தத்து(பி)த்துவம் - 3: Extinction - R

முதல்ல ஒரு புது பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்கு பத்தி. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி இந்தோனேசியாவில் இருக்கும் போர்னியோ பகுதில பூனை சைஸுக்கு இருக்கும் இந்த புதுவகை மிருகம் காமிராவில மாட்டியிருக்கு. இருக்கறது ரெண்டே ரெண்டு போட்டோதான். லீமர் (Lemur) என்று அழைக்கப்படும் வகை தான் இது என்றும் இல்லை கீரிப்பிள்ளைப் போன்றது என்றும் சொல்வோர் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் இது புது வகை மிருகம் தான் நம்பறாங்க. இதுவரைக்கும் உயிரோட பிடிக்க முடியவில்லை. அதுக்கப்புறந்தான் சந்தேகம் நிரந்தரமாத் தீரும். முழுசா பிடிக்கணும்னு கூட இல்லை. அதோட முடியோ, கழிவுகளோ கிடைச்சா கூட போதும். டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் என்ன வகைன்னு எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

இப்ப வரைக்கும் இது மாமிசபட்சினியாக இருக்கும்னும், prehensile tail இருப்பதால் arboreal ஆக இருக்கலாம்னும் யூகிக்கறாங்க. Stephan Wulffraat கறவர் தான் WWF சார்பா இந்த குழுவை வழிநடத்துகிறார். எதுக்கு இவ்வளவு முக்கியமா இதுபத்தி பதிவுன்னு கேக்கறீங்களா? கடைசியா இவ்வளவு பெரிய புது விலங்கினம் கண்டுபிடிச்சு நூறு வருடங்களுக்கு மேல ஆகிவிட்டது!
Al-Jazeera

உலகிலேயே மொத்தமா 5000 பாலூட்டி ஸ்பிஸீஸ்கள் தான் இருக்கின்றன. ஆனா, இதப் பத்தி உண்மை தெரியாமலேயே கூட போய்விடலாம். ஏன்னா, இந்த உயிரினம் கண்டுபிடிக்கப்பட்ட காடுகளை அழித்து உலகின் மிகப் பெரிய பனை எண்ணெய் தோப்பை உருவாக்க இந்தோனேஷிய அரசு முயன்று வருகிறது. 1.8 மில்லியன் ஹெக்டேர்ஸ் (தமிழ்நாட்டின் பரப்பளவில் 15%!). தவிரவும் வருடாவருடம் முறையற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் மட்டுமே 2.8 மில்லியன் ஹெக்டேர்ஸ் காடுகள் அழிக்கப்படுகின்றன (தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால் 20% வருடாவருடம்!). இவற்றை எதிர்த்து WWF ம் மற்றும் பல தன்னார்வ நிறுவனங்களும் போராடி வருகின்றன. இதுவரை விடியலில்லை. இதுவெறும் இந்தோனேஷியாவில் மட்டுமல்ல தென்னமெரிக்கா, ஆப்பிரிக்க கண்டம், இந்தியத்துணைக்கண்டம்னு எல்லா பகுதிகளிலும் 15million ஹெக்டேர்கள் அழிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் கேடு மற்றும் ஆயிரக்கணக்கான வகை உயிரினங்களை விரைவில் ஜூக்களில் மட்டுமே நம் பிள்ளைகள் பார்க்கமுடியுமென்ற நிலைக்கு அதிவேகமாக சென்றுகொண்டிருக்கிறோம்.

கடந்த நானூறு ஆண்டுகளில் மட்டும் 89 பாலூட்டி விலங்கினங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 169 பாலூட்டி இனங்களை Critically Endangered என்று வகைப்படுத்தி அவற்றையும் சீக்கிரமே பரமபதம் அனுப்பவும் முயன்றுகொண்டிருக்கிறோம். எல்லாவகை உயிரினங்கள் என்று கணக்கிலெடுத்தால் (நுண்கிருமிகள், காளான்கள் முதல் திமிங்கிலங்கள் வரை) ஆண்டுதோறும் 27,000 வகை உயிரினங்கள் அழிந்துவருவதாய் பயமுறுத்துகிறார்கள். 27,000. ஓவ்வொரு ஆண்டும்! அதாவது சராசரியாக 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு விலங்கு வகை முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. கடைசி வரியை திரும்ப படித்துப்பாருங்கள். பார்த்துவிட்டு படிப்பதை நிறுத்தி ஒரு நிமிடம் யோசியுங்கள். பிரச்சனையின் தீவிரம் எளிதாகப் புரியும். இதே விகிதத்தில் சென்றால் இன்னும் நூறே ஆண்டுகளில் இப்போதுள்ள உயிரினங்களில் சரிபாதி அழிந்திருக்குமென்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.

extinct ஆவது ஒன்றும் இயற்கைக்கு மாறானதல்ல. உலகம் தோன்றியதிலிருந்து 99.9% உயிரினங்கள் அழிந்து மீண்டும் புதிய இனங்களாக உருவெடுத்துத்தான் வந்திருக்கின்றன. ஆனால் விகிதமே பிரச்சனை. ஒரு இனம் அழிந்து அதற்கு ஈடாக புதிய இனம் மூலம் replenish ஆவதற்கு 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் வரை பிடிக்கும். 200,000 மனித தலைமுறைகள்! இதுதான் பிரச்சனையே. பொருளாதார, அறிவியல், மருத்துவ வளர்ச்சியால் குறைந்தபட்ச ஆயுள் நீடிக்கிறது. இதனால் ஒரு vicious cycle ஆக மக்கட்தொகை விண்ணை நோக்கி பாய்கிறது.

பெருகப்பெருக நகரங்களில் இடமின்றி, resources காகவும், இருக்க இடத்திற்காகவு சகட்டுமேனிக்கு காடுகள் அழிப்பது அதிவேகமாய் நடந்துவருகிறது. இந்த 5,700 கோடி மக்கள்தொகைக்கே இவ்வளவு என்றால், இன்னும் நாற்பத்திமூன்றே ஆண்டுகளில் 10,000 கோடியாகிவிடும் என்கிறது ஒரு கணிப்பு. அதுவரை எத்தனை இனங்கள் தாக்குப்பிடிக்குமோ என்று தெரியவில்லை.

நம் தேசிய விலங்கான புலிகளின் எண்ணிக்கையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இயற்கை சூழலான சுந்தர்பன்களில் பெங்கால் புலிகளின் மொத்த எண்ணிக்கை 800-ஐ தாண்டாது என்று சில புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த பேரழிவை சீக்கிரம் தடுத்து நிறுத்தாவிட்டால் காடுகளும், அதனோடு கூடவே பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் கூண்டோடு கைலாசம் போகவேண்டியதுதான். அடுத்த செய்தியில் உள்ள உயிரினம் இதற்கு ஒரு எச்சரிக்கை மணி. மனிதனின் அழிக்கும் சக்திக்கு ஒரு அருமையான உதாரணம்.

மோரீஷியஸின் டோடோ (போர்த்துகீஸ் மொழியில் முட்டாள் என்று அர்த்தம்) (Raphus cucullatus) பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். சுமார் 20 கிலோ வரை எடையும், மனிதர்களை கண்டால் பயப்படாத தன்மையும், பறக்கமுடியாதவையாகவும் இருந்தன. பறக்கமுடியாததால் எளிதில் உணவாகின. மனிதர்களுக்கல்ல. காலனியாளர்கள் கொண்டு வந்த மற்ற மிருகங்களினாலும், தமது காடுகள் அழிக்கப் பட்டதாலும். மோரிஷியஸில் பல மில்லியன் ஆண்டுகள் எந்த இன்னலுமின்றி வாழ்ந்து வந்த டோடோக்கள் (natural predators இல்லாததால்; மோரிஷியஸ் காலனியாளர்களுக்கு முன் uninhabited ஆக இருந்தது) 1600 -களில் முதல் டச்சுக்கள் வந்து எண்பதே ஆண்டுகளில் மொத்த டோடோ இனத்திற்கும் பரலோக டிக்கெட் கொடுத்துவிட்டனர். வெறும் 80 ஆண்டுகள்.

மேலும் விவரங்களுக்கு,
Red List
Bagheera

---
சரி நம்ம தத்து(பி)த்துவத்துக்கு வருவோமா? என்னுதில்ல. எங்க படிச்சதுன்னு நினைவில் இல்லை.

மனிதனே இவ்வுலகில் படைக்கப்பட்ட ஜீவராசிகளிலும் most adaptible, most sentient, most intellectual இனமா? அதாவது நாமே மற்ற்அ ஜீவராசிகளைவிட முதன்மையானவர்களா?

ஒரு பாக்டீரியாவை எடுத்துக்கொள்ளுவோம். ஒரே செல் உயிரினம். எல்லா இனங்களும் இருப்பது இனப்பெருக்கத்திற்காகத்தானே உயிரியல் படி பார்த்தால். தங்களின் ஜீன்கள் அடுத்த தலைமுறைக்கு அளித்துவிட்டால் பயலாஜிக்கலாக நம் கடமை முடிந்துவிடுகிறது. அடுத்த தலைமுறைக்கு வாழ்வில் ஒரு headstart கொடுக்கலாம். அதுவும் எல்லா உயிரினங்களும் செய்வதில்லை. 'இருப்பது (live)' 'இனப்பெருக்கம்' இந்த ரெண்டுத்தையும் ஒரு ஒரே செல் உயிரினம் நம்மைவிட பலமடங்கு அருமையாக செய்து கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்து எங்கும் வியாபித்திருக்கின்றன. நமக்குள்ளும் வெளியும் என பாக்டிரியாக்கள் இல்லாத இடத்தை இந்த உலகில் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமான வேலை. ஆனால், இதே பயாலாஜிக்கல் கடமைக்கு நமக்கு பில்லியன்கள் கணக்கில் செல்கள் தேவைப்படுகின்றன. நாம் பயன்படுத்தும் பொருட்களின் எவல்யுஷ்னைப் பார்த்தால் உண்மை எளிதில் விளங்கும். ஒரு அறை சைஸில் இருந்த கணினிகள் இன்று கையடக்கமாகிவிட்டன. ஆக, போகப்போக பொருட்களின் அளவு குறைகின்றது. ஆனால் திறன் அதிகரிக்கிறது. ஆகவே, பாக்டிரியாக்கள் மனித இனத்தை விட மேன்மையானவை.

இது எப்டி இருக்கு?

Merry Christmas!

12 Comments:

  1. rv said...

    test முடிஞ்சுதா?


  2. தாணு said...

    டாக்டருக்கு பாக்டீரியாதான் பிடிக்கும், கடை நடத்தணுமில்லே!


  3. rv said...

    //கடை நடத்தணுமில்லே//
    இல்லியா பின்ன..

    இருந்தாலும் fascinating things.. பாக்டீரியாக்களும் வைரஸ்களும் என்னைப் பொருத்தவரை. தக்கணூண்டு இருந்துகிட்டு நம்மையே ஆட்டி படச்சிடுதுங்களே!


  4. குமரன் (Kumaran) said...

    extinction பத்தி ஒரு அருமையான பதிவு டாக்டர்.

    கடவுளும் பாக்டீரியாக்களும் ஒன்று
    உள்ளும் புறமும்
    அணுவுக்குள் அணுவாய்
    அப்பாலுக்குள் அப்பாலாய்
    இல்லாத இடமே இல்லாமல்
    எங்கும் நீக்கமற நிறைந்து
    கரந்து இருப்பதால்...


  5. rv said...

    நன்றி குமரன்,

    //கடவுளும் பாக்டீரியாக்களும் //
    இந்த காலத்தில் ரெண்டுத்துலேர்ந்தும் நம்மை "காத்துக்க" நிறையவே மருந்துகள் கண்டுபிடித்துவைத்திருக்கிறோம். ;)


  6. ஏஜண்ட் NJ said...

    //போகப்போக பொருட்களின் அளவு குறைகின்றது. ஆனால் திறன் அதிகரிக்கிறது.//

    அப்டீன்னா,

    தொண்டர்களே இல்லாத கட்சியும்...

    ரசிகர்களே இல்லாத நடிகரும்...

    பின்னூட்டம் குறைந்த பதிவுகளும்...

    ????



    :-))))


  7. rv said...

    //அப்டீன்னா,

    தொண்டர்களே இல்லாத கட்சியும்...

    ரசிகர்களே இல்லாத நடிகரும்...

    பின்னூட்டம் குறைந்த பதிவுகளும்...

    ????//
    ஞாபீ,
    :))
    வழியறதத் தவிர வேறென்ன சொல்றது?


  8. ரங்கா - Ranga said...

    மனித குல முன்னேற்றம் பிற உயிரினங்களுக்கு ஆபத்து என்றாகிவிட்டது வேதனையானது.

    'திறன்' என்பதை நீங்கள் எழுதியபடி நிச்சயமாக விளக்கலாம். அதன் படி ஒரு செல் உயிரினங்கள் தான் மேலானவை - அடிப்படைத் தகுதியான இனப்பெருக்கத்திற்கு. ஆனால் இனப் பெருக்கம் ஒன்றுதான் தகுதியா என்றும் தோன்றுகிறது.

    பிகு: நீங்கள் 'திறன்' பற்றி எழுதியது சில வருடங்களுக்கு முன் என் தந்தை எழுதிய கவிதையை ஞாபகப் படுத்தியது - ஒரு பதிவே போட்டுவிட்டேன்.


  9. rv said...

    ரங்கா,

    //ஆனால் இனப் பெருக்கம் ஒன்றுதான் தகுதியா என்றும் தோன்றுகிறது.
    //
    இதைத் தவிர்த்த மற்ற தகுதிகளெல்லாம் மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை தானே. விலங்கினங்களை அதனால் அளவிட முடியாது. இல்லையா?

    கவிதை பார்த்தேன். உண்மையான வார்த்தைகள்.

    நன்றி


  10. ரங்கா - Ranga said...

    "இதைத் தவிர்த்த மற்ற தகுதிகளெல்லாம் மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை தானே. "

    உண்மை!!!!!!


  11. Ram.K said...

    இந்த விஷயத்தை (பிரச்சினையை)விரிவாக எடுத்துச் சொன்னதற்கு நன்றி.


  12. rv said...

    நன்றி,
    பச்சோந்தி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்