172. கோவைப்பக்கம் ஒரு நாள்

1. திருச்சி ரோடில் மேம்பாலம் கட்டுவதாகச் சொல்லி சூலூர் தாண்டியவுடன் போக்குவரத்தைத் திருப்பிவிட்டு டார்ச்சர் கொடுக்கிறார்கள். ஒண்டிப்புதூர் குறுக்குத்தெருக்களையெல்லாம் காணும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித்தந்திருக்கிறது நெடுஞ்சாலைத்துறை. பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களெல்லாம் இன்னும் சில கிலோமீட்டர் ஊரைச் சுற்றி வரவேண்டுமென்று நண்பர் கூறினார். மேம்பாலம் கட்டி இருபுறமும் ரோடெல்லாம் போட்டு, தண்டவாளத்தின் மேல் போடுவார்களே அந்தப் பகுதியை மட்டும் விட்டுவைத்திருப்பதாக கேள்வி. அதற்கு என்று விடியப்போகிறதோ, 2008 என்று ட்ரைவர் தகவல் சொன்னார், ஆண்டவனுக்கே வெளிச்சம்.

2. இராஜஸ்தானி சங்க் திருமண மண்டபம் செல்ல வேண்டியிருந்தது. வித்தியாசமான செட்-அப். கீழே டைனிங். மேலே மண்டபம். இனிமேல் ஓசிச் சாப்பாடு சாப்பிட சம்பிரதாயத்துக்குக்கூட மணமக்களை வாழ்த்தவேண்டாம் என்று தோன்றியது.

3. ரொம்ப நாள் கழித்து ரேஸ் கோர்ஸ் ரோடு, கே.ஜி தியேட்டர், ஹாஸ்பிடல் (!) எல்லாம் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. பழைய ஞாபகங்கள் நிறைய. பள்ளி விடுமுறை நாட்களில் சித்தப்பாவின் ஹீரோ ஹோண்டாவில் ஏறி வேலை மெனக்கெட்டு சேரன் டவர்ஸ் போக வேண்டுமென்று அடம்பிடித்து (விண்டோ ஷாப்பிங் செய்யக்கூட ஒன்றுமில்லை அங்கே அப்போது), பைக் முன்னாடி அமர்ந்தபடி நேரு ஸ்டேடியத்தை ஒரு ரவுண்ட், அவினாசி ரோட்டில் நார்த் கோயம்பத்தூருக்கு பிரியும் மேம்பால ரவுண்டானா ஏறி இறங்கி, கேஜி ஹாஸ்பிடல் பழமுதிர்ச்சோலையில் ஜூஸோ இல்லை கௌரிசங்கரில் டிபனோ என இனிதே கழிந்தது தினமென்று சுபம் போட்ட நாட்கள். லைப் தான் எத்தனை சிம்பிளாக இருந்திருக்கிறது என்று நினைத்து எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. "குயிலப் புடிச்சு கூண்டிலடச்சு கூவச்சொல்லுகிற உலகம்" என்று ஏன் வைரமுத்து உருகி உருகி எழுதினார் என்று ஓரளவுக்கு புரியவும் செய்கிறது.

4. அவினாசி ரோடு மேம்பால ரவுண்டானா இப்போது ரொம்ப மாறிவிட்டது. பெரிய நகரங்களுக்கு மத்தியில் இங்கே கொஞ்சம் வித்தியாசமாகப்பட்டது வழக்கமாக தென்படும் பிரம்மாண்ட சென்னை சில்க்ஸ், போத்தீஸ் போன்றவற்றிற்காக சிரித்து கிளுகிளுப்பூட்டும் அழகான ராட்சசிகள் ஆப்செண்ட். அதற்கு மாறாக ஜான் ப்ளேயர்ஸ், லூயி பிலிப், வான் ஹூசன், ஆலென் சோலி என்று முறைத்து முறைத்துப் பார்க்கும் அரவிந்தசாமி அண்ணாக்கள் மயம். கோவையில் மட்டும் ஏனிப்படி என்று விளங்கவில்லை.

5. இருந்த கொஞ்ச நேரத்தில் பார்த்த சன் நியுஸ். சென்னையில் மழையால் விளைந்த சேதத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் வேட்டியை மடித்துக்கட்டியபடி சேற்றில் இறங்கிப் பார்வையிட்டார். அடுத்து, சென்னையின் புதுமேயர் பதவியேற்பு நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் என்கிற முறையில் திரு. ஸ்டாலின் உடனிருக்கையில் வெள்ளிச் செங்கோலுடன் பதவியேற்கிறார்.

வழமையாய் நடந்த இவற்றுள் எனக்கு உறுத்தியது முக்கியமான ஒன்று. இந்த இரு நிகழ்ச்சிகள் என்றில்லை. கும்மிடிப்பூண்டி ஒன்றிய நாலாவது வார்ட் தி.மு.க பிரசிடெண்ட் நன்றி அறிவிப்புக் கூட்டமானாலும் சரி, புதுக்கோட்டை மாவட்ட மனையேறிப்பட்டியில் தி.மு.க தொண்டரின் வீட்டில் எருமை மாடு கன்று போட்டாலும் சரி...உடனே வெளிர் நீலம் அல்லது வெளிர் பிங்க் சட்டை, கறுப்பு பேண்ட் போட்டுக்கொண்டு நல்ல கருகருமீசையுடன் கண்ணாடியணிந்த ஒரு இளைஞர் பளிச்சென்று ஆஜராகி டி.வியில் நிற்கிறார். அவர் நமது மதிப்பிற்குரிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் (இணை கூட இல்லை, மத்திய) திரு. தயாநிதி மாறன். இவர் என்ன இந்தியா முழுவதற்குமான மத்திய அமைச்சரா இல்லை தமிழக தி.மு.க-விற்கு பி.ஆர்.ஓ-வா என்று சந்தேகமாக இருக்கிறது. மத்திய அமைச்சருக்கு இதற்கெல்லாம் எங்கேயிருந்து நேரம் கிடைக்கிறது என்று பொதுவில் நேர மேலாண்மை வகுப்புகள் நடத்தினால் அனைவரும் இந்த ஆம்னிப்ரெஸென்ஸ் டெக்னிக்கை கற்றுக்கொண்டு பயன்பெறலாம்.

6. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. அரங்கநாத சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள திருத்தலம். நான் கூட இரங்கநாதர் என்றவுடன் பள்ளிகொண்ட ரங்கநாதரை எதிர்பார்த்தேன். இவர் வித்தியாசமாக இருக்கிறார்.

7. காரமடையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது "தென் திருப்பதி". அசர வேண்டாம். கே.ஜி.டெனிம் கார்ப்பரேஷன் (KG Denim) தெரியும்தானே? trigger ஜீன்ஸ் காரர்களேதான். அவர்களின் மில் வளாகத்தினுள் கட்டப்பட்ட தனியார் கோயில். இதற்கு நிறைய பில்டப். செல்போன், காமிராக்களை வாயிலிலேயே பிடுங்கி வைத்துக்கொள்கிறார்கள். வருகிறவர்கள் அனைவரும் கே.ஜி.டெனிமின் பங்காளியோ விருந்தாளியோ என்று சொல்லி ஒரு லெட்ஜரில் கையெழுத்திட்ட பின்னரே செல்லவேண்டும். உண்டியல் கூட கிடையாது. இந்துசமய அறநிலையத்துறை பலரது சொப்பனங்களில் சிம்மமாய் வருவதனாலோ என்னவோ.

சென்ற வருடம் சில நாட்களுக்கு இந்தக் கோவிலில் உள்ள பெருமாள் கண்ணைத் திறந்து பார்க்கிறார் என்று அதகளப்பட்டது. அதனால் பிரபலமும் அடைந்துவிட்டது. பிரபலமாகும் வரை கருணையோடு கண்திறந்து பார்த்த நாராயணர், அப்புறம் ஏன் பார்க்கவில்லை என்று உடனே கேட்க நினைக்கும் conspiracy theoristகள் நேராக கோயில் நிர்வாகத்திற்கே எழுதிக்கேட்டுக்கொள்ளலாம்.

மற்றபடி ஒரு சிறு மேட்டில் வெங்கடாஜலபதி சந்நிதி, கருடாழ்வார் சந்நிதி எனத் தொடங்கி அத்தூணூண்டு இடத்தில் திருமலைக்கோவில் போலவே அமைத்து முத்தாய்ப்பாக விமான வெங்கடேசரையும் அசலைப் போலவே செய்து வைத்திருக்கிறார்கள். நித்தியபடி அலங்காரம் திருமலைப்பெருமானைப் போலவே. கூட வந்த ஓட்டுநர் திருப்பதி பெருமாளுக்கு நேர்ந்து கொண்டு அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வேண்டுதலை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னார். ஐந்து வருடத்திற்கு முன்னர் தோன்றிய தனியார் வெங்கடேசன் திடீரென ஒப்பில்லா அப்பனையும், குணசீலனையும் ஓவர்டேக் செய்தது எப்படி என்று எனக்கு குழப்பம் வந்தது.

பெருமாளைச் சேவித்துவிட்டு வருவோர் அன்னதான டொனேஷன் கவுண்டர், பிரசாத விற்பனை கவுண்டர் என எல்லாவற்றையும் எம்பித்தாவிவிட்டு இலவச பிரசாத கவுண்டருக்கு செல்ல வேண்டும். நான் போன அன்று இனிப்பு மட்டாக ஜோரான சர்க்கரைப்பொங்கலும், மிளகு குழம்பா சாம்பார் சாதமா என மினி பட்டிமன்றம் நடத்த ஏதுவான ஒரு சாதமும் பிரசாதம். தோட்டத்திலேயே அழகாய் பாறைகளை இருக்கைகளாய் வைத்திருக்கிறார்கள். குடிநீர் வீணாக்காதீர் என்று எழுதிவைத்தவர்கள், பிரசாதம் சாப்பிட்டோர் கை கழுவ நீரை வைக்க மறந்துவிட்டார்கள். ஆனால், இருக்கும் தோட்டத்தில் அருமையான மர நிழலில் நன்றாக நிஷ்டை கைகூடுகிறது. ஏன் இப்படி குற்றமாக கண்டுபிடிக்கிறேன் என்று நோக வேண்டாம். திருப்பதியைப் போன்ற பெருமை வாய்ந்தது என்றெல்லாம் பில்டப் கொடுத்து அழைத்துச் சென்ற டிரைவர் மேலுள்ள வெறுப்பினாலும் இருக்கலாம். பக்திக்காக என்றில்லாமல், curiosityக்காக சென்று வரலாம்.

8. அடுத்து காடையூர். காங்கேயத்திலிருந்து ஆறு கி.மீட்டரில் உள்ளது. விசேடமான கோயில் என்று சொல்லி போனதுதான் இங்கேயும். காடையீஸ்வரர், பங்கயற்செல்வி, சுப்ரமண்யர், லக்ஷ்மிநாராயணர், அனுமார், வெள்ளையம்மன் என பலர். என்ன விசேஷம் என்று சொல்ல ஆளில்லை. ஆனால் டிரைவர் புண்ணியவான் சொன்ன ஸ்தல புராணம் இதோ: சிவகுமாருக்கு இவர்தான் குலதெய்வம். சென்ற வாரம் தான் சூர்யாவும் ஜோவும் சிவகுமார் குடும்பத்தினருடன் ரகசியமாய் வந்து சென்றிருக்கின்றனர். கூட்டத்திற்கு பயந்து பொங்கல் எல்லாம் வைக்காமல் சிம்பிளாக கும்பிட்டு கிளம்பிவிட்டனர் என்றார்.

இப்படியாக கோவைப் பயணம் இனிதே முற்றிற்று.



அதிசயமாக பயணப் பதிவு தொடராமல் முற்றிற்று. அதற்காகவே தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம். பெய்யாமலும் போகலாம் என்பது ரமணன் சாரின் லேட்டஸ்ட் தகவல்.

47 Comments:

  1. நாமக்கல் சிபி said...

    நாமக்கல் சிபிக்குத் தெரியாமல் கோவைப் பக்கம் வந்து உளவு பார்த்துச் சென்றமையை வன்மையைக் கண்டிக்கிறோம்.


  2. நாமக்கல் சிபி said...

    மற்றபடி காரமடை பெருமாள் கோவிலில் பெருமாள் வித்தியாசமாகத்தான் இருக்கிறார்.

    தென்திருப்பதி பெரிய அளவில் பில்ட் அப் கொடுத்து அழைத்துச் சென்றிருப்பின் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள்.
    தவிர கோவிலை நன்கு பராமரிக்கிறார்கள். அமைதியான சூழல். நிதானமாக ஆற அமர தரிசனம். இன்னும் என்ன வேண்டும்?


  3. நாகை சிவா said...

    ஒரு நாள் போனதுக்கே இம்புட்டு கேள்வி கேட்குறீங்க. சரியா தாங்க இருக்கு தஞ்சாவூர் ஆள் என்பது...

    :-)


  4. நாகை சிவா said...

    நீங்க சொன்ன கோவில் மாதிரி வால்பாறைக்கு பக்கத்தில் ஒரு கோவில் இருக்கு ராம்ஸ், கேள்விப்பட்டு இருக்கீங்களா. அதுவும் வெங்கி தான். ஒரு எஸ்டேட்க்குள்ள இருக்காரு. அவர பாக்குறத்துக்கு ஒவராவே அலம்பு பண்ணினாங்க அந்த எஸ்டேட் மக்கள்....


  5. நாகை சிவா said...

    //இந்த ஆம்னிப்ரெஸென்ஸ் டெக்னிக்கை கற்றுக்கொண்டு பயன்பெறலாம்.//

    நீங்க கத்துக்கீட்டிங்கனா ஊருக்கு வரும் போது எனக்கும் சொல்லி குடுங்க ப்ளிஸ்...


  6. பினாத்தல் சுரேஷ் said...

    இப்போ எல்லாம் கோவில்களுக்கு மார்க்கட்டிங் அதிகமாகத் தேவைப்படுகிறது. பெங்களூர் இஸ்கான் கோவிலும், கெம்ப் போர்ட் சிவன் கோவிலும் தெளிவான உதாரணங்கள். நீங்க கூட வெண்டைக்காய் நைவேத்யக் கோயிலைப்பத்திக் கேட்டீங்க, யாருக்குத் தெரிஞ்சுது? இந்த தென் திருப்பதி அப்படி ஒரு மேட்டரா இருக்கும்னு நெனைக்கிறேன்.

    பதிவு நல்லா இருக்கு, வாழ்த்துஸ்.


  7. G.Ragavan said...

    காரமடை காரமடைன்னு சொல்றீங்களே. அங்கே பெருமாளுக்குக் காரம்+அடைதான் படையலா? :-)

    கோவையின் மெல்லிய காத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.

    கோவை வரை சென்று விட்டு மருதமலை செல்லாமல் வந்தமைக்கு இராமநாதனைக் கடுமையாக் கண்டிக்கிறேன். அன்னபூர்ணாவைப் பற்றி ஒன்றும் சொல்லாமைக்கு மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இலந்தவடை வாங்கித் திங்காமைக்கு மிகமிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.


  8. குமரன் (Kumaran) said...

    நாங்களும் சன் தொலைக்காட்சியைப் பாக்குறப்ப நினைச்சுக்குவோம். மத்திய அமைச்சர் டில்லியில இருக்காம தமிழ்நாட்டுலேயே இருக்காரேன்னு. :-)

    காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு சி.ஐ.டியில படிக்கிறப்ப நிறைய தடவை போயிருக்கேன். எனக்கு ரொம்ப பிடிச்ச கோவில். :-) நாகை சிவா சொன்ன கோவிலுக்கும் 2005ல போயிட்டு வந்தோம். நல்லா இருந்தது.

    ஓவர் துரியோதனப் பார்வை. சேர்க்கை சரியில்லைன்னு நெனைக்கிறேன். :-)

    ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை பதிவு போட்டாலும் வந்து படிச்சுப் பின்னூட்டம் போடறேன் பாருங்க. நீங்க எல்லாம் பெரியாளு ஆயிட்டீங்க. எங்க பதிவு பக்கமெல்லாம் வர்றதே இல்லை. :-(


  9. rv said...

    சிபி,
    உளவு பாக்குறதுக்குன்னு வந்தா ரகசியமாத்தானே வரணும்?? கோச்சுக்காதீங்க.

    //அமைதியான சூழல். நிதானமாக ஆற அமர தரிசனம். //
    அது என்னவோ உண்மை தான். பதிவிலேயே ஒத்துக்கொண்டதுபோல பில்டப் தான் கடுப்புக்கு காரணம் என்று நினைக்கிறேன்.


  10. rv said...

    புலியாரே,
    :))

    கேள்விப்பட்டதில்ல புலியார்.

    //நீங்க கத்துக்கீட்டிங்கனா ஊருக்கு வரும் போது எனக்கும் சொல்லி குடுங்க ப்ளிஸ்...
    //
    நிஜமா அதிசயமா இருக்குதுல்ல? நம்மையெல்லாம் வழக்கத்துக்கு மாறா ஒரு வேலை செய்யச் சொன்னா, நேரமில்லேன்னு சொல்லிட்டு ஓடிடுவோம். இவரு செண்ட்ரல், ஸ்டேட், பஞ்சாயத்துன்னு எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்றாரு.


  11. rv said...

    பெனாத்தலார்,
    //இப்போ எல்லாம் கோவில்களுக்கு மார்க்கட்டிங் அதிகமாகத் தேவைப்படுகிறது. //
    உண்மை. சீசனுக்கு சீசன் புதுசா ஒரு கோயில் பிரபலமாகுறதப் பாக்கறப்போவே சந்தேகம் வருது.

    நன்றி


  12. rv said...

    ஜிரா,
    காரமா அடைதான் பிரசாதமான்னு கவனிக்க விட்டுட்டேனே..

    மருதமலை முருகன் கோச்சுக்கலேன்னாலும், பெங்களூர் ராகவன் பத்த வைக்காம விட மாட்டீங்க போல.

    உங்களுக்குத் தெரிஞ்ச அன்னபூர்ணாவப் பத்தி நான் சொன்னா அவ்ளோ நல்லாருக்காதே ஜிரா.. எனக்குத் தெரிஞ்ச கௌரிசங்கரை பத்தி சொல்லிட்டேன். ஹி ஹி.. (என்னவோ தெரியல கொத்ஸு கூட சேர்ந்து எல்லாத்துலயும் ஒரு நாலஞ்சு மீனிங் வச்சு பேசாம வர மாட்டேங்குது. :)) )

    இலந்த வடையா? இது என்ன கோவையோட ட்ரேட்மார்க்கா? எங்க கடைக்கும்? எப்படி இருக்கும்? எதுவுமே தெரியாம என்னத்த சாப்பிடறது?


  13. rv said...

    கும்ஸ்,
    அட.. எல்லாருக்கும் இதே டவுட் இருக்கு பாருங்க. தயாநிதி சாருக்கு ஒரு லெட்டர் எழுதிக்கேக்கணும்.

    கோயில் கோயில்னு சொல்றீங்களே நீங்களும் புலியாரும்.. அது எக்ஸாக்டா எங்க இருக்கு, எந்த எஸ்டேடுக்குள்ள இருக்கு, என்ன விசேஷம் ஏதாவது சொல்லிருக்கீங்களா ரெண்டு பேரும்?

    //ஓவர் துரியோதனப் பார்வை. //
    ஹி ஹி. துச்சாதனப் பார்வையா இல்லாதவரைக்கும் தப்பிச்சோம்னு மண்டபத்துல பேசிக்கிறாங்களே.

    //நீங்க எல்லாம் பெரியாளு ஆயிட்டீங்க. எங்க பதிவு பக்கமெல்லாம் வர்றதே இல்லை//

    சொன்னாலும் சொல்லாட்டியும் "பெரிய" ஆளுதானே.. ஹி ஹி..

    :(((((


  14. rv said...

    கோவைப்பக்கத்திலிருந்து வந்தவர்கள் யாரும் கடைசி வரை காடையூரில் என்ன விசேஷம் என்று சொல்லவேயில்லியே..

    எல்லாரும் வெங்கி பின்னாடியே போனா, பரமசிவன் என்னதான் பண்றதாம்?


  15. நாமக்கல் சிபி said...

    இராம்ஸ்,

    காடையூர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. விசாரித்து எழுதுகிறேன்.

    பேரூர் பட்டீஸ்வரர் கோவில் சிறப்பான ஒன்று. கோவைக்கு வெகு அருகிலேயே இருக்கிறது. அதைத் தாண்டி ஒரு 25 கி.மீ உள்ளே சென்றால் தியானலிங்கம் என்ற இடம் உள்ளது. பெரிய அளவில் ஒரு சிவலிங்கம் தியான மண்டபத்தினுள் வைக்கப் பட்டுள்ளது.
    அமாவாசை/பௌர்ணமி தினங்களில் நம் கைகளாலேயே அந்த லிங்கத்திற்கு பால்/தண்ணீரால் அபிஷேகம் செய்ய அனுமதிக்கிறார்கள். காலையில் பால், மாலையில் தண்ணீர். அங்கேயே தீர்த்தகுண்டம் என்ற நீர்நிலையில் பாதரசத்தால் ஆன லிங்கம் ஒன்றும் உள்ளது. தீர்த்த குண்டத்தில் கழுத்தளவு நீரில் நடந்து சென்று அந்த பாதரச லிங்கத்தை தொட்டு வழிபட அனுமதிக்கிறார்கள்.

    தியானலிங்கம் தாண்டி இன்னும் ஒரு கி.மீ சென்றால் வெள்ளியங்கிரி மலை உள்ளது. மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவராக சிவ பெருமான் எழுந்தருளியுள்ளார். உடன் மனோன்மணித் தாயாராக பார்வதி தேவியும் எழுந்தருளியுள்ளார்.


  16. Amar said...

    //சென்ற வருடம் சில நாட்களுக்கு இந்தக் கோவிலில் உள்ள பெருமாள் கண்ணைத் திறந்து பார்க்கிறார்//

    இராமநாதன், அது நடந்தது திருப்பூர் கோவிலில். "திருப்பூர் திருப்பதி"

    கோயம்புத்தூர்காரங்க 420 வேலையெல்லாம் செய்ய மாட்டோம். நம்புங்கப்பா. :-)

    நீங்க போன கோவில் ஒரு மிக சிறிய குன்றின் மீது அமைந்திருக்கிறது. இராமானுஜர் அங்கே இரண்டொரு நாட்கள் இருந்துவிட்டு சென்றதாக பேசிக்கொள்கிறார்கள்.

    காடையூர் பற்றி கரெக்டாக தெரியவில்லை. விசாரனை நடந்துகொண்டு இருக்கிறது.


  17. Amar said...

    //. கூட வந்த ஓட்டுநர் திருப்பதி பெருமாளுக்கு நேர்ந்து கொண்டு அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வேண்டுதலை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னார்//

    Actually, அந்த ஓட்டுநர் மொண்டிபாளைம் கோவிலை இந்த கோவில் என்று நினைத்து சொல்லியிருப்பார்.

    மொண்டிபாளையத்தில் ஒரு பிரசித்தி பெற்ற பெருமாள் இருக்கிறார். ஏழு சிறிய மேடுகளின் மீது ஏறி இறங்கி போகும் சாலை.

    இந்த கோவிலையும் தென் திருப்பதி என்று தான் சொல்வார்கள்.

    கே.ஜி கோவில் நீங்கள் சொன்ன மாதிரி ஒரு தனியார் கோவில். திருப்பதி கோவிலை மாடலாக கொண்டு முடிந்த அளவு காப்பி அடித்திருக்கிறார்கள்.

    அப்புறம் சிபி சொன்னாருன்னு வெள்ளியங்கிரி மலைக்கு சிவனை பார்க்க போயிடாதீங்க.:-)

    பரம்சிவன் மலைக்கு மேல இருக்கார். போயிட்டு வர்றது கொஞ்சம் கஷ்டம். அம்மாவாசைக்கு நிறைய கூட்டம் போகும்.


  18. நாமக்கல் சிபி said...

    //சென்ற வருடம் சில நாட்களுக்கு இந்தக் கோவிலில் உள்ள பெருமாள் கண்ணைத் திறந்து பார்க்கிறார்//

    //இராமநாதன், அது நடந்தது திருப்பூர் கோவிலில். "திருப்பூர் திருப்பதி"//

    உண்மைதான் இராம்ஸ், கோவையில் அல்ல. திருப்பூரில்தான் என்று நானும் செய்தித்தாளில் பார்த்ததாக ஞாபகம்.

    சமுத்ரா சொல்வது போல் வெள்ளியங்கிரி மலை ஏறிச்சென்று தரிசிப்பது கடினம். அடிவாரத்தில் இருக்கும் சிவபெருமானை (அதுவும் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்தான்) வணங்கி வரலாம்.


  19. கார்மேகராஜா said...

    இவ்வளவு தூரம் வந்து திருப்பூரில் உள்ள எங்க வீட்டுக்கு வரலையே!


  20. rv said...

    சிபி,
    //தியானலிங்கம்//
    இது அந்த ஜக்கி வாசுதேவோடதா? ஏதோ ஒரு புத்தகத்துல படிச்சேன்னு நினைக்கிறேன்.

    வெள்ளியங்கிரி கேள்விப்பட்டிருக்கிறேன். போனதில்லை.

    நன்றி.


  21. rv said...

    சமுத்ரா,
    //"திருப்பூர் திருப்பதி"//
    அங்க ஓண்ணு இருக்குன்னும் நம்ம ட்ரைவர் அண்ணாச்சி சொன்னார்.

    //இராமானுஜர் அங்கே இரண்டொரு நாட்கள் இருந்துவிட்டு சென்றதாக பேசிக்கொள்கிறார்கள்.
    //
    காரமடை பற்றித்தானே சொல்கிறீர்கள்?

    //இந்த கோவிலையும் தென் திருப்பதி என்று தான் சொல்வார்கள்.
    //
    யப்பா மொத்தம் எத்தனையாவது தென் திருப்பதின்னு இனிமே கேட்டுக்கனும் போலிருக்கு.


  22. rv said...

    சிபி,
    //கோவையில் அல்ல. திருப்பூரில்தான் என்று நானும் செய்தித்தாளில் பார்த்ததாக ஞாபகம்.
    //
    இந்த கே.ஜி. தென் திருப்பதியும் திருப்பூர்லேந்து அவ்ளோ தள்ளியில்லியே. முழுசா அம்பது கிலோமீட்டருக்குள்ள தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

    நடுவுல புதுத் திருப்பூர்னு வேற ஒண்ணு வந்துச்சு. அப்போ வழியில ஒரு ஆத்துல முப்பது கி.மீ தள்ளியிருக்கிற திருப்பூர்லேந்து வருகின்ற கழிவுநீர் வழிந்தோடியது.

    நம்ம ட்ரைவர் அண்ணாச்சி வேற "அம்மா ஆட்சியில கழிவுநீர சுத்திகரிச்சுத்தான் விடணும்னு கெடுபிடி பண்ணாங்க. ஆனா கலைஞர் கண்டுக்கல. அதனால இந்தப்பக்கம் இருக்கற விளைநிலங்கள் எல்லாம் பாழாப்போச்சு. குடிநீரும் வீணாப்போச்சுன்னு" புலம்பினாரு. எவ்ளோ தூரம் உண்மைனு தெரியல.

    ஆனா நதிநீர் ஒரு கலரா இருந்தது என்னவோ உண்மை.


  23. rv said...

    கார்மேகராஜா,
    வாங்க வாங்க. அழைப்புக்கு ரொம்ப நன்றிங்க. திருப்பூருக்குள்ள போனா ட்ராபிக்ல மாட்டிக்கணும்னுட்டு வேற ஏதோ ஒரு ரூட்ல வண்டிய ஒட்டிட்டாங்க. அடுத்த தடவை வந்துட்டா போச்சு.

    நன்றி


  24. enRenRum-anbudan.BALA said...

    ராமநாதன்,
    **********************
    அழகான பதிவு, பயணக்கட்டுரை வடிவில் ! எழுத்து நடையும், மெல்லிய நகைச்சுவையும் சுஜாதாவை ஞாபகப்படுத்தியது (சீரியஸாக சொல்கிறேன் !)
    பாராட்டுக்கள்.

    என் 250-வது பதிவை இனங்கண்டு வாழ்த்தியமைக்கு நன்றி. அப்பதிவு பூங்காவில் வெளி வந்து புகழ் பெற்றது :)))

    என்றென்றும் அன்புடன்
    பாலா
    *********************


  25. rv said...

    பாலா,
    ரொம்ப நன்றிங்க. ஆனாலும் வஞ்சப்புகழ்ச்சி கூடாது. :)

    பை தி வே, ரெண்டாவது மேட்டருக்கும் இப்போ இதுக்கும் சேர்த்து தோணுறது. தப்பா நினச்சுக்காதீங்க.

    காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
    ஞாலத்தின் மாணப் பெரிது


    ஹி ஹி.. ரொம்ப டான்க்ஸு.


  26. லதா said...

    // உளவு பாக்குறதுக்குன்னு வந்தா ரகசியமாத்தானே வரணும்?? கோச்சுக்காதீங்க. //

    உங்கள் உளவுப்பயணம் மங்கள(ல)கரமாக முடிந்ததா ? வாழ்த்துகள் :-)))


  27. பத்மா அர்விந்த் said...

    ராமனாதன்
    திருப்பூர் பாலாஜி பற்றி தான் பரபரப்பு, அதுவும் குமாபிஷேகம் போது கருடன்கள் கோவிலை சுற்றீ வந்ததாக கூட. கோவில்களுக்கு பரபரப்போ நல்ல சாப்போடோ இல்லை என்றால் பெருமாளுக்கே பயமாய் போய்விடும் தனிமையில்.நல்ல கட்டுரை


  28. rv said...

    லதா,
    மங்கலத்துக்காகத்தான் போனேன். ஆனால் எனக்கில்லை. தெரிஞ்சவங்களுக்கு. நல்லாவே நடந்துச்சு.

    வாழ்த்துகளுக்கு நன்றி.


  29. rv said...

    நன்றி தேன் துளி,
    //கோவில்களுக்கு பரபரப்போ நல்ல சாப்போடோ இல்லை என்றால் பெருமாளுக்கே பயமாய் போய்விடும் தனிமையில்.//
    :)) உண்மைதான்.

    பல கோயில்களில் 'கோவிந்தா', 'நாராயணா' என்று சத்தமாக கத்தவே பயமாக இருக்கிறது. எங்கே, போரடித்துகொண்டு தனிமையில் இருக்கும் நாராயணன் நம்முன் திடீரென பிரத்தியட்சம் ஆகிவிடுவாரோ என்று! - பாலகிருஷ்ண சாஸ்திரிகள் சொன்னது.


  30. துளசி கோபால் said...

    //6. . கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை.
    அரங்கநாத சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள திருத்தலம்.
    நான் கூட இரங்கநாதர் என்றவுடன் பள்ளிகொண்ட ரங்கநாதரை எதிர்பார்த்தேன்.
    இவர் வித்தியாசமாக இருக்கிறார். //

    அந்த வித்தியாசம் என்ன? 6 வித்தியாசங்களா இல்லே ஒண்ணே ஒண்ணுதானா?
    சொல்லிட்டீங்கன்னா, இன்னிக்குக் கொஞ்சம் நிம்மதியான நிஷ்டை கிடைக்கும்.:-)))


  31. மணியன் said...

    ஒருநாளில் இத்தனை இடங்களா ? நன்றாகவே ஓடியிருக்கிறீர்கள். காடையூர் நானும் சென்றிருக்கிறேன்.புதிதாக திருப்பணி செய்திருக்கிறார்கள். பொள்ளாச்சி மகாலிங்கம் கூட அக்கோவிலில் அதிக ஆர்வமுள்ளவர். காங்கேயம் அருகில் சிவமலை முருகன் கோவில் போயிருக்கலாம்.

    கோவை அருகே காரமடையிலும் சரி மொண்டிப்பாளையத்திலும் சரி அரங்கநாதனையும் வெங்கடேசனையும் சுயம்புவான கல் வடிவில் வழிபடுகிறார்கள். கவசத்தை எடுத்துப் பார்த்தால் உள்ளே உருவம் இருக்காது. காரமடை தேர் மிகவும் விசேடம்.

    கேஜி டெனிம் மில்ஸ் வெங்கடாசல கோவில் தற்கால கோவில். வால்பாறை பாலாஜி கோவில் வழக்கமான பளிங்கு பிர்லா மந்திர் . அங்கு பிர்லாவின் தேயிலை தோட்டங்களிற்கிடையே உள்ளது.போதுங்களா ?


  32. rv said...

    அக்கா,
    நான் பதில் சொல்வதற்குள் மணியன் சார் வந்து சொல்லிட்டார். நிஷ்டை அல்ரெடி கைகூடிடுச்சா?


  33. rv said...

    மணியன்,
    சிவன்மலை, சென்னி மலை முன்னரே பார்த்திருக்கிறேன். சிவன் மலையில் தான் முருகன், பக்தர்கள் கனவில் வந்து வருடத்திற்கு ஓர் ஐட்டத்தைக் கேட்டுப் பெறுவானே? ஆச்சரியமான விஷயம் அது.

    சுயம்பு வெங்கடேசர் விநோதம் தான்.

    //அங்கு பிர்லாவின் தேயிலை தோட்டங்களிற்கிடையே உள்ளது.போதுங்களா ?
    //
    நன்றி நன்றி. போதும் போதும்.


    உங்கள் ஊர் பெருமை போதும். :))



    பள்ளிகொண்ட இரங்கநாதரைத் தெரியும். பள்ளி கொண்ட சுருட்டப்பள்ளி சிவனையும் தெரியும். பள்ளி கொண்ட சக்ராயுதம் தரித்த இராமனைத் தெரியுமா? :)

    பெருமாள் கோயில்களில் தான் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள். ஆனால் அப்பரும், ஞானசம்பந்தரும் அங்கப்பிரதட்சணம் செய்த, நாமும் செய்யக்கூடிய ஓரே சிவன் கோயில் தெரியுமா? தனியாய் தெற்கு நோக்கி காலபைரவர் தனியாக எங்கிருக்கிறது தெரியுமா?

    எம்பெருமான் அகத்தியருக்கு தமிழிலக்கணம் கற்றுத்தந்த ஊர் தெரியுமா?

    இருபத்தியேழு நட்சத்திரங்களையும் தன் வாலிலே அள்ளிச் சுருட்டி நிற்கும் அனுமாரைத் தெரியுமா?

    ஹி ஹி.. எல்லாம் நேற்றைக்கு பார்த்தது. விரைவில் பதிவிடுகிறேன். தஞ்சாவூர் புகழை சொன்னாப்போலவும் ஆச்சு, அடுத்த பதிவுக்கு முன்னுரையிட்டாற் போலவும் ஆச்சு. இல்லையா?


  34. ரவி said...

    உங்கள் பதிவு சிறந்த நடையில் அருமையா உள்ளது...வாசிக்க ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு..


  35. rv said...

    செந்தழல் ரவி,
    மிக்க நன்றி.


  36. Unknown said...

    பண்பாட்டு தலைநகராம் கோவை பற்றி தங்கள் பதிவுகள் அருமையிலும் அருமை.தொடரட்டும் உங்கள் இந்தப் பணி.கோவையில் வாரம் தோறும் நடை பெரும் இலக்கிய/ஆன்மிக கூட்டங்கள் பற்றியும் இன்னும் பதியவைத்தால் நலம்


  37. Anonymous said...

    வெள்ளியங்கரி மலையில் சித்ரா பெளர்ணமி அன்று ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஏறி (ஏழு மலைகள்)சிவனை வணங்குவர்.


  38. சேதுக்கரசி said...

    நீங்க கோவையில் படிச்சீங்களா?

    //கே.ஜி.டெனிமின் பங்காளியோ விருந்தாளியோ என்று சொல்லி ஒரு லெட்ஜரில் கையெழுத்திட்ட பின்னரே செல்லவேண்டும்//

    நான் 2003 பிப்ரவரியில் அங்கே போனேன். அப்போ அப்படி இல்லை.

    //உண்டியல் கூட கிடையாது//

    ஆமாம், ஆனால் நாம் தர விரும்பும் தொகையை நன்கொடையாக வாங்கிக்கொண்டு ரசீது தந்தார்கள்.

    இது ரெண்டாவது "தென் திருப்பதி". ஒரிஜினல் "தென் திருப்பதி" எது தெரியுமா? காரைக்குடிக்கு அடுத்தாற்போலுள்ள ஊரான அரியக்குடி என்ற கிராமத்திலுள்ள பெருமாள் கோவில். அடுத்த முறை காரைக்குடி போறப்ப போயிட்டு வாங்க. காரைக்குடி - தேவகோட்டை செல்லும் சாலையிலிருந்தே அந்தக் கோவில் கோபுரம் தெரியும்.


  39. Unknown said...

    தொடர்ந்து பதிவுகளை பதியுங்கள்
    வல்லமை தாராயோ
    இந்த மானுடம் உய்வதர்கே


  40. Unknown said...

    நேற்று கோவை மாநகராட்சி கலையரங்கில் t.v. வரதராஜன் அவர்களின் "plastic god" பிரமாதம். sun tv "கோலங்கள்" அபிசேக் பார்வையாளர்கள் அனைவரையும் அன்பு பராட்டியது சிறப்பாகும்-nellai kanna-26-01-2008


  41. rv said...

    நெல்லை, சேதுக்கரசி, அனானி,
    மிக்க நன்றி!


  42. Unknown said...

    கோவையில் நேற்று கணியதமிழ்(kaniyatamil.com) நிறுவனர் அருள்மிகு சிவனடியார் கபிலனின் "வரியுருமா" எனும் தமிழ் மெல்லியம்(software)பற்றி செயல் விளக்க்கம் தந்தார்.இத் தகவலை உங்கள் நண்பர் அனைவருக்கும் தெரிவிக்கவும்.
    ultimate conversion software in tamil. it removes all hurdles in tamil typing.-nellaikanna
    தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சார தலைநகராம் கொங்குசீமை கோவையில் 26-01-2008 அன்று வரியுருமாவின் வண்ணமிகு வனப்புகளின் ஆனந்த தாண்டவம்(களி நடனம்) கண்டு மகிழ்ச்சி. என் நண்பர்கள் ஈகலப்பை (tamil unicode software freele downloadable) யின் சுவையில் மகிழ்கிறார்கள்.இனி அவர்களுக்கு சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழியப்போவது வரியுருமா எனும் மெல்லியம். என்று சொன்னால் அது மிகையாகாது.

    எனது அன்புக் காணிக்கை

    வாரி வழங்கும் வரியுருமா


    கன்னித் தமிழ் காக்கும் கவின்மிகு கபிலரே
    கடிதம் வரைய கரமாய் உதவும் கடிதா
    கசடாய் உலாவும் எழுத்தை மாற்றும் பார்க்க
    காணும் உருவங்களை விருப்பமாக செய்யும் மாற்றா
    கனவில் வருபனவற்றை நனவாக்கும் நண்பன் சேர்க்கா
    காட்சிகளை சேமிக்கும் எதிர்காலத் தோழன் வடிவா
    கடவுளின் அனுக்கிரகம் பூரணமாய் கிடைக்க பிரார்த்திக்கும்
    please visit www//kaniyatamil.com and give wide publisity to the best and dedicated works of sri. kabilan and his associates


  43. Unknown said...

    கோவை ராம் நகர் மங்களா (27-01-2008 அன்று) இண்டர்நேஷனல் ஹோட்டல் உள் அரங்கில் INDIAN MIND POWER ASSOCIATION சார்பில் இந்த மாத நிகழ்வு மனோசக்தி மாசில்லமணி சீரிய வரவேரற்புரையுடன் இனிது நடந்தேறியது."விரல் நுனியில் வெற்றி" என்பது பற்றி erode success jeyachandran சிறப்பாக பேசினார்.

    மாலையில் பாரதிய வித்யா பவனில் KMC HOSPIAL,COIMBATORE DR.SRINIVAASAN M.D,DPM "பேசு மனமே பேசு" பற்றி சுமார் 2 மணி நேரம் மனநலம் பற்றி பேசினார்-nellai kanna-28-01-2008


  44. Unknown said...

    தாய்மை
    _________
    ஆறு முறை பூமியை வலம் வருதலும்
    நூறு முறை சேது ஸ்நானம் செய்தலும்
    ஆயிரம் முறை காசியில் குளித்தலும்
    ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம்,தாயை பக்தி பூர்வமாக
    ஒரு முறை வணங்கினாலே கிடைக்கும்
    -(தொகுப்பு-நெல்லை கண்ணா)29-01-2008


  45. சேதுக்கரசி said...

    எப்படியோ இந்தப் பதிவு தினமும் தமிழ்மணத்துல வந்துருது :-)))


  46. Unknown said...

    இன்று கோவை r.s.puram அன்னபூர்னா
    கலை அரங்கில் அருளாளர் r.m.v அவர்களின் வாழ்க்கை வரலாறு "rmv ஒரு தொண்டர்" புத்தகத்தின் 3ம் பதிப்பின் வெளியிடு மிகச் சிறப்பாக நடந்தேறியது.வானவராயர்,சத்யராஜ்,மரபின் மைந்தன் முத்தையா,ராணிமைந்தன்,ஒளவை நடராஜன் புத்தகம் பற்றி பராட்டுரை வழங்கி சிறப்பு செய்தனர்.
    -நெல்லை கண்ணா(08-02-08)


  47. rv said...

    நெல்லை கண்ணா,
    நேரமிருப்பின் ramanathan.blog@gmail.com க்கு ஒரு மின்மடல் அனுப்பவும்.


    நன்றி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்