232. பெண்களுக்கான புரட்சி பட்ஜெட்! - CNN-IBN

மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திரு. சிதம்பரம் தாக்கல் செய்துள்ள நிதியறிக்கையில் புரட்சிகரமான புதியதொரு அம்சத்தை சத்தமில்லாமல் சேர்த்துள்ளார். இதுபற்றி வேறெந்த ஊடகமும் கண்டுகொள்ளாத நிலையில், சிஎன்என் - ஐ.பி.என் மட்டுமே பொறுப்பாக நடந்துகொண்டுள்ளது.


இவ்விடயத்தை பொறுப்புடன் வெளியிட்டுள்ள செய்தி நிறுவனத்துக்கு பாராட்டுகளுடன் நன்றிகளும்!

231. K.I.S(low).S!

பொதுவா இந்த அவசர உலகத்துல எதையுமே நிறுத்தி நிதானமா பார்க்கிறதுக்கு நேரமிருக்குறதில்ல. இந்த லட்சணத்துல நிதானமா செயல் படுறதுக்கா நேரமிருக்கப்போவுது?

அன்றாடம் பயன்படுத்தும் விஷயங்கள்/பொருட்கள்... (கொஞ்சம் எக்ஸ்ட்ரா பொறுமை தேவை)




கொஞ்சம் அடிதடி, குத்து, டமால், டுமீல்!




இது கலை!






இது? பாவப்பட்ட மட்டைப்பந்து ஆட்ட வெறியர்களுக்காக..


டிஸ்கி: அல்லா வீடியோலயும் சவுண்ட் வரும். தலயோடத தவிர.

230. அசுரர்களும் மனிதர்கள்தான்!

மனித வரலாறு மிகவும் விசித்திரமானது. மனிதனுக்கு மனிதன் நம்பிக்கைகளின் பெயரால், மதத்தின் பெயரால், பொருளாசையின் பெயரால் செய்த/செய்துவருகின்ற கொடுமைகள் வரலாறெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. ஹிட்லர், ஸ்டாலின், செங்கிஸ் கான், போல்பாட், சதாம் என நாம் பார்க்கும் கொடுங்கோலர்கள் மக்களை நடத்தியவிதம் அதிர்ச்சியடைய வைக்கின்ற அதே நேரத்தில் ஆச்சரியமும் பட வைக்கின்றது. அந்த ஆச்சரியத்திற்கான காரணம், மனிதன் என்ற நிலையிலிருந்து இவ்வளவு கீழும் இறங்க முடியுமா என்பதேயாகும். அப்படிப்பட்ட குமட்டும் காட்சிகளை அரங்கேற்றிய ஆட்சியாளர்களை நம் புராண இதிகாசங்களில் தோன்றும் அசுரர்களுக்கு ஒப்பாகவும் அவர்கள் மனிதர்களே இல்லையெனும் படியாகவும் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். Surely, நம்மை போன்ற decent and law abiding மக்கள் 'மனிதர்கள்' என அழைக்கப்படும்போது இந்த கொடிய அரக்கர்கள் மனிதர்களாக இருந்திருக்கமுடியாது என்ற பார்வையில் இருக்கும் சவுகரியகங்கள் பல. ‘நான் அவன் இல்லை' அல்லது ‘நாம் அவன் இல்லை' என்று சொல்லும்வேளையில் ஒரு குறிப்பிட்ட கொடுங்கோலன் மனிதனே அல்ல, அவனுக்கும் நமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது சுட்டெரிக்கும் வெயிலில் குளிர்தருவின் நிழல் போல மனச்சாந்தியை அளிக்கிறது. அதோடு கூட, இந்த குளிர்தருவின் நிழலின் எல்லைக்கோட்டிற்கு அப்பால் இருக்கும் உலகில் தற்சமயம் நடக்கும் ஏனைய மனிதத்தை மதிக்காத சர்வாதிகார, எதேச்சதிகார ஆட்சிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, அதில் தலையிட வேண்டிய அவசியமும் நமக்கு இல்லை/தலையிட்டாலும் நன்மை வருவதற்கில்லை என்ற defeatist எண்ணமும் மேலோங்க வழிவகுக்கும். பூனை கண்ணை மூடிக்கொள்வது பூனைக்கு சவுகரியப்படும் போதுதான். அசவுகரியமானவற்றை பற்றி பேச வேண்டியதோ அவற்றை நீக்கவேண்டி செயல்படவேண்டியதோ இல்லை.

மனித குலத்தின் சாபக்கேடே இந்த 'நான் அவன் இல்லை' எண்ணம தான் என்பது என் கருத்து. இவ்வாறு தட்டையாக இல்லாமல், 'ஆம் அந்தக்கொடியவனும் மனிதன் தான். அதே இரத்தமும் சதையும் ஆசையும் கோபமும் வேகமும் காமமும் நம்முள்ளும் இருக்கிறது, என்ன நம்முள் தூங்கிக்கொண்டிருக்கிறது. நம்முள் இல்லாத ஒன்று புதிதாக உற்பத்தியாகி ஒருவனை கொடுமைக்காரனாக, கொலைசெயல் புரியவும் துணிந்தவனாகவும் ஆக்க முடியாது. நம்முள் இருக்கும் தூங்கும் மிருகம் சிலரினுள் விழிப்படைந்து, அம்மிருகத்தை அவனின் அறிவும் மனமும், சுற்றமும் சமூகமும் கட்டுக்கு கொண்டுவரவில்லை' என்பதை உணருதலே நாம் வரலாற்றை கற்றதன் பயனாக இருக்கமுடியும். இப்படி சொல்வதன் மூலமாக ஒருவரின் குற்றத்தைக் குறைத்துக்கூறி, அவன் கொலைசெய்ததற்கு இச்சமூகமே காரணம் என்பது மாதிரியான அபத்தங்களை முன்னிருத்தவில்லை. மாறாக ஒரு குற்றவாளியின், கொலையாளியின் வாழ்க்கையை ஆழ்ந்து பார்த்தால், அவனுக்கும் இருந்த (நம்மைப் போன்ற) மனித முகம் கோரமாக நம்முன்னே பல்லிளிக்கும் என்ற பயத்திலேயே நாம் மனிதர்களாக அப்படிப்பட்ட ஒரு கொடுங்கோலர்களை சித்தரிக்க நாம் துணிவதில்லை.


And what is good, Phædrus,
And what is not good...
Need we ask anyone to tell us these things?
- Epigraph to Zen and the Art of Motorcycle Maintenance, Robert Pirsig


உண்மையில் கொலையாளிகளை அரக்கர்களாய் மட்டும் பார்க்காமல் சகமனிதன் என்ற அளவில் அணுகினால் அவன் வாழ்க்கைத் தரும் பாடங்கள் ஏராளம். பாடங்கள் என்றால் நாம் பின்பற்றி நடக்கவேண்டிய சாஸ்திர விதிகளாய் மட்டும் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. எவையெவை நல்லவை என்று சொல்லிக்கொடுக்க ஒரு நல்லாசிரியர் தேவையென்றால் எவையெவை பாதகரமானவை என்று சொல்லிக்கொடுக்கவும் ஒரு ஆசிரியன் தேவைப்படுகிறானல்லவா? கெட்டவற்றைச் சொல்லிக்கொடுப்பதில் அவன் நல்லாசிரியனாக விளங்கினால் நமக்கு அதில் ஒரு குரூர பலன் இருக்கிறது. இனி வரும் உலகத்தில் இப்படியான ஒருவன் தோன்றாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பது விளங்கும்படியாக நாம் அவனைப் படிக்கலாம். அதனால் அசுரர்களுக்கும் மனித முகங்கள் கொடுப்பது empathy/sympathy ஐ உருவாக்கும் என்பது போன்ற வாதங்களை விட்டு அணுகினால் அசுரர்களை படிக்கவேண்டியதே நம் கடமை என்பது தெளிவாகும்.

------------------------------------------------------
எதற்கு இத்தகைய நீளமான முன்னுரை? சரியான வலைப்பூவுக்குத்தான் வந்திருக்கமா அப்படினெல்லாம் உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும். எனினும் இவ்வளவு தூரம் படித்துக் கடந்தாகிவிட்டது. இன்னும் ஒரிரண்டு பத்திகள் மட்டுமே.

Der Untergang (2004) என்ற படத்தை சமீபத்தில் தான் பார்க்க நேர்ந்தது. சென்ற நூற்றாண்டின் மனித விரோதி நெ.1 அடால்ப் ஹிட்லரின் வாழ்விலான கடைசி பத்து நாட்களை பற்றியதான படம். கிட்டத்தட்ட மொத்தப்படமும் அவனது Fuhrerbunkerக்குள் மட்டுமே நடக்கிறது. கோய்பல்ஸ், ஹிம்லர், ஷ்பியர், ஏவா என நமக்கு தெரிந்த அனைவரும் வந்துபோகிறார்கள். ஆனால் நாம் படித்த அரக்கர் உருவில் அல்ல. சாதாரண மனிதர்களாக.

அனாயசமான நடிப்பு ப்ரூனோ கான்ஸுடையது. ஹிட்லர் என்ற வரலாற்றின் மூலம் நமக்கு அறிமுகமான ஆசாமி பலவிடங்களில் மறைந்தேபோய்விடுகிறது. அதற்கு பதிலாக ஒரு frail, deranged, demented கிழவனே தோன்றுகிறான். குறிப்பாக சோவியத் படைகள் நெருங்கி பெர்லினின் மேல் குண்டுவீச்சு நடத்தும் சமயத்திலும் தன் பங்கரின் மேலே வந்து சிறுவர்களுக்கான சாகச விருதுகளை வழங்கும் காட்சி. இப்படி படமெங்கும் முத்துகள்.

வரிசையாக தோல்விகளை சந்திக்கும்போதும், அவனுடைய தளபதிகள் ஒவ்வொருவராக எதிரணியிக்கு தாவும்போதும், சோவியத் படை நெருக்கும் போதும், தற்கொலையை விட்டால் வழியில்லையென்ற நிலைக்கு தள்ளப்படும்போதும் என சமயங்களில் எனக்கு அப்புத்திபேதலித்த கிழவனைப் பார்த்து பரிதாபமே மிஞ்சியது. அப்படி பரிதாபப்படுதலே படுபாவம் என்று எண்ணிக்கொள்ளவும் செய்தேன். என் பரிதாபம் நிறைய நேரத்துக்கு நீடிக்கவில்லை என்பதென்னவோ உண்மைதான். ஹிட்லரை மனிதனாக காண்பிப்பதாய்ச் சொல்லி சர்ச்சைகளிலும் இப்படம் சிக்கியது. எவ்வித முன்முடிவுகளுடன் ஹிட்லரை அணுகாமல் பார்வையாளர்களின் முடிவுக்கு விட்ட இயக்குநரை பாராட்டியே ஆகவேண்டும்.

தன் நாட்டு மக்களையே பலியாடாக்க துணிந்ததுடன் அனைத்துக்குமான பழியை யூதர்களின் மேல் சுமத்துவது என தொடர்ச்சியாக இந்த மனித முகத்திற்கு பின் மறைந்திருக்கும் அரக்கன் யார் என்றும் படத்தில் காட்டத்தவறவில்லை. ஹிட்லரெனும் அரக்கனைப் பார்த்து பரிதாபப்பட்டதற்காக சற்று கோபப்பட்ட போது ரோஜர் ஈபர்ட் தன்னுடைய விமர்சனத்தில் எழுதியதைப் பார்த்தேன்.

”Admiration I did not feel. Sympathy I felt in the sense that I would feel it for a rabid dog, while accepting that it must be destroyed. I do not feel the film provides "a sufficient response to what Hitler actually did," because I feel no film can, and no response would be sufficient. All we can learn from a film like this is that millions of people can be led, and millions more killed, by madness leashed to racism and the barbaric instincts of tribalism.“...

”What I also felt, however, was the reality of the Nazi sickness, which has been distanced and diluted by so many movies with so many Nazi villains that it has become more like a plot device than a reality. As we regard this broken and pathetic Hitler, we realize that he did not alone create the Third Reich, but was the focus for a spontaneous uprising by many of the German people, fueled by racism, xenophobia, grandiosity and fear. He was skilled in the ways he exploited that feeling, and surrounded himself by gifted strategists and propagandists, but he was not a great man, simply one armed by fate to unleash unimaginable evil. It is useful to reflect that racism, xenophobia, grandiosity and fear are still with us, and the defeat of one of their manifestations does not inoculate us against others.”

இதற்கு மேலே சொல்ல எதுவுமில்லை.

radical nationalism என்ற பெயரில் உலகெங்கும் ஹிட்லர்களும் கோய்பல்ஸ்களும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்ற வகையில் அனைவரும் பார்க்கவேண்டிய படம்.

229. எலே எடுபட்ட பயலே! வேலைய ஒழுங்காப் பாருவே!

நிகழ்வு 1:
எங்க தெருவுல ஒரு பால்காரர் பலகாலமா பால் ஊத்திகிட்டிருந்தாரு. கொஞ்ச நாளா என்ன கெரகமோ அவர் குடுக்கற பால்ல காபி போட்டா சுடுதண்ணியாட்டமா மாறிடுச்சு. தயிர் கெட்டியாவே ஆகலை. என்ன காரணமின்னு பார்த்தா பால்காரரு காசுக்கு ஆசைபட்டு தண்ணி கலக்க ஆரமிச்சுட்டாருனு தெரிஞ்சுது. தண்ணி கலக்கறது எல்லாரும் வழக்கமா செய்யறதுதானு சொன்னாலும், இவருக்கு சரியா தண்ணி கலக்க தெரியல. அதிகமா விட்டு பாலே தண்ணியாயிடுச்சு. எங்க தெருக்காரங்கள்லாம் சேர்ந்து முடிவு பண்ணி பால்காரர மாத்திட்டாங்க.

நிகழ்வு 2:
எங்களோட தெருவுல ஒரு பொட்டிக்கடை இருந்துச்சு. முனுசாமி அண்ணாச்சி வச்சுருந்தாரு. முனுசாமி அண்ணாச்சிக்கு மூணு பசங்க. அவங்க படிக்கணும்கறதுக்காக ராவு பகலா அவரும் கட வச்சிருந்தாரு. வியாபாரம் வளந்துச்சு. காய்கறி, பலசரக்குனு கொஞ்சம் பெரிய கடையா வச்சாரு. ஆரமிச்ச ஜரூர்ல நாலு வேலையத்த பசங்களுக்கு பொட்டலம் மடிக்க வேலையும் கொடுத்தாரு. ஆனா பாருங்க அவரோட போறாத காலம், பக்கத்துல் ஏசியோட ஸ்பென்சர் ப்ரெஷ் திறந்துட்டாங்க. இப்ப அண்ணாச்சி வியாபாரம் படுத்துருச்சு. காய்கறி மட்டுமே இன்னும் அவர்கிட்ட வாங்கினாங்க எங்க தெருக்காரவுக. வர்ற காசு தன் குடும்பத்துக்கே போறாத போது இந்த நாலு பசங்க வேற. என்ன செய்வாரு அண்ணாச்சி.

நிகழ்வு 3:
இப்படித்தான் லண்டன்ல பத்துவருஷம் படிச்சுட்டு ஒரு டாக்டரு எங்க தெருவுல பந்தாவா லோக்கல் அமைச்சர கூப்பிட்டு க்ளினிக் தொறந்தாரு. அவரு கிளினிக் தொறந்தாரா வைகுண்ட வாசல தொறந்தாரானு சந்தேகம் வர அளவுக்கு அவர்கிட்ட வைத்தியம் பாக்க போன கேஸுகளில் பத்துக்கு நாலு அவுட். தொறந்து வச்ச அமைச்சரே ‘டாக்டரே வெளியேறு'னு தெருவுல போராட்டம் நடத்தி அவருக்கு செருப்பு மாலை போட்டு படையல் நடத்திட்டாரு. கேபிள் டிவி, சன் டிவில வேற இவரு பேரு வந்துருச்சுனா இவரு எவ்வளவு பாப்புலர்னு பாத்துக்கோங்க.

நிகழ்வு 4:
இன்னொருத்தர் கதையும் சோகம். அவனவன் கம்பூட்டர் பொட்டி தட்ட படிக்கற காலத்துல இவரு அதிசயமா கட்டிடக்கலை படிச்சுட்டு வந்தாரு. ஒரு ஏக்கரா குடும்ப சொத்து இருந்துச்சா.. அடுத்தவன நம்பி என்ன பொழப்பு, நாமளே ஷாப்பிங்க் செண்டர் கட்டி வாடகைக்கு விடுவோம்னு பேங்க்ல எல்லாத்தியும் அடமானம் வச்சு, அதிகமில்ல, ஒரு நாலுகோடி வாங்கி ‘நம்மூருல நான் கட்டுறேன் பாருடா உலக வர்த்தக செண்டரை'னு அடிக்கல் நட்டாரு. அவர் போட்ட டிசைன்ல ஏதோ டேமேஜாம். கட்டிடம் பாதிலேயே இடிஞ்சு விழுந்திருச்சு.

-------------------------------------------------------
இதுல என்ன வந்துச்சு காலம் காலமா நம்ம நாட்டுல நடக்கறதுதானேனு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது. ஆனா பாருங்க... 'திறமையின்மை' காரணமா மட்டும் ஒருத்தர வேலைலேர்ந்து தூக்கிட கூடாதாம். ஏன்னா அவங்களுக்கு குடும்பம் குட்டி இருக்காம். பேங்க்ல லோன் வாங்கிருப்பாங்களாம். வீடு கட்டிருப்பாங்களாம். அதையெல்லாம் கருத்துல எடுத்துக்கணுமாம். இதே மாதிரி பரந்துபட்ட நெஞ்சத்தோட நம்ம நாட்டுல நல்லவங்க இத்தன பேரு இருக்கறதுனாலதான் மழை நல்லா பெய்யுது.

அப்படியே இந்த பால்காரர், முனுசாமி அண்ணாச்சி, டாக்டரு, கட்டிடக்கலை வல்லுநரு எல்லாருக்கும் கொஞ்சம் பொதுமக்களாகிய நீங்க எதுனாச்சும் பெரிய மனசு பண்ணி அவங்களோட ‘திறமையின்மை', ‘அதிருஷ்டமின்மை' அல்லது ‘பணத்தாசை' மட்டுமே காரணமா கொண்டு இவங்கள புறக்கணிக்காம அவங்களும் வாங்கின லோன திருப்பி அடைச்சு, காரு வாங்கி, வீடு வாங்கி, கல்யாணம் கட்டி, குழந்தை பெத்து, அது காலேஜ் முடிச்சு, பேத்திக்கு சீரு கொடுக்கற வரைக்கும் உங்களோட பேராதரவ கொடுக்கணும்.

இது வேண்டுகோள் இல்ல கட்டளை. அதுமட்டுமல்ல இது உங்க கடமை.

திறமையா வேலை செய்யலேனாலும் வேலைய விட்டுத் தூக்கக்கூடாது. கம்பெனியே திவாலாப்போனாலும் கம்பெனியோட CEO அவரோட குடும்பச் சொத்த வித்தாவது வேலைசெய்யறவங்களுக்கு சம்பளம் தரணும்.

இப்ப நீங்க mac sys-adminனு வச்சுக்கோங்க. உங்க கம்பெனி இன்னிலேந்து exclusiveஆ விண்டோஸுக்கு மாறப்போறதா பாலிஸி முடிவு பண்ணிருச்சு. ஆனாலும் உங்கள வேலைய விட்டு போயிடுனு சொல்லமுடியாது. 'செல்லம்.. நீ போயி இசைத்தமிழ்.நெட்ல டிவி பாரு, வலையுலகத்துல தமிழ வளரு... உன் சேவை காலத்துக்கும் இந்த கம்பெனிக்கு தேவை'னு பாசமுள்ள அப்பாவாட்டம் பொத்தி பொத்தி வளர்க்கணும். ஏன்னா பணம் இன்னிக்கு போகும். நாளைக்கு வரும். மனுசங்க வருவாங்களா?

அப்புறம் இதே லாஜிக்படி, ஐடி உட்பட எந்த கம்பெனியிலும் ஒருவாட்டி சேர்ந்துட்டீங்கன்னா, அப்புறம் இன்னொரு கம்பெனி வந்து ஜாஸ்தி பணம் தரேனு சொன்னா நீங்க மாறிடக்கூடாது. ஏன்னா உங்களுக்கு சோறு போட்டு அந்த சோத்துல உப்பையும் போட்ட தாய்க்கம்பெனிக்கு துரோகியாக முடியுமா?

------------------------------------------------------
'எலே முத்து! களத்துமேட்டில வேலை பாக்காம கவர்ன்மெண்ட் குடுத்த டிவில தேன்மொழியாள் பாத்துகினு மத்தியானத்து நேரத்துல கனவா? இந்த மாதிரி பாசக்கார பயலுகளா முதலாளிங்க காண்ட்ராக்ட் போட்ட வேலையில் இருக்கும் தொழிலாளிகளுக்கு மட்டும்தான் சலுக காட்டணுமாம். நீ இப்படி வேலை செய்யாம சொகமா கெடக்கேனு பண்ணையாருக்கு தெரிஞ்சுது... வேலைய விட்டு துரத்துறதோட இல்லாம பன மரத்துல கட்டி வெளாசிருவாரு' னு லட்சுமி வந்து சத்தம் போடவும் பழய சோத்தையும் பச்ச மொளகாயும் கொட்டிகிட்டு திரும்பவும் களத்துமேட்டுக்கு போரடிக்க போனேன்!

டிஸ்கி: No Offence intended or otherwise.

228. மோனிகா... ஓ! மோனிகா!

'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்'?

90களின் ஆரம்பம். பள்ளிக்காலத்தில் மோனிகாவை பற்றி பேசாத நாளென்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. அப்படியொரு மோகம் மோனிகாவின் மீது.

1991,92,93 ஆஸ்திரேலியன்;
1990,91,92 - ப்ரென்ச்;
1992 - விம்பிள்டன் ரன்னர் அப்;
1991,92 - யு.எஸ்


என்று ஒன்பது கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள். இத்தனைக்கும் வயது இருபதுகூட ஆகவில்லை. ஸ்டெபி கிராபின் அரியணையில் ஏறத்தகுதி வாய்ந்த பெண்கள் டென்னிஸின் அடுத்த சூப்பர் ஸ்டார் கிடைத்துவிட்டார் என்ற சந்தோஷமான தருணத்தில்...

ஏப்ரல் 30,1993 - ஹாம்பர்கில் ஸ்டெபியின் மீது வெறி பிடித்த மனநோயாளி ஒருவனால் கோர்டின் நடுவில் அத்தனை பேரின் முன்னிலையிலும் தோள்பட்டைக்கு இடையில் கத்தியால் குத்தப்பட்டார் மோனிகா செலஸ். ஜெர்மனியில் குற்றவாளியை மனநோயாளி என்ற காரணத்தால் இரண்டு வருடத்திற்கு மனநோய் காப்பகத்தில் இருக்கச்சொல்லி தண்டனை விதித்தார்கள்.

இருபதாம் வயதில், பெண்கள் டென்னிஸ் உலகில் நம்பர் 1ஆகத்திகழ்ந்து, அவ்வருட ஆஸ்திரேலிய ஓபனைக் கைபற்றி பிரெஞ்சையும் கண்டிப்பாக வென்றிருக்க வேண்டிய சூழலில், குண்டர் பார்ச் என்ற நோயாளியின் செயலால் மோனிகாவின் career அவுட். எமோஷனலாகவும், உடல்ரீதியாகவும் அவர் இதிலிருந்து மீண்டு வர இரண்டு வருடங்கள் பிடித்தது. அதற்கப்புறம் வந்து 1996 ஆஸ்திரேலிய ஓபனை கைபற்றினாலும் பழைய பார்முக்கு திரும்பவே முடியவில்லை.

மார்டினா ஹிங்கிஸை எனக்கு பெர்ஸனலாக அவ்வளவாக பிடிக்காது என்பது ஒரு காரணமென்றாலும் (ட்ஜோக்கரைப் போன்ற ஆட்டிட்ட்யூட்), மோனிகாவிற்கு இந்த கொடுமை நிகழாமல் இருந்திருந்தால் மார்டினா 90-களின் பிற்பாதியில் பெண்கள் டென்னிஸை இவ்வளவு டாமினேட் செய்திருக்க முடியாது என்பது என் ஆணித்தரமான எண்ணம்.

பலருக்கு ஒரு வாழ்நாள் பிடிக்கும் காரியங்களை இருபது வயதிற்குள் செய்து வெற்றிகண்டு, ஒரு நோயாளியின் செயலால் அனைத்தையும் தொலைத்து நின்ற மோனிகாவிற்கு என்ன ஆறுதலோ ஊக்கமோ கொடுக்கமுடியும்?

pro டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று மோனிகா அறிவித்ததைப் படித்தபின் அந்த இனிமையான 90களுக்கு ஒரு நிமிடம் சென்று, கோர்டில் இவர் ‘அஹெம்' என்று கத்துவதில் தொடங்கி, ஹாம்பர்க் நிகழ்வுக்கு பிறகு எல்லாமே ஒரு கனவாய் முடிந்தது நினைத்து 'what could have been?' என்ற உபயோகமற்ற கேள்வி வந்து உருத்துகிறது.

Images © Brittanica Blog, Sports Illustrated

227. 7 +/- 2... இது ஏழரையல்ல

ஒரு மேட்டர் விஷயமாக கூகிளை தோண்டிக்கொண்டிருந்தபோது, reality 1.0-ல் வேண்டுவது அல்லாமல் மற்றதே கண்ணில் படுவது போல, அகப்பட்டது இந்த chunking. மூளை பிஸியாலஜி அண்ட் அஸ்ஸோசியேட்டட் மெமரி மேட்டரெல்லாம் துருப்பிடிச்சுருந்தபடியால் இன்னும் தேட ஆரம்பிச்சேன். சுவையாகவும் அதே சமயம் சில கடினமான விஷயங்களை குறித்த புரிந்துகொள்ளல்களை அதிகப்படுத்த உதவுவதாகவும் எனக்குப் பட்டது. அதை இந்த உலகத்தோடு பகிர்ந்து கொண்டேயாகவேண்டுமென்ற வெப் 2.0 வெறியுடன் இது...

முதலில் இந்த chunking என்பது என்ன? 1956ஆம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர் மில்லர் கண்டுபிடித்த வார்த்தைதான் இந்த சங்கிங். அவரது ஆய்வறிக்கை 'The Magical Number Seven, Plus or Minus Two" யில் தான் இந்த 7+/-2 முதலில் பேசப்பட்டது. அது என்ன 7+/-2? மனிதனுடைய short term நினைவுத்திறனினுடைய bandwidth தான் இந்த 7 +/-2.

சராசரியாக ஒரு மனிதனால் ஒரு சமயத்தில் அதிகபட்சமாக ஏழு அல்லது +/-2, அதாவது ஐந்து அல்லது ஒன்பது bits of informationஐ மட்டுமே கிரகிக்கமுடியும். இந்த bottleneck அளவு சிலருக்கு மாறுபடலாம். சிலருக்கு குறைந்து காணப்படலாம். ஆனால் பெரும்பாலானவர்களின் பேண்ட்வித் இவ்வளவுதான். சரி இந்த bits of information, அதாவது chunk என்பது என்ன? digits, images, thoughts, actions or any other piece of information - are grouped together as collections based on similarity. A chunk can then be defined as such "a collection of elements having strong associations with one another, but weak associations with elements within other chunks" - அதாவது ஒத்து இருக்கும் தகவல்களை ஒரு குழுவாக சேகரித்து வைப்பது. இப்படி குழுக்களாக வகைபடுத்தினாலும் அவற்றின் எண்ணிக்கை அளவும் 7+/-2 விதியின்படி ஒன்பது குழுக்களே அதிகபட்ச எண்ணிக்கையாக இருக்கமுடியும். ஒன்பது என்பது எந்நேரமும் சித்திக்கக்கூடியதுமில்லை. சேமிக்கப்படும் தகவலின் complexityக்கு ஏற்ப ஒரு சமயத்தில் கிரகிக்கப்படக்கூடிய அளவு மாறுபடும்.

தற்காலிக நினைவுத் திறன் குறித்து பேசப்பட்டு வந்த இந்த விதி, பின்னர் நிரந்தர நினைவுத்திறனின் கீழும் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. டெலிபோன் நம்பர்கள், பல இலக்க கடவுச்சொற்கள் போன்றவற்றை நம் மனம் சேமிப்பது இந்த டெக்னிக்கை வைத்துதான் என்றும் நம்பப்படுகிறது. சொல்லப்போனால் mnemonics என்று நாம் பரவலாக பயன்படுத்தும் வழக்கம் இதே அடிப்படையில் இயங்குவதே.

உதாரணத்திற்கு நான் படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது:

She Likes To Play, Try To Catch Her

மனிதனின் மணிக்கட்டில் இருக்கும் எலும்புகளில்
முதல் வரிசை: Scaphoid, Lunate, Triquetrum, Pisiform
இரண்டாவது வரிசை: Trapezium, Trapezoid, Capitate, Hamate

இங்கே மேற்சொன்ன உதாரணத்தில் catch என்று தொடும் பாகங்கள் (palms and wrists) சம்பந்தத்துடன் கடினமான லத்தீன பெயர்களை நினைவுக்கு கொண்டு வருவது சுலபமாகிறது. இந்த மாதிரி பிரபலமானவை நிறைய உண்டு. அவரவரின் படிக்கும் வழக்கத்திற்கு ஏற்ப சொந்தமாக கட்டமைப்பதோ வழக்கம்.

தியரியே படிச்சுகிட்டிருந்தா போரடிக்குது இல்ல... இதை எப்படி செயலாக்கத்தில் நமக்கு சாதகமாக்கிக்கொள்வது? எழுத்து வடிவில் வழங்கப்படும் எவ்வகையான தகவல்களையும் இந்த 7+/-2 ஐ மனதில் கொண்டு தயாரித்தால், நம்மை படிக்கும் வாசகர்களுக்கு அதை நினைவில் நிறுத்திக்கொள்வது எளிதாக்க முடியும். அடிப்படையாக சில விதிகள்.

* No more than nine bullet points on a slide
* No more than nine bullet points on a bulleted list - classify the information into smaller logically related groups and introduce a subheading
* No more than nine bubbles on a single data flow diagram - consider reducing this further if the functions are complex
* No more than nine classes in an object model module - consider creation of more super-classes or a more granular partitioning
* No more than nine states in a single state transition diagram - consider creation of super-states
* This principle statement is chunked into 7 units of information. No unit has more than 6 thoughts or sub-chunks.

உதாரணத்துடன் இங்கே காணலாம்
------------------------------
அது சும்மா எழுதுனா செய்யற விஷயம். ஆனால் இது போன்று வரிசைக்கிரமமாக வாசகர்களால் சிந்திக்க முடியுமா? மனமெனும் குரங்கு தாவிக்கொண்டேயிருப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கே.

ஒரு விஷயத்தை யோசிச்சு செய்யறதுன்னா நடக்குற காரியமாவா இருக்கு? அதுக்கு என்ன செய்யறதுனு யோசிக்கணும்னு சொல்லிகிட்டே தமிழ்மணத்தை ஓப்பன் பண்ணி ஒரு ரெண்டு பதிவ திறந்து வைத்துக்கொண்டு, அப்புறம் திட்டிக்கொண்டு, திரும்ப கூகிளாண்டவரே கதினு விழுந்தேன். கொடுத்தார் ஒரு அருமையான லின்க்கை. நான் சொல்றதை நானே கேக்க மாட்டேனு போங்கு பண்ணிகிட்டிருந்த குரங்குக்குட்டி திரையில் வர்ற அம்புக்குறிகளப் பார்த்தோன சைலண்ட் ஆயிருச்சு. எனக்கே ஆச்சரியம்.

ஏன்னா பொதுவா எவ்வளவு சீரியஸான வாழ்க்கை மேட்டரானாலும் சரி ஜோவியலான வலைப்பூவுலகமானாலும் சரி அஞ்சு நிமிஷம் யோசிப்போம்னு ஆரமிச்சா - முறையே கார்கள், ****, அசின், ****, அரசியல், **** அப்படினு அஞ்சுநிமிஷத்துக்குள்ள அண்டார்டிகா வரைக்கும் தாவிகிட்டு இருக்குமே, இப்ப அதுக்கு என்னாச்சுனு எனக்கே டவுட் வர அளவுக்கு ஆயிருச்சு. அது எப்படினா ஒரு நாலஞ்சு வயசுல குழந்தைங்க உள்ளவங்களுக்கு தெரியும். 'ஹாயா டிவி பாத்துகிட்டே இருப்பாங்க, ஒரு பத்துநிமிஷம் கழிச்சு திடீர்னு யோசனை வரும். குழந்தையோட ரகளை எதுவுமில்லாம என்னடா இவ்ளோ அமைதியாயிருக்கேனு டிவிய mute பண்ணிட்டு முழிப்பாங்களே. அதே பீலிங்தான்.

சரி. ஒரு சின்ன டெஸ்ட். முதல்ல நீங்க நினைக்க வேண்டியது ஏதாவது ஒரு விஷயத்தை பத்தி. என்ன நம்புங்க இதுதான் கஷ்டமான காரியம். அப்புறம் எல்லாமே சுலபமே. அது உங்களோட டூத் பிரஷ்ஷாக இருக்கலாம், அல்லது கோசவோவோட சுதந்திரமா இருக்கலாம், நீங்க காரோட்டறதா இருக்கலாம் அல்லது உலகப் பொருளாதாரமா இருக்கலாம்.

இப்ப நீங்க செய்யவேண்டியதெல்லாம் ஒண்ணுதான். இப்ப ‘ஐஸ்கீரீம்' அப்படினு நினச்சிருந்தீங்கனு வையுங்க. நினச்சிட்டு கீழே படத்துல இருக்குற கறுப்பு பொத்தானை அமுக்கினால் திரையில் அம்புக்குறியீடுகள் வரும். இப்போது நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் பொருளின் தொடர்ச்சியாக எந்த திசையில் உங்கள் எண்ண ஓட்டம் இருக்க வேண்டும் என்று குறிக்கவே இந்த குறியீடுகள்.

மேலே குறிக்கும் அம்பு வந்தால் - ஐஸ்க்ரீமுக்கு மேலே போகவேண்டும். அதாவது ஐஸ்க்ரீம் என்பது உணவுவகை, அதோட டிஸ்ட்ரிப்யூஷன், டெமொக்ராபிக்ஸனு எந்த buzzword வேணா இருக்கலாம். ஆனா macro levelஅ இருக்கணும். big pictureனு கூட சொல்லலாம்.

கீழே குறிக்கும் அம்பு வந்தால் - ஐஸ்க்ரீமிகுள்ள போகணும். அதாவது ஐஸ்க்ரீமில் என்னென்ன இருக்கிறது. அவற்றின் தன்மைகள். அந்த மாதிரி. micro. in depth lookனு சொல்வாங்களே அந்த மாதிரி.

பக்கவாட்டில் குறிக்கும் அம்புகள் வந்தால் - ஐஸ்க்ரீமை ஒற்று இருக்கக்கூடிய வேறு பொருட்கள் என்பது மாதிரி போகலாம். lateral ஆக செல்லவேண்டும். metaphors மாதிரி.


ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும். போகப்போக ஒரு விஷயத்தைக் குறித்த உங்கள் புரிதல்கள் எப்படியிருக்குனு உங்களுக்கே புரிய உதவுற ஜாலியான விளையாட்டு.
ரெடியா? கறுப்பு பொத்தானை அமுக்கினால் ஜூட் தான். இதுக்கு time limit எல்லாம் கிடையாது. ஒரு விஷயத்தை குறித்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு சிந்திக்கலாம். அடுத்த எண்ண ஓட்டத்துக்கான திசையை பெற மீண்டும் கறுப்பு பொத்தானை அழுத்தவும்.

©Manifestation.com

226. சைவத்தை புறக்கணியுங்கள்!

சைவர்கள் பெரும்பாலும் தங்கள் கருத்துகளில் மிகத்தீவிரமாக இருப்பர். அறிவியல் பூர்வமாகவோ வேற எந்தப் பூர்வமாகவோ அவர்களிடம் விவாதம் செய்வது பெரும்பாலும் நேரவிரயமே. சைவர்களுக்கு மற்றவர்களைவிட தாங்கள் ஒருபடி மேலே என்ற எண்ணமும் தானாக வந்துவிடுவதும் கூட காரணமாக இருக்கலாம். அப்படி அலைபவர்களுக்கு ஒரு செக் வைக்கும் விதமாக ஒரு அறிவியல் பூர்வமான கட்டுரையை pravda வெளியிட்டிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்:
1. உங்களுக்கு பிள்ளைப்பேறு வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் சைவம் பக்கம் கண்டிப்பாக போகவேண்டாம்.

2. சைவம் மட்டுமே உட்கொள்பவர்களுக்கு வறண்ட பொலிவற்ற சருமமே இருக்கும்.

3. தன்னம்பிக்கை குறைந்து காணப்படுவார்கள். பகுத்தறியும் திறன் குறையும். லாஜிக் திறன்கள் குறைந்து காணப்படும்.

4. சைவ உணவப்பழக்கத்தை கொண்ட வயதானவர்களின் இதயத்தின் தசைகள் வலுவிழக்கக்கூடும்.

5. இதயம் மட்டுமல்லாமல் கைகால்களெல்லாம் சத்தற்று போகும்.

6. ஏனைய நோய்களும் வரவாய்ப்புகள் அதிகம்.

பெரும்பாலும் சைவ உணவே உட்கொள்ளும் ஆப்ரிக்க குழந்தைகளை பார்த்திருக்கிறீர்கள் தானே? நலிந்து போய், வீங்கிய வயிறுடன் அவர்கள் இருப்பதற்கு சைவமே காரணம்.

-----------------------------
இப்படி பல மேட்டர் இருக்கு.

படிச்சாச்சா? சிரிச்சாச்சா? குழந்த பொறக்குமா, ஹார்ட் பெயிலியர் வருமானெல்லாம் கற்பனை வளர்த்துக்கவேணாம். அரைவேக்காட்டுத்தனமா எழுதப்பட்ட டிபிகல் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவோட கட்டுரை அது. கிட்டத்தட்ட இவர்கள் சொல்லும் எல்லாமுமே நேர்மறையாக இருக்கிறது. ரொம்ப பயந்தவர்கள் இவக சொல்றத படித்துக்கொள்ளலாம்.

இன்னிய பதிவின் முக்கியமான மேட்டருக்கு வந்திருக்கோம்.

இதயம் பலகீனமானவர்கள், ஸ்க்ரீனில் பளீச்சிடும் வண்ணங்களால் வலிப்புநோய் வரக்கூடியவர்கள், easily offended ஆட்கள் என பொதுவாக பதினெட்டு வயதுக்கு கீழுள்ளவர்கள் கீழே உள்ள வீடியோவை பார்க்கவேண்டாம். கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டுமே.

(டிஸ்கி: This video may contain content that is inappropriate for some users)

வறண்ட சருமத்துடன், கைகாலெல்லாம் சூம்பிப்போய், தசைகளெல்லாம் வற்றி - தன்னம்பிக்கை சற்றுமற்ற ஒரு பாவப்பட்ட சைவரை பாருங்கள்.





இதைப் பார்த்தப்புறமும் நீங்கள் இனியும் சைவராக இருக்கத்தான் வேண்டுமா?

225. வந்தாடியே! வந்த வழி போயிடு ஓடியே!

மும்பையில் நடந்துகொண்டிருக்கும் கூத்தப்பத்தி, அதான்பா அமிதாப் பச்சன் அண்ட் உத்தர பிரதேசம் vs தி ஸ்டேட் ஆப் மஹாராஷ்ட்ரா (c/o இராஜ் தாக்குடே) பத்தி பதிவெழுதுலாம்னு நினச்சுகிட்டிருந்தேன்.

அப்போ பிரத்யட்ச தெய்வம் கனவுல வந்து 'என்னையப் பத்தி ஒரு தொடர் போடறேனு சொல்லிட்டு இப்படி ஜகா வாங்குறியே, இது உனக்கே நல்லா இருக்கா'னு கேட்டாரு. சரினு தலகிட்ட 'உம்ம மேட்டர் கெடக்குது. இந்த மும்பைல உபிக்காரவுகல்லாம் வந்து அட்டூழியம் செய்யறாங்களாம். இந்த நார்த்தீ கும்பலால மராட்டியர்களுக்கு வேலைபோச்சாம், மானம் போச்சாம் மருவாதை போச்சாம். அப்படியே அமைதிப்பூங்காவான மும்பைல இவனுக வந்ததுலேர்ந்து எல்லா கிரிமினல் ஆக்டிவிடிஸும் ஜாஸ்தியாயிருச்சாம். அதுனால அவங்களையெல்லாம் வெளியேத்தணும்னு தாக்குடே அண்ணாச்சி சொல்றாருனு' சொன்னேன்.

அதுக்கு தல ‘இதெல்லாம் காலங்காலமா எல்லா ஊர்லயும் நடக்குற மேட்டர் தானப்பா.. இதுல என்ன புதுசா கண்டுட்ட? ஹிட்லர் போல்பாட் தொடங்கி ஒரு பெரிய க்ரூப்பே இப்படித்தானே வெறியத்தூண்டி வெளாண்டாங்க? இப்ப நம்ம கதையவே எடுத்துக்கயேன். இந்த வருச 2008 விம்பிள்டன்ல இதே மாதிரி நடக்கப்போகுது'. உலகவலைப்பதிவுகள்ல முதல்முறையாக வருங்காலத்துல வரத நீ இப்பவே போட்டு நியுஸ மக்களுக்குச் சொல்லிடு'னு சொன்னாரு.



(படத்துமேல கிளிக்கினா அடுத்த படத்துக்கு போவும்)

தல சொன்னத குறள்வாக்கா எடுத்துகிட்டு ஒரு வார்த்தை கூட என்சேர்க்கை இல்லாம போட்டுட்டேன்! வேறு எவர்கூடயோ எது கூடயோ லின்க்கெல்லாம் பண்ணி என்னய்யவும் புலம்பவச்சிருதாதீங்கப்பூ!


---------------
Photos from Menstennisforums

 

வார்ப்புரு | தமிழாக்கம்