மருதைக்கு போலாமா? - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF

இது சென்ற பதிவின் தொடர்ச்சி.

பழநிக்கு சுமார் 5 கி.மீ முன்னாடியே மலை தரிசனம் செய்யலாம் என்று போர்ட் வைத்துள்ளார்கள். இரவு நேரத்தில் மலை ஜெகஜ்ஜோதியாய் ஜொலிப்பது அழகு. எப்போது பழநி சென்றாலும் திருப்பூர் லாட்ஜில் தான் தங்குவது. comfortable என்று சொல்வார்களே அந்த வகை ஓட்டல் தான் இது. குறிப்பாய் ஓட்டலின் சைடில் புதிதாய் கட்டப்பட்டிருக்கும் ரூம்கள். மெயின் பில்டிங்கினுள் சுமாராகத்தான் இருக்கும். நல்ல சீசன் வேளையில் சென்றால் ரூம் கிடைப்பது கஷ்டம், அதனால் முன்பதிவு செய்துகொள்வது நல்லது. தண்டாயுதபாணிக்கு கேரளாவில் பக்தர்கள் அதிகம் போல. பல KL வண்டிகளைப் பார்க்கலாம். மாலையாகி விட்டதால் தங்கரதம் பார்ப்பது இயலாத காரியம் என்பதாலும், அடுத்த நாள் காலை பூஜைக்கு டிக்கட் இருந்ததாலும் நேராக நளபாகம் தான். எங்களுது இல்லை. ஹோட்டலின் உணவகத்தின் பேரிது. பெரும்பாலும் நன்றாக இருந்தாலும், அங்கே சமைக்கும் ஹெட் நளனின் மூடிற்கு தகுந்தாற்போல் தரமும் மாறுவதுண்டு. குளிரில் காது வெடவெடக்க ஏசிக்கு நேர் அருகில் தான் இடம் கிடைத்தது.

அதென்னவோ தெரியவில்லை, இங்கே வெளியூரில் இருப்பதாலோ என்னவோ, இல்லை எங்கள் வீட்டில் இதெல்லாம் செய்வதில்லை அதனாலோ, வெளியில் சாப்பிடச் சென்றால் அநேகமாக நான் சாப்பிடுவது பரோட்டா தான். இந்த வடக்கத்திய நான், நீ எல்லாம் சாப்பிட்டு போரடித்துவிட்டது. சும்மா இந்த மசாலா, அந்த மசாலா என்று அலட்டுவது வட இந்திய சமையல். ஆனால், நம்மதிலோ மிஞ்சிப்போனால் சாம்பார்ப் பொடி, ரசப்பொடி, காரப்பொடி. இதை வைத்தே வித்தைகள் காட்டுவது தமிழ்ச்சமையால் ஆயிற்றே. பரோட்டா..ஆஹா, பல லேயர்களை கொண்ட பரோட்டாவை கஷ்டப்பட்டு லாவகமாக ஒரே கையால் பிய்த்து கூட தொட்டுக்க இருக்கும் வெங்காயப் பச்சடியில் முக்கி சாப்பிட்டால் தெய்வாம்ருதம் தான். குருமாவை விட பச்சடியே பரோட்டாவிற்கு சிறந்தது என்பதுதான் என் கட்சி. தோசையை விட பரோட்டாவின் மேன்மை அதிகம்! ஒன்று தின்றாலும் வயிறு நிரப்பும். தோசைக்கு வேண்டியதைப் போல தேங்காய்ச்சட்னி, காரச்சட்னி, சாம்பார், தோசை மிளகாய்ப் பொடி போன்ற அக்ஸெஸரிகள் தேவையில்லை. வெறும் வெங்காயப் பச்சடி போதும். இப்படி நிறைய. தன்னைப் போலவே வாழ்க்கையும் பல லேயர்களைக் கொண்டது என்று சூசகமாக ஒரு வாழ்க்கைமுறையையே காட்டுகிறது இந்த பரோட்டா. இந்தப்பதிவின் தத்துவக் கோட்டா ஓவர், இல்லை?

பரோட்டாவை விடுங்கள். இந்த சில்லி பரோட்டா இருக்கே. அடாடாடா! ஒரு முறை மதுரைக்கு சென்ற போது என் அப்பா மலரும் நினைவில் மூழ்கி காலேஜ் ஹவுஸில் சாப்பிடுவோம் என்றார். பேர் பந்தாவாக இருக்கிறதே என்று நானும் தம்பியும் அப்பாவியாக தலையாட்ட, ஓட்டல் வாயிலில் நுழைந்தவுடன் தான் நாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்தோம். ஏதோ திருவல்லிக்கேணி மேன்ஷன் மாதிரி ஒரு ஓட்டல். இதுக்கு ஏதோ ஆக்ஸ்போர்டில் இருக்கா மாதிரி காலேஜ் ஹவுஸ்னு ஒரு பந்தாவான பேரு என்று நொந்துகொண்ட எனக்கு, அப்பா சொன்னது.. 'சாப்ட்டு பாரு. அப்புறம் சொல்லு'. முதல் இம்ப்ரெஷனே சரியில்லை. இதில சாப்பாடா என்று யோசித்துகொண்டிருந்த போது, என்னவோ குருட்டு தைரியத்தில் சில்லி பரோட்டா ஆர்டர் செய்தேன். வந்ததோ பல பீஸ்களை கொத்து பரோட்டாவாக செய்து அதை நன்றாக காரப்பொடியில் மிக்ஸ் செய்து ஆங்காங்கே சிம்லா மிர்ச்சி. காரம் பிய்த்தாலும் விடாமல் மூன்று பிளேட் வாங்கி சாப்பிட்டேன். அவ்வளவு நன்றாக இருந்தது. சரி, ரிடர்ன் டு நளபாகம்.

இங்கேயும் பரோட்டா தான். சாப்பிட்டுவிட்டு ரூமில் WWF பார்த்துவிட்டுத் தான் தூக்கம். இந்தியாவில் இருக்கும் வரை ரெகுலராய் தினமும் பார்க்கும் விஷயம் இந்த WWF. ஸ்டாரில் TNA சரியில்லை. அவ்வாறில்லாமல் தினமும், ஏதாவது லூட்டி அடிப்பார்கள் இந்த WWF-ல். இந்தக் கோடையில் Eddie Guerrero-Rey Mysterio போன்ற சூடான பல நிகழ்வுகள். ஆமா, இந்த சம்மர் ஸ்லாமில் என்னங்க ஆச்சு? யார் ஜெயிச்சது? ஹல்க்-கா இல்ல ஷானா?

அடுத்த நாள் காலை 530க்கெல்லாம் எழுந்து ரெடியாகி 545க்கெல்லாம் விஞ்ச் ஸ்டேஷனிற்கு சென்றாகிவிட்டது. இந்த விஞ்ச்க்கு புதிய ரோப்-கார்கள் வந்தபின் கூட்டம் குறைவாம். காலை வெட்டியெடுத்துக் கொண்டுதான் பெட்டிகளில் உட்காரவேண்டும் என்ற அளவிற்கு சிறிய கார்கள் கொண்டது இந்த விஞ்ச். காலை வேளையில் சூலமங்கலம் சகோதரிகள் கந்தர் சஷ்டி கவசம் பாட மிகப் பொறுமையாய் மலைமேல் ஏறுகிறது. வழிநெடுக தேவஸ்தானம் Terrace பூங்காக்கள் அமைத்துள்ளனர். பூக்கள் குலுங்க பார்க்கவே அழகாய் இருக்கிறது.

இந்த இடத்தில் எனது முதல் திருப்பதி பயணம் நினைவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு என் தாத்தா பாட்டியுடன் சென்றிருந்தேன். அப்போது சாமி தரிசனம் எல்லாம் செய்துவிட்டு திரும்புகையில் APSRTC கேண்டீனில் ஆவக்காயை பிசைந்து சாதம் சாப்பிட்டுவிட்டு வயிறு பிராண்ட கீழ்த்திருப்பதி பஸ்ஸில் ஏறினோம். பஸ் கிளம்ப வண்டியை ஓட்டுநர் ஸ்டார்ட் செய்தவுடன், ஏதோ ஒரு புண்ணியவான் "கோயிந்தா கோயிந்தா!" என்றார்! அவருடன் சேர்ந்து பலரும் இந்த மாதிரி கோவிந்தனை கூப்பிட ஆரம்பித்தனர்! எங்களுக்கு ஆவக்காயை சாப்பிட்டது மறந்தே போய் விட்டது. என்னடா, பஸ் மிகவும் ஆபத்தான மலைப்ப்ப்பாதையில் இறங்கும் போது, இவர் இப்படி கோவிந்தன் சரணடி அடைய அவசரம் காட்டுகிறாரே என்று. பல வளைவுகளில் பஸ் திரும்பும்போதும் அதே ஆசாமி கதற அவர் கூடவே சக பயணிகளும் கத்த அது ஒரு காமெடி.

இப்போது விஞ்ச் பொறுமையாய் உச்சியை அடைந்தவுடன், இறங்கி, பிரகாராத்தை சுத்தி கோயிலின் பின்புறத்தில் ஒரு நுழைவு வழியே நுழைந்தோம். அங்கே சிறப்பு தரிசன க்யூவிற்கான கம்பிதடுப்புகளை எல்லாம் தாண்டி, உள்ளே சென்று ஒருமுறை முருகனை அவசரமாய் தரிசித்துவிட்டு மீண்டும் கோயிலுக்கு இடப்பக்கமாய் வெயிட்டிங் பிரகாரம் இருக்கிறது. அதில் காத்துக்கொண்டிருந்தோம்.

(தொடரும்)

இதப் படிச்சாச்சா?

மருதைக்கு போலாமா -1

10 Comments:

  1. துளசி கோபால் said...

    நான் இதுவரை இந்தக் கொத்துப்பரோட்டா என்ற சமாச்சாரத்தைச் சாப்புட்டதே இல்லை(-:

    வாழ்நாள் எல்லாம் வீணே?


  2. தாணு said...

    துளசிக்கு பிள்ளையார் சதுர்த்தி வந்ததிலிருந்து, எல்லாப் பதிவிலும் சாப்பாட்டு விஷயங்களே கண்ணில் படுது.அவங்களுக்கு ஒரு டயட் ப்ளான் சேர்த்து சொல்லிடுங்க ராமனாதன்!


  3. rv said...

    என்னக்கா இது, பரோட்டாவ கொத்தினா அதான் கொத்து பரோட்டா! :)

    சில்லி பரோட்டா ட்ரை பண்ணிப் பாருங்க. சூப்பரா இருக்கும்.

    //வாழ்நாள் எல்லாம் வீணோ? //
    சந்தேகமேயில்ல, வீணே தான்!

    தாணு,

    ஆமா, இப்பத்தான் யோசிச்சு பார்த்தேன். இந்தகொழுக்கட்டைல ஆரம்பிச்சு, ஒரே சாப்பாடு பதிவுகள் தான். ஆனா, பாவம் அக்கா, விட்டுடுங்க. கொஞ்ச நாள் எஞ்சாய் பண்ணிட்டுதான் போகட்டுமே!


  4. G.Ragavan said...

    அடடா! பரோட்டா புராணமும் அருமை. கொத்து புரோட்டா கதையும் அருமை.

    பரோட்டாவிற்கு நீங்கள் சொன்னது போல கெட்டித் தயிரில் வெங்காயம் வெட்டிப் போட்டுச் சாப்பிட்டால். அடடா! சரவணபவனுக்குப் போனால் புரோட்டாவோடு தருவார்கள். கூட ஒரு கப் வாங்கிச் சாப்பிடலாம்.

    கொத்து புரோட்டாவில் நிறைய மசாலா போடாமல் இருக்க வேண்டும். ஆனால் அதில் முட்டையெல்லாம் போடுவார்களே ராமநாதன். நீங்கள் எப்படி சாப்பிட்டீர்கள்? சைவக் கொத்து புரோட்டாவும் கிடைக்கிறதா என்ன?


  5. G.Ragavan said...

    அப்புறம் இன்னோன்னு. சால்னா என்று நம்மூர்ப் பக்கம் கிடைக்கும். அதுவும் புரோட்டாவிற் கேற்ற பதிவிரதை. புரோட்டாவைப் பிய்த்துப் போட்டு சால்னாவை ஊற்றிக் குழப்பி அடித்தால்..........ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


  6. rv said...

    ராகவன் சார்,

    சரவணபவன்ல தயிர் எப்போதுமே சூப்பர் தான். பெங்களூர்ல சரவணபவன் இல்லியா? உங்க 'பெங்களூரில் ஓட்டல்கள்'-ல பாக்கலியே?

    பரோட்டாவை விண்டு பீஸ்களாக்கி மசாலாவுடன் சேர்த்து ஒரு quick fry தானே கொத்து பரோட்டா? சில்லி பரோட்டா என்பது கொத்துபரோட்டாவின் ஒரு version என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்.

    முட்டையெல்லாம் சைவத்தில சேர்த்து பலகாலமாச்சே..தெரியாதா உங்களுக்கு?? :)

    சால்னா பத்தி கேள்விப்பட்டதேயில்லை. குருமா மாதிரியா? நீங்க பாட்டுக்கு சொல்லிட்டிங்க.. அங்க பாருங்க.. நியுஸிலே ஒருத்தங்களுக்கு இந்நேரம் மூக்கில வேர்த்திருக்கு. ;)


  7. G.Ragavan said...

    பெங்களூரில் சரவணபவன் இல்லை ராமநாதன். :-(

    அது சரி. ரெண்டாவது பாகம் போட்டிருக்கேன். பாக்கலையா?

    முட்டை என்ன, பெங்காலிகளுக்கு மீன், கோழி எல்லாமே சைவந்தான்.

    சில்லி பரோட்டா என்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. சில்லி சிக்கன் போல பரோட்டாவை வைத்துச் செய்வார்கள். கொஞ்சம் ஹெவி.

    சால்னான்னா குருமா போலத்தான். கொஞ்சம் தண்ணியா இருக்கும். ஆனா ஜம்முன்னு இருக்கும். இதெல்லாம் பெங்களூரில் கெடச்சா எவ்வளவு நல்லாயிருக்கும்.

    நியூசில யாரு இருக்கா?


  8. rv said...

    ராகவன் சார்,

    //பெங்களூரில் சரவணபவன் இல்லை//
    ஓ... என்ன உலகத்தில எல்லா இடத்திலேயும் திறந்துட்டாங்க (இங்கேயும் இல்ல :( ). ஆனா, அடுத்தாப்புல இருக்கற பெங்களூர்ல இல்லியா?

    //நியூசில யாரு இருக்கா? //
    நம்ம துளசியக்காவ மறந்துட்டீங்களே :)


  9. G.Ragavan said...

    // ஓ... என்ன உலகத்தில எல்லா இடத்திலேயும் திறந்துட்டாங்க (இங்கேயும் இல்ல :( ). ஆனா, அடுத்தாப்புல இருக்கற பெங்களூர்ல இல்லியா? //

    அதுதான் கொடுமை ராமநாதன். இனிப்பில்லாத தயிர்வடை சாப்பிடக் கூட சென்னை வரைக்கும் வர வேண்டியிருக்கு.

    // நம்ம துளசியக்காவ மறந்துட்டீங்களே :) //

    அவங்க ஆஸ்திரேலியால இருக்காங்கன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஹி ஹி.


  10. Geetha Sambasivam said...

    நறநறநறநறநற, இங்கே ஒரு மருதைக்காரி இருக்கும்போது, சீச்சீஇ மதுரைக்காரி இருக்கும்போது, நான் அறியாமல் மதுரை பத்தி ஒரு போஸ்டா? அதுக்காகவே நோ கமென்ட்ஸ்! :P :P :P

    பி.கு. காலேஜ் ஹவுஸ் அந்தக் காலத்தில் மதுரையின் ஸ்டார் ஹோட்டலாக்கும், இப்போ அதன் பெருமை குறைஞ்சு போயிருக்குனு சொன்னாங்க!


 

வார்ப்புரு | தமிழாக்கம்