150. ப.ம.க தொண்டனுக்கு ஒரு அவசர கடிதம்

எனதருமை சிங்கமே,
நம் தன்னிகரில்லா தலைவர் மாஸ்க்கார் அவர்கள் சூறாவளிச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதால், கொள்கை பரப்புச் செயலாளர்களின் ஒருவன் என்ற வகையிலும் இவ்வறிக்கை விடவேண்டியது அவசியமாகிறது. ஏன், அதுவும் ஏன் இப்போது என்று நீ கேட்பது எனக்கும் கேட்கிறது தம்பி. ஆனால், காரணமில்லாமல் இல்லை. தலைவர் நம் பொதுக்கூட்டங்களுக்கு சிலகாலமாய் வருவது குறைந்துள்ளதை நம் பலவீனமாய்க் கருதி பல அறிவிலிகள் நம் எழுச்சிமிகு இயக்கத்தை ஏளனம் செய்யத் துணிந்திருக்கின்றன. இந்த நரிகள் இன்று வந்த குள்ளநரிகள். நம் புரட்சி வரலாறு அறியாத வெட்டிநரிகள். ஆயினும், சிங்கத்தின் குகைக்கே வந்து கொக்கரிக்க இவர்களுக்கு எங்கே வந்தது அசட்டு துணிவு என்கிற கேள்வி நம் பலரின் மனதில் இருப்பதால் இது ஒரு விளக்க அறிக்கையே.

சிங்கங்களுக்கும், நாய்களுக்கும் அஞ்சாத நாம் இந்த நரிகளைக் கண்டா அஞ்சுவோம்? முன்னால் குரைத்தவைகளெல்லாம் இன்று ஓடியொளிந்து இருப்பது, பாவம் இந்தப் புதுநரிகளுக்கு தெரியுமா? மரியாதை நிமித்தம் சிறுகட்சிகளையும் அரவணைத்துச் செல்வோம் என்கிற நம் பெருந்தன்மையை அப்பட்டமாக திரித்து, நாம் அவர்களின் நட்பு கோரினதாய் திரிக்கும் நயவஞ்சகர்கள் நிறைந்திருக்கும் வலையுலக அரசியலில் நம் இயக்கத்தின் தூண்களான கண்ணியமும், நேர்மையும் அடிபடுவதாய்த் தோற்றம் உண்டாகலாம். ஆனால், வாய்மையே வெல்லும் என்ற தமிழ்வாக்கின்படி நம் பக்கமுள்ள நீதி வெளிவரும் நாள் வெகுதொலைவிலில்லை.

நேற்றைக்கு கட்சியென்ற பெயரில் ஒரு பத்துப்பேரைக் கூட்டி, மாநாடு என்று சொல்லி பிரியாணியும் கஸ்மாலப்பொடியும் கொடுத்து லாரியில் ஆள் சேர்ப்பவர்களுக்கு, கொள்கையினால் பத்துகோடி பேருள்ள நம்மியக்கத்தை பற்றி என்ன தெரியும்? ப.ம.க விற்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு என்ன என்பதற்கு வரலாற்றுச் சான்றிதழ்கள் போதவில்லையா? இரத்தத்தை சிந்தி நாம் உழைத்து கட்டி இன்று ஓங்கி உலகையே அளக்கும் கோபுரமாய் வளர்ந்திருக்கும் இயக்கத்திற்கு இன்னும் யாரிடம் என்ன நிருபிக்க வேண்டியிருக்கிறது? சில உதாரணங்கள் வேண்டுமானால் கொடுக்கலாம், தமிழ்மணத்தில் தனியொரு படையைத் திரட்டி தனி ராஜபாட்டையில் போய்க்கொண்டிருக்கும் தலைவரின் பதிவில் சிறுதுளியாய் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இன்று கிழக்கைரோப்பிய டானூப் நதியைப் போல் கரைகளையெல்லாம் கட்டுடைத்து சீறிப் புதுவெள்ளமாய் இளரத்தத்தை இணையவுலகில் பாய்த்துக்கொண்டிருக்கிறது என்பதை விளக்கவும் வேண்டுமோ? முன்னரிருந்த போட்டிமிகு வாத்து அரசியலில் தேர்ந்து பின் .யிர் போராட்டங்களில் பங்கெடுத்து நாம் படாத அடியா? நாம் பார்க்காத தண்டவாளங்களா?

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் தொடங்கி கொத்தனாரின் போலிடோண்டு பதிவு வரை நம் படைபலத்தை நிருபித்திருக்கிறோம். சமீபத்தில் நடந்த நிலாத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று வீணாய் வாலாட்டியவர்களை டெபாஸிட் இழந்து புறமுதுகிட்டு ஓடச்செய்திருக்கிறோம். இன்று? அந்நரிகள் மறைந்து புதிய நரிகள் எகத்தாளம் செய்கின்றன. கட்சியின் பெயர் நினைவிலில்லை, ஆனால் பொதுச் செயலாளர் ப.ம.க அவர்கள் கூட்டணியில் இணைந்ததாக கட்டுக்கதை விடுகிறார். அரசியல் நாகரிகம் தெரியாவிடினும், நகைச்சுவையில் வல்லவர் என்று நிருபித்திருக்கிறார் எனதன்புத்தம்பி தேவ். ஆனால், நகைச்சுவை உணர்வு மட்டும் இம்முறை அவரைக்காக்காது. நேற்றைய மழையில் தேங்கிய சேற்றுக்குட்டையாம் அவரின் பெயரில்லாக்கட்சியுடன் பசிபிக் மகாசமுத்திரமான நாம் இணைவதா? இத்தகைய அவதூற்றைப் போகிற போக்கில், நான் அவரிடம் இட்ட பின்னூட்டத்தை முற்றிலுமாக திரித்து நான் சொல்லாததை சொன்னதாக திரித்திருக்கிறார். அவர் கட்சித் தலைமை அலுவலகத்தில் மக்கள்வராது ஈ ஓட்டுவது போலவே அவர் அபாண்டம் சாட்டிய அலுவலகமும் என்று நினைத்துவிட்டாரா? அது யாருடைய அலுவலகம்? ப.ம.க வின் கொள்கை பரப்புச் செயலாளரான பினாத்தலாரின் இடம். ஆனால், எனதருமைத் தம்பி, எதையும் தாங்கும் இதயம் கொண்ட நாம் இதைக்கண்டு கலங்கவில்லை. மாறாய் நம் கட்சிக்குள்ளேயே இருக்கும் செய்நன்றி மறந்த ஓநாய்களைக் கண்டு தான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டியிருப்பதன் அவசியம் மேலும் உறுதியாகிறது.

இப்படி ஒரு அப்பட்டமான பொய்யை நாணமில்லாமல் கட்டவிழ்த்த தேவ் தம்பியை தட்டிக்கேட்காமல் நமதருமை கொ.ப.சே அனுமதித்து கொள்கைக்கூட்டணி அமைப்போம் என்று வேறு ஒத்தூதுகிறார். இதுகுறித்து தலைவரிடம் பேசியபோது ஆடுகளை வளர்த்தது நெஞ்சில் முட்டுவதற்கா என்று அவர் ஒருநொடி கலங்கியபோது பொதுக்குழுவின் இரத்தம் கொதித்தது. இவ்விதயத்தை சும்மா விடப்போவதில்லை. ப.ம.க வை எதிர்த்து உள்குத்து, வெளிக்குத்து செய்யும் வெத்துவேட்டுகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க ஒட்டுமொத்த பொதுக்குழுவும் முடிவெடுத்துள்ளது.

பெனாத்தலாரை கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளோம். இது குறித்து தனியாக ஷோ-காஸ் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. பதிலளிக்க ஒருவாரம் கெடு தந்திருக்கிறோம். இது பொதுக்குழுவின் ஏகோபித்த முடிவாகும். இதற்கு பொறுப்பான பதில் வரவில்லையென்றால், அவருக்கு பிங் கடுதாசி அனுப்பப்படும் என்றும் பொதுக்குழு முடிவு செய்துள்ளது. தலைவரின் அன்பை தவறாய் பயன்படுத்த நினைக்கும் எந்த நரியையையும் கண்டு இனி ப.ம.க அமைதியாக இருக்காது. ஜனநாயக முறைப்படி மரம்வெட்டி, ரோடுமறித்து, தீக்குளிக்கவைத்து இல்லை குளிக்கவாவது வைப்போம் என்று உறுதிமொழியை இங்கே பொதுக்குழுவின் சார்பில் வழங்குகிறேன்.

மேலும், வெட்டிக்கட்சியின் செயலாளரான தேவ், முறைப்படி ஒரு கடிதம் எழுதி அதில் மக்களிடம் தன் பொய்ப்பிரச்சாரத்திற்காக பகிரங்கமாய் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்று நம் கட்சியின் சார்பாய் எச்சரிக்கை விடுக்கிறேன். இத்தகைய அவதூறுக்கு நஷ்ட ஈடாக நமதியக்கத்தின் தொண்டர்களுக்குத் தலா ஒருரூபாயென பத்துகோடி இந்திய ரூபாய்களும், இலவச கலர் டிவியும், கூடவே ஒவ்வொருவருக்கும் பத்துகிலோ அரிசியும் வழங்கவேண்டும். இதற்கு ஒரு வாரம் கெடு. இல்லையென்றால் நம் முழுபலத்துடன் களத்தில் நேருக்கு நேர் மோதத்தயாராகிவிட்டோம், தம்பி. ஊசிப்பட்டாசை எதிர்க்க அணுஆயுதம் தேவையா என்று நீ மலைப்பது புரிகிறது. ஆனால், காலத்தின் கோலம் நமுத்துப்போன வெங்காயவெடிகளும் அணுகுண்டுகளுடன் மோத முயல்கின்றன. அவற்றை அவற்றின் வழியிலேயே சென்று எதிர்கொள்வதுதான் தமிழர் மரபல்லவா?

இந்த சோதனையான நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி தம்பி. பாகற்காய் பொரியலை இலையில் வைத்தாலும் கூடவே சக்கரைப் பொங்கலும் வைக்கிற தன்மானத் தமிழரல்லவா நாம்? கசக்கும் மருந்தையும் தேனில் குழைத்துத் தந்துதானே நமக்கு வழக்கம்? ஆகவே உவப்பளிக்கும் செய்தியொன்றை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆன்மிக ஆழ்கடல், சொற்பொழிவு செம்மல், நவரச நாவலன், தமிழினத்தின் போர்வாள் ஒப்பிலா அன்பு அண்ணன் கோ. இராகவன் அவர்கள் நம் கட்சியில் இன்றுமுதல் இணைகிறார். அவரை பெங்களூர் வட்டத்தின் செயலாளராய் தலைவர் அன்புமிகுதியால் நியமித்துள்ளார். மேலும் வரும் ஏப்ரல் இருபதாம் தேதிமுதல் அவர் நமது சார்பாய் புரட்சி பிரச்சாரத்தை தொடங்குவார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பி.கு: இவ்வறிக்கையின் முழுவடிவமும் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிடப்படுகிறது.

புரட்சித்தலை முகமூடி வழியில் செல்வோம்! புல்லுருவிகளை ஒழிப்போம்! புரட்சித்தமிழகம் படைப்போம்!

இப்படிக்கு,
இராமநாதன்
கொள்கை பரப்புச் செயலாளர் (ஐரோப்பிய வட்டம்)

149. என்ன பாத்தேன்?

எதப் பத்தி பதிவு போடணும்னு யோசிச்சே மண்டை காஞ்சிடுச்சு. தலைப்பு ஓண்ணுமே மாட்டலை. அரசியல், எலெக்ஷன்லாம் நமக்கு ரொம்ப தூரம். அதுக்காக பேசாம இருக்க முடியுமா? டேட்லைன் லண்டன் ஸ்டைல்ல இனி போன வாரம் டிவில என்ன பாத்தேன்னு... ஆங்கிலக் கலப்பு ரொம்பவே ஜாஸ்தியா இருக்கும் கண்டுக்கக்கூடாது.

மொதல்ல "டோஹா டிபேட்" - பிபிசி. ஞாயித்துக்கிழமை வந்துச்சு.

கதார்ல நடக்குது இது. ஹார்ட் டாக் புகழ் டிம் செபாஸ்டியன் நடத்தறாரு. ஸ்டுடியோ ஆடியன்ஸ் முன்னாடி முகமது எல்-பாரடை, IAEA வோட தலைவர். எல்-பாரடை சரியில்லேன்னு சொல்லாத ஆளுகிடையாது. அமெரிக்கா, ஐரோப்பா தொடங்கி மத்தியகிழக்கு வரை அவரை திட்டாத ஆளே இல்லை. இதில் ஒரு முஸ்லீம், அரபு நாட்டவரான எல்-பாரடை இப்படி அரயியர்களுக்கு எதிரா வேலை செய்யறாரேன்னு கூட கண்டனங்கள் உண்டு. Friend of Nobody. எல்லாத்துக்கு நடுவுலேயும் வேலை செய்யறாரே. பெரிய விஷயம். ரொம்பவே ஐடியலிஸ்டாக இருந்தாலும், சொன்ன கருத்துகள் ரொம்ப பொறுமையா நிதானமா இருந்தன.

முக்கியமா பார்வையாளர்கள் நிறையப் பேர் இஸ்ரேல், இந்தியா பத்தி கேள்விகள் கேட்கிறார்கள். போன தடவையும் இதுதான் நடந்தது. இஸ்ரேல் பத்தி கவலைப் படுவது அவர்கள் பார்வையில் நியாயமானதாக இருக்கலாம். ஆனால், இஸ்ரேலின் கோணத்தை, deterrent இல்லாமல் இருந்தால் அதன் நிலைமை என்னாகும் என்று சிந்திக்க மறுக்கிறார்கள். இதற்கு பாரடை சொன்னது யோசிக்க வைத்தது. இன்றைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் ப்ரான்ஸுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் தகராறு வந்தாலும் அணுஆயுத அளவுக்குக் கூட வேண்டாம், conventional war கூட நடக்காது என்பதுதான். ஏனென்றால் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்றை depend செய்து உள்ளன. பரஸ்பர மரியாதையும், அங்கீகாரமும் தராத நாடுகள் சூழ்ந்திருக்கையில் இஸ்ரேலின் அடாவடித்தனம் புரிந்துக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது என்றும் IAEA வின் வேலை NPT ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களை கண்காணிப்பது மட்டுமே என்றார்.

இராக் விஷயத்தில் இவரின் குழு அப்போது கண்டறிந்ததை மூன்று வருடங்களுக்கு பிறகு, பல்லாயிரம் பேரைக் கொன்றுகுவித்து, பில்லியன்களை செலவழித்து இப்போது உலகம் உணர்ந்திருக்கிறது. ஒருத்தரை ஒருத்தர் மதிச்சாலே பாதிப்பிரச்சனை குறையும்னு சொன்னார்.

அடுத்தது Bordeaux வில் நடக்கும் அகில உலக மிதிவண்டி பந்தயங்கள். World Track Championships. யூரோஸ்போர்ட்.

இதையெல்லாம் மனுஷன் பாப்பானா என்ற மனநிலையிலிருந்த என்னை ஒரே வாரத்தில் சைக்கிளிங் பிரியனாய் மாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். போன புதன்மாலை பார்ப்பதற்கு ஒன்றுமில்லாமல், யூரோஸ்போர்ட் எதேச்சையாக கண்ணில் பட்டது. சரி, என்னதான் நடக்குதுன்னு பாப்போம்னு பாத்துகிட்டுருந்தேன். Sprint னு ஒண்ணு. இரெண்டு ரெண்டு பேரா பங்கெடுத்துக்கறாங்க. முதல் ஒரு சுத்து வார்ம் அப் மாதிரி. அப்புறம் ஒரு சுற்று ஸ்ப்ரிண்ட். சர்வசாதாரணமா மணிக்கு அறுபது கி.மீ அளவுக்கெல்லாம் ஸ்பீடு. அதுல எத்தனை ஸ்ட்ராடெஜி அதுஇதுன்னு மலைப்பா இருந்தது. இந்த மாதிரி விதவிதமான போட்டிகள். வர்ணனையாளர்களுக்குத் தான் நன்றி சொல்லணும். எல்லா போட்டிக்கு முன்னாலேயும், விதிகள் என்ன எப்படியெல்லாம் வெற்றி பெறலாம்னு விளக்கமா ஒரு கிராஷ் கோர்ஸ் கொடுக்கறதால பாக்கறச்சே ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறது.

அடுத்தது Animal Planet - நிகழ்ச்சி பேர் மறந்துடுச்சு. மன்னிச்சுக்கோங்கப்பா.

தாய்லாந்துல ஒரு புத்த மடம். அங்க ஒரு சாமியார் இருக்கார். விவகாரமான ஆளு. மடத்துலலாம் பசுமாடு கன்னுக்குட்டியெல்லாம் வளர்ப்பாங்க. இந்தாளு புலிக்குட்டிங்கள வளக்கறாரு. பதினாறு புலிகள் இருக்கு இதுவரைக்கும். அதுல பலது முழு வளர்ச்சியடைந்த புலிகள். நம்ம சைஸுக்கு ரெண்டு மடங்கு இருக்கு ஒண்ணொண்ணும். மடத்துல இருக்கற குட்டி பசங்கள்லாம் அதுகளோட ஒடிப்பிடிச்சு விளையாடறாங்க. பீடிங்க் பாட்டில்ல புலிக்குட்டிக்கு பால் கொடுக்கறாங்க. புதுசா குட்டி போட்ட நாய்கிட்டேயே போகறதுக்கு எனக்கெல்லாம் நடுங்கும். இந்த சாமியார் என்னடான்னா, குட்டிபோட்ட புலிகிட்டேர்ந்து குட்டிகளை தூக்கிட்டு வந்து புட்டிப்பால் கொடுக்கறாரு. இவரப் பத்தி போன வருஷமும் காமிச்சாங்களாம். அதுலேர்ந்து உலகெங்குமிருந்து நிதியும் உதவியும் வருதாம். அதுனால இப்போ தன்னோட செல்லப்புலி ப்ராஜக்டை இன்னும் பெரிசா செய்யப்போறாராம். புலிகள்லாம் பரமசாதுவா இருக்கறத பாத்தா இப்படி அருமையான மிருகங்களையெல்லாம் கொன்னு குவிச்சுருக்கோமே. இதுவெல்லாம் அடுத்த தலைமுறை வரைக்குமாவது தாங்குமான்னும் வருத்தம் வந்தது. ஆனா போலிச்சாமியார் மாதிரி இந்த புலிச்சாமியார் டைப் ஆளுங்களை பார்க்கையில் நம்பிக்கையும் இருக்கிறது.

அப்புறம் Floyd Uncorked - Travel Channel
முன்னாடி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கான்னு சுத்திகிட்டுருந்த ஆளு இப்போ ப்ரான்ஸுல சுத்தறாரு. அதுவும் எப்படி. ஒயின் தேடி. ஒவ்வொரு வாரமும் ஒரு ஏரியாக்கு போயி அங்க என்ன பிரபலமான ஒயின், அத எப்படிக் குடிக்கணும்னு தான் ப்ரோகிராமே. சரி, கவுத்தினோமா, உள்ளத்தள்ளினோமானு இல்லாம இவரும் கூட சுத்தற ஒயின் எக்ஸ்பர்ட்டும் (எங்க படிச்சு பட்டம் வாங்கினார்னு தெரியல :)) அடிக்கற அலம்பல் தாங்கல. ஒரு கிளாஸ்ல ஊத்தி அரைமணி நேரம் டிஸ்க்ரிப்ஷன் தான். என்ன கலர், என்ன மணம், என்ன சுவைன்னு பிரிச்சு பிரிச்சு கோனார் நோட்ஸ் போடறாங்க. அது இரத்தச் சிவப்பா, இளஞ்சிவப்பான்னு தொடங்கி, கொஞ்சமா fruity, full, mature, young அப்டீப்டின்னு சம்பந்தமில்லாம நறுமண விவரிப்பு. அப்புறம் டேஸ்டிங். இதுல என்ன பழச்சுவை இருக்கு, எவ்வளவு அசிடிடி இருக்கு, ஆல்கஹால் அளவு ன்னு அப்புறம். எல்லாமே திராட்சை பழம் தானே, அதுல எங்கேர்ந்து பாதாம் பிஸ்தா சுவை நறுமணமெல்லாம் வருதுன்னு யாராச்சும் விளக்குங்கப்பா.

கடசியா GlobeTrekker : Fiji Islands - Travel Channel
அப்பா.. ஹனிமூனுக்கு போனா இங்கதான்பா போகணும். என்ன அழகு. டிவியில மட்டுந்தான் இப்டியா இல்ல நிஜமாலுமான்னு சந்தேகமிருக்கு. பளிங்கு மாதிரி தண்ணீர், நடுவுல ஏதோ அரிசியைத் தரையில கொட்டினா மாதிரி மணிமணியா தீவுகள்னு கலக்கலா இருந்துச்சு. அங்க பாருங்க ஒரு விசேஷம், தக்கணூண்டு பொண்ணு ஒன்னு. We are all neigbours. We share the same earth, the same air, the same stars, the same sky அப்புறம் ஏன் இவ்ளோ சண்டைனு ஒரு தத்துவம் போட்டுச்சு பாருங்க. அசந்துட்டேன். இப்டி எல்லாரும் யோசிச்சா ஏன் சண்டை வரப்போகுது?

 

வார்ப்புரு | தமிழாக்கம்