாய் நடந்த இவற்றுள் எனக்கு உறுத்தியது முக்கியமான ஒன்று. இந்த இரு நிகழ்ச்சிகள் என்றில்லை. கும்மிடிப்பூண்டி ஒன்றிய நாலாவது வார்ட் தி.மு.க பிரசிடெண்ட் நன்றி அறிவிப்புக் கூட்டமானாலும் சரி, புதுக்கோட்டை மாவட்ட மனையேறிப்பட்டியில் தி.மு.க தொண்டரின் வீட்டில் எருமை மாடு கன்று போட்டாலும் சரி...உடனே வெளிர் நீலம் அல்லது வெளிர் பிங்க் சட்டை, கறுப்பு பேண்ட் போட்டுக்கொண்டு நல்ல கருகருமீசையுடன் கண்ணாடியணிந்த ஒரு இளைஞர் பளிச்சென்று ஆஜராகி டி.வியில் நிற்கிறார். அவர் நமது மதிப்பிற்குரிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் (இணை கூட இல்லை, மத்திய) திரு. தயாநிதி மாறன். இவர் என்ன இந்தியா முழுவதற்குமான மத்திய அமைச்சரா இல்லை தமிழக தி.மு.க-விற்கு பி.ஆர்.ஓ-வா என்று சந்தேகமாக இருக்கிறது. மத்திய அமைச்சருக்கு இதற்கெல்லாம் எங்கேயிருந்து நேரம் கிடைக்கிறது என்று பொதுவில் நேர மேலாண்மை வகுப்புகள் நடத்தினால் அனைவரும் இந்த ஆம்னிப்ரெஸென்ஸ் டெக்னிக்கை கற்றுக்கொண்டு பயன்பெறலாம்.

6. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. அரங்கநாத சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள திருத்தலம். நான் கூட இரங்கநாதர் என்றவுடன் பள்ளிகொண்ட ரங்கநாதரை எதிர்பார்த்தேன். இவர் வித்தியாசமாக இருக்கிறார்.

7. காரமடையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது "தென் திருப்பதி". அசர வேண்டாம். கே.ஜி.டெனிம் கார்ப்பரேஷன் (KG Denim) தெரியும்தானே? trigger ஜீன்ஸ் காரர்களேதான். அவர்களின் மில் வளாகத்தினுள் கட்டப்பட்ட தனியார் கோயில். இதற்கு நிறைய பில்டப். செல்போன், காமிராக்களை வாயிலிலேயே பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள். வருகிறவர்கள் அனைவரும் கே.ஜி.டெனிமின் பங்காளியோ விருந்தாளியோ என்று சொல்லி ஒரு லெட்ஜரில் கையெழுத்திட்ட பின்னரே செல்லவேண்டும். உண்டியல் கூட கிடையாது. இந்துசமய அறநிலையத்துறை பலரது சொப்பனங்களில் சிம்மமாய் வருவதனாலோ என்னவோ.

சென்ற வருடம் சில நாட்களுக்கு இந்தக் கோவிலில் உள்ள பெருமாள் கண்ணைத் திறந்து பார்க்கிறார் என்று அதகளப்பட்டது. அதனால் பிரபலமும் அடைந்துவிட்டது. பிரபலமாகும் வரை கருணையோடு கண்திறந்து பார்த்த நாராயணர், அப்புறம் ஏன் பார்க்கவில்லை என்று உடனே கேட்க நினைக்கும் conspiracy theoristகள் நேராக கோயில் நிர்வாகத்திற்கே எழுதிக்கேட்டுக்கொள்ளலாம்.

மற்றபடி ஒரு சிறு மேட்டில் வெங்கடாஜலபதி சந்நிதி, கருடாழ்வார் சந்நிதி எனத் தொடங்கி அத்தூணூண்டு இடத்தில் திருமலைக்கோவில் போலவே அமைத்து முத்தாய்ப்பாக விமான வெங்கடேசரையும் அசலைப் போலவே செய்து வைத்திருக்கிறார்கள். நித்தியபடி அலங்காரம் திருமலைப்பெருமானைப் போலவே. கூட வந்த ஓட்டுநர் திருப்பதி பெருமாளுக்கு நேர்ந்து கொண்டு அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வேண்டுதலை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னார். ஐந்து வருடத்திற்கு முன்னர் தோன்றிய தனியார் வெங்கடேசன் திடீரென ஒப்பில்லா அப்பனையும், குணசீலனையும் ஓவர்டேக் செய்தது எப்படி என்று எனக்கு குழப்பம் வந்தது.

பெருமாளைச் சேவித்துவிட்டு வருவோர் அன்னதான டொனேஷன் கவுண்டர், பிரசாத விற்பனை கவுண்டர் என எல்லாவற்றையும் எம்பித்தாவிவிட்டு இலவச பிரசாத கவுண்டருக்கு செல்ல வேண்டும். நான் போன அன்று இனிப்பு மட்டாக ஜோரான சர்க்கரைப்பொங்கலும், மிளகு குழம்பா சாம்பார் சாதமா என மினி பட்டிமன்றம் நடத்த ஏதுவான ஒரு சாதமும் பிரசாதம். தோட்டத்திலேயே அழகாய் பாறைகளை இருக்கைகளாய் வைத்திருக்கிறார்கள். குடிநீர் வீணாக்காதீர் என்று எழுதிவைத்தவர்கள், பிரசாதம் சாப்பிட்டோர் கை கழுவ நீரை வைக்க மறந்துவிட்டார்கள். ஆனால், இருக்கும் தோட்டத்தில் அருமையான மர நிழலில் நன்றாக நிஷ்டை கைகூடுகிறது. ஏன் இப்படி குற்றமாக கண்டுபிடிக்கிறேன் என்று நோக வேண்டாம். திருப்பதியைப் போன்ற பெருமை வாய்ந்தது என்றெல்லாம் பில்டப் கொடுத்து அழைத்துச் சென்ற டிரைவர் மேலுள்ள வெறுப்பினாலும் இருக்கலாம். பக்திக்காக என்றில்லாமல், curiosityக்காக சென்று வரலாம்.

8. அடுத்து காடையூர். காங்கேயத்திலிருந்து ஆறு கி.மீட்டரில் உள்ளது. விசேடமான கோயில் என்று சொல்லி போனதுதான் இங்கேயும். காடையீஸ்வரர், பங்கயற்செல்வி, சுப்ரமண்யர், லக்ஷ்மிநாராயணர், அனுமார், வெள்ளையம்மன் என பலர். என்ன விசேஷம் என்று சொல்ல ஆளில்லை. ஆனால் டிரைவர் புண்ணியவான் சொன்ன ஸ்தல புராணம் இதோ: சிவகுமாருக்கு இவர்தான் குலதெய்வம். சென்ற வாரம் தான் சூர்யாவும் ஜோவும் சிவகுமார் குடும்பத்தினருடன் ரகசியமாய் வந்து சென்றிருக்கின்றனர். கூட்டத்திற்கு பயந்து பொங்கல் எல்லாம் வைக்காமல் சிம்பிளாக கும்பிட்டு கிளம்பிவிட்டனர் என்றார்.

இப்படியாக கோவைப் பயணம் இனிதே முற்றிற்று.



அதிசயமாக பயணப் பதிவு தொடராமல் முற்றிற்று. அதற்காகவே தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம். பெய்யாமலும் போகலாம் என்பது ரமணன் சாரின் லேட்டஸ்ட் தகவல்.

 

வார்ப்புரு | தமிழாக்கம்