197. No Oil for You! - Russia vs Estonia

சைன்பெல்டோட சூப் நாஜி நினைவுக்கு வர்றாரா? அவர் குடுக்கற சூப்ப வாங்கிட்டு அடக்கமா போகணும். கேள்வி கேட்டாலோ வேற ஏதாவது தப்பு சொன்னாலோ சூப்ப திரும்ப பிடுங்கிட்டு "no Soup for you"னு சொல்லித்துரத்திடுவாரு.

கிட்டத்தட்ட அதே கதை நடக்குது. என்ன கொஞ்சம் பெரிய அளவுல. போன தடவை ரஷ்யா உக்ரைனோட விளையாடினப்போ வேடிக்கை பார்த்த இ.யூ இந்த தடவை கோதாவுல இறங்கியிருக்கு.

முன்கதைச்சுருக்கம்: வழக்கம்போல எஸ்டோனியால ஆரம்பிக்குது. எஸ்டோனியாங்கறது ஒரு குட்டி பால்டிக் நாடு. சோவியத் யூனியனோட பாதுகாப்பிலேர்ந்து வெளியேறி 2004ல ஐரோப்பிய கூட்டமைப்புல இணைஞ்சுது.

இப்ப எஸ்டோனியா காரங்க என்ன செஞ்சாங்கன்னா அவங்க தலைநகரான டாலின்ல இருக்குற ஒரு சோவியத் கால சிலைய எடுத்து வேற இடத்துல வப்போம்னாங்க. சாதா சிலையா இருந்தா ரஷ்யாவும் கண்டுக்காம இருந்திருக்கும். ஆனா இது என்ன சிலைன்னா இரண்டாம் உலகப்போர்ல சிவப்பு ராணுவம் பாஸிஸத்த ஜெயிச்சு வெற்றிபெற்றதுக்கான நினைவுச்சின்னம். சில சோவியத் ராணுவத்தினரோட உடல்களும் அங்க அடக்கம் செய்யப்பட்டிருக்கு அந்தச் சிலைய சுத்தி. அந்த உடல்களையெல்லாம் தோண்டி எடுத்து யாருயாருன்னு identify பண்ணி வேறொரு இடுகாட்டில புதைக்கப்போறோம்னு எஸ்டோனியா சொல்லிச்சு.

ரஷ்யா ரொம்ப பெருமைப்பட்டுக்கற விஷயம்னா இந்த இரண்டாம் உலகப்போர் வெற்றிதான். அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சேர்ந்து இழந்த ஆட்களவிட பலமடங்கு அதிகம் ரஷ்யர்கள் இறந்துபோயிருக்காங்க. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரமே நரகமா இருந்துச்சு. அப்புறமா இந்த சிவப்பு ராணுவம் சுதாரிச்சு அதிவீரத்தோட போராடி கிழக்கு ஐரோப்பாவுலேர்ந்து ஹிட்லரோட படைய விரட்டியடிச்சு முதல்ல பெர்லினப் பிடிச்சது வரைக்கும் வரலாறு. இந்தப் போர்ல பங்கெடுத்தவங்களுக்கு வருஷாவருஷம் அஞ்சலி செலுத்தி அதையே பெரிய விழாவாவும் கொண்டாடுறது ரஷ்ய வழக்கம். இப்படி தங்களோட வெற்றிக்கு, பாஸிஸத்தின் அழிவுக்கு சின்னமாக இருக்கும் சிலைய அகற்றக்கூடாதுன்னு எஸ்டோனியால மூணில் ஒரு பங்கு இருக்கற ரஷ்யக்குடியினர் குரலெழுப்பினாங்க. அதுக்கு எஸ்டோனியா நாட்டுக்காரங்க ஜெர்மனி காலனியா இருந்தோம், அப்புறம் சோவியத் காலனியா ஆனோம் இதுல பெருமைப்பட என்ன இருக்கு... எங்களை அம்பது வருஷம் அடிமையா வச்சிருந்த சோவியத்தின் சின்னம் வேணாம்னு சொல்ல ஆரமிச்சுட்டாங்க. ரஷ்யக்குடியினர் சேர்ந்து ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தி போலீஸோட சண்ட போட்டதுல ஒருத்தர் செத்தும் போயிட்டாரு. நூத்துக்கணக்கான ரஷ்யக்குடியினர் கைதுசெய்யப்பட்டாங்க. இது நடந்தது ஏப்ரல் 24.

இப்போ ரஷ்யாவோட கண்ல இது பட்டுருச்சு. அது எப்படி சோவியத் காலச் சின்னத்த, அதுவும் ரஷ்யர்களோட பெருமைக்கு சின்னமா இருக்குற ஒரு சிலைய இடமாத்தம் செய்வீங்க.. அதோடு கூட புதைக்கப்பட்ட உடல்களை திரும்பவும் தோண்டி எடுக்குறது ரொம்ப கீழ்த்தரமானதுன்னு அறிக்கைவிட ஆரமிச்சாங்க. சொல்லிப்பாத்தாங்க கேக்கலை. அரசியல் கலந்தா அப்புறம் சூடுக்கு பஞ்சமா? அமெரிக்கா வேற அது எஸ்டோனியாவோட சொந்த விவகாரம்னு சொல்ல ஆரமிச்சோன்ன ரஷ்ய அரசியல் கட்சிகள் சில nationalism த்த கையிலெடுத்தாங்க. மாஸ்கோவோட மேயர் லுஷ்கோவ அறிக்கைவிட்டாரு "ரஷ்யக்கடைகள்ல எஸ்டோனியப் பொருட்களை விற்கக்கூடாதுன்னு". Sedmoi Continent, Kopeika மாதிரி பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட் செயின்களெல்லாம் கூட இதுல சேந்துக்க ஆரமிச்சாங்க. ஆனா இந்த மாதிரி புறக்கணிப்புகள்னால, க்யூபாவுக்கு எதிர்த்தாப்புல அமெரிக்கா செஞ்சா மாதிரி, ஒரு *யிரும் செய்யமுடியாதுன்னு புரிஞ்சு பழைய அஸ்திரத்த எடுக்க ஆரமிச்சுருச்சு ரஷ்யா.

அதான் வழக்கமான எண்ணெய் எரிவாயு அஸ்திரம். ரஷ்யாவோட மொத்த எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதியில இருபத்திஐந்து சதவிகிதம் எஸ்டோனியாவுக்கு ரயில் மூலமா போய் அங்கேர்ந்து எஸ்டோனியாவோட பங்குபோக மிச்சம் ஐரோப்பாவுக்கு போகுது. மே. 1 லிருந்து ரயில் கம்பெனி எஸ்டோனியா போற ரயில் பாதைய சீரமைக்க போறதா திடீர் அறிக்கைவிட்டு ரயில் போக்குவரத்த பலமடங்கு குறைச்சிருச்சு. இதுமூலமா எஸ்டோனியாவுக்கும், அதன்மூலமா ஐரோப்பாவுக்கும் வரவேண்டிய எரிவாயு வராம சிக்கல் ஏற்பட்டிருக்கு. இதுனால ஏற்றுமதி செய்கிற ரஷ்ய எண்ணெய், கருநிலக்கரி மற்றும் எரிவாயு கம்பெனிகள் ஐரோப்பாவுக்கு அனுப்ப உக்ரைனிய மற்றும் ரஷ்ய துறைமுகங்கள் வழியா அனுப்புவோம்னு சொல்லிருக்காங்க. ரயில்வே நிர்வாகத்தினர் இதுக்கு சுத்தமா அரசியல் சம்பந்தமேயில்லேன்னு அறிக்கைவிட்டாலும் நம்பறது கஷ்டமா இருக்கு.

இதுதவிர, நாஷி "Ours" அப்படின்னு சொல்லி ஒரு அமைப்பு. ரொம்ப nationalist ஆளுங்க. மாஸ்கோவுல எஸ்டோனியாவோட தூதரகத்துக்கு முன்னாடி கடந்த ஆறு நாட்களா கூடாரமே போட்டு "No To Fascists Estonia"னு கலாட்டா செய்ய ஆரமிச்சாங்க. இதுனால தூதரகத்து செயல்பாடுகள் பாதிக்கப்படுதுன்னு எஸ்டோனியா சொல்லியும் போலீஸ் அவங்களை கைது செய்யல. அதுனால தூதரக அலுவல்கள் தற்காலிகமா முடக்கப்படும்னு எஸ்டோனியா சொல்லிருச்சு. இதத்தவிர ரஷ்ய-எஸ்டோனிய பார்டர்லயும் இதே ஆளுங்க சேர்ந்து cross border trafficஐயும் தொல்லைப்படுத்தறத செய்திகள் வர ஆரமிச்சுருச்சு.

அதுனால எஸ்டோனியா தன் பக்கத்து நியாயத்த ரஷ்ய மக்களுக்கு சொல்லியாகணும்னு நினைச்சு நேத்திக்கு (02/05/07) எஸ்டோனியாவோட ரஷ்யத்தூதர் மரீனா கல்ஜூரன் ஒரு பிரபலமான நாளிதழோட அலுவலகத்துல பிரஸ் மீட் வச்சாங்க. அது நடந்துகிட்டிருக்கும்போது இந்த நாஷி ஆளுங்க உள்ள புகுந்து கலாட்டா செஞ்சு, தூதரோட பாதுகாப்பு அதிகாரிங்க pepper spray எல்லாம் பயன்படுத்தி தூதர கார்ல ஏத்த படாதபாடு பட்டுருக்காங்க. ஆனா தூதர் மேல எந்தக் காயமும் இல்லை. அவங்க காரைத் துரத்திகிட்டே கொஞ்ச தூரம் நாஷி ஆளுங்க ஓடிருக்காங்க.

நேத்திக்கே சாயந்திரமா எஸ்டோனிய தூதுவர பாத்துட்டு தூதரகத்துலேர்ந்து வெளியே வந்த ஸ்வீடிஷ் தூதுவரோட காரும் தாக்குதலுக்கு உள்ளாயிருக்கு. குழப்பத்துல எஸ்டோனியா தூதுவர்னு நினச்சு ரவுடிக்கும்பல் ரகளை செஞ்சிருச்சு. காரோட சைட் வ்யூ மிரர்கள் உடஞ்சி, ஸ்வீடிஷ் கொடி கிழிக்கப்பட்டு போலீஸ் வந்து காருக்குள்ள பாதுகாப்பா இருந்த தூதுவர சுத்தி கேரோ செஞ்சிகிட்டிருந்த நாஷி ஆட்கள கைதுசெய்ய பதினஞ்சு நிமிஷம் ஆயிருச்சு. இங்கேயும் தூதுவர்மேல கைகூட படல. இந்த ரெண்டு நிகழ்ச்சிகளிலும் போலீஸால கும்பல கைதுசெஞ்சு கேஸெல்லாம் போட முடியல. ஏன்னா ரஷ்ய கிரிமினல் விதிகளின் படி இந்த மாதிரி demonstrations நடத்த பொதுமக்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனா பாதிக்கப்பட்ட ஆளுக்கு அடியோ காயமோ பட்டாலேயொழிய ரகளை செஞ்சவங்களுக்கு வெறும் அபராதம் மட்டும்தான் விதிக்கமுடியும். அதையே செஞ்சு போலீஸும் விட்டிருச்சு. அதுக்கப்புறம் கலாட்ட செஞ்ச அமைப்போட செய்திக்குறிப்புகள்ல தவறா ஸ்வீடிஷ் தூதுவர் கேரோ செய்யப்பட்டதுக்கு மன்னிப்பு கேட்டிருக்காங்க.

ஸ்வீடீஷ் தூதுவர் நேரா ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கிட்டயே போய் முறையிட்டும் வேற ஒண்ணும் செய்ய முடியலை. இதுதவிர ஸ்வீடன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் ரஷ்ய தூதர கூப்பிட்டு கண்டனம் சொல்லிருக்கு. இதுஇப்படியிருக்க, எஸ்டோனிய அதிபர் Toomas Hendrik "try to remain civilized"னு ரஷ்யாவ பாத்து சொல்லிருக்காரு. இதுக்கப்புறமும் இ.யூ சும்மா இருக்கமுடியுமா? ரஷ்யாவுல இருக்கிற ஐரோப்பிய ஒன்றியத்த சேர்ந்த தூதுவர்களுக்கும் தூதரகங்களும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது வியன்னா கன்வென்ஷன்ல கையெழுத்து போட்டிருக்கிற ரஷ்யாவோட கடமைனு அறிக்கை விட்டிருச்சு. இது என்னன்ன எரியிற தீயில எண்ணெய ஊத்துறா மாதிரி. அவங்க அறிக்கைல எஸ்டோனியாவுக்குன்னு சொல்லலை. ஐரோப்பிய ஒன்றியத்த சேர்ந்தன்னு சொல்லி எஸ்டோனியா எங்காளு, நீ(=ரஷ்யா) வெளியில தனிமைல இருக்குற நாடுங்கறா மாதிரி சொன்னது இப்ப இங்க பிரச்சனையாப் போச்சு.

அமெரிக்கா வேற போலந்துல ஏவுகணைத்தளம் அமைக்கப்போறோம்னு சொல்லிகிட்டிருக்கு. அத ரொம்பத் தீவிரமா எதிர்க்குது ரஷ்யா. ஏன்னா ரஷ்யாவோட ஏவுகணைகள்தான் அதோட primary deterrent. வடகொரியாவுக்கும் ஈரானுக்கும் எதிராத்தான் இந்தத்தளம்னு அமெரிக்கா சொன்னாலும் பூடின் ஒத்துக்கல. ஏன்னா இந்த ஏவுகணைத்தளம் போலந்துல வந்துட்டா ரஷ்யாவோட strategic defense பல்லிளிக்க ஆரமிச்சுரும்.

இப்போ இந்த வெளியுறவுத்துறை பிரச்சனை வேற. பூடினுக்கு இன்னும் ஓராண்டே பதவி பாக்கி இருக்கற இந்த நேரத்துல அமெரிக்கா ஒருபக்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஒருபக்கம், இதுதவிர தனியா உள்நாட்டுல ஆங்காங்கே பெரிய அளவுல anti government protests.. எல்லாத்தையும் எப்படி சமாளிக்க போறார்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

-------------
எழுத ஒண்ணுமேயில்லாத நேரத்துல இந்தமாதிரி ஏதாவது வந்து அவலாயிடுது. அந்த வகையில எஸ்டோனியாவுக்கு ரொம்ப நன்றி. என்ன குரூரமான ஆளுன்னு வாயடைச்சு போயிடாதீங்க. இருநூறத் தொடறது ரொம்பவே கஷ்டம்பா...பட்டாதான் தெரியும். :))
------------
சுட்டீஸ்:
http://www.moscowtimes.ru/stories/2007/05/03/001.html
http://www.spiegel.de/international/europe/0,1518,480739,00.html
----------
UpDates on 04/05

இன்றைக்கு எஸ்டோனியாவின் அதிபர் அலுவலகம் அமெரிக்க உள்துறைச் செயலர் காண்டோலீஸா ரைஸ் இவ்விஷயத்தில் எஸ்டோனியாவை ஆதரிப்பதாக தொலைபேசியில் சொன்னதாக அறிவித்துள்ளது.

எஸ்டோனியாவின் கோரிக்கைக்கு இணங்க நாடோவும் ஐ.ஒன்றியமும் மிகக் கடுமையான முறையில் ரஷ்யாவை கண்டித்துள்ளன. ஐ.ஒன்றியம் WTOவில் ரஷ்யா சேர்வதற்கு இது இன்னுமொரு தடைக்கல் என்ற தொனியில் அறிக்கை விட்டுள்ளது. வரும் மே.18 ஐ.ஒ-ரஷ்ய மாநாடு சமாராவில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்டோனிய தூதர் இருவார விடுமுறையென தாய்நாட்டிற்கு சென்றுவிட்டார். நாஷி அமைப்பு ஆட்கள் எஸ்டோனிய தூதரகத்தின் முன் நடத்திவந்த ஆர்ப்பாட்டத்தை, தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப தூதர் வெளியேறிவிட்டதால், நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

4 Comments:

  1. வடுவூர் குமார் said...

    பிரச்சனையின் ஆழம் அதிகமாகும் போல் இருக்கிறதே!!
    தகவலுக்கு நன்றி.


  2. மணியன் said...

    உருப்படியாக நாலு விதயம் தெரிந்து கொள்ள முடிந்த பதிவு. இதுபோல இருநூறு வர வாழ்த்துக்கள் !!


  3. rv said...

    ஆமாம் வடுவூர் குமார்,
    இன்னும் குளறுபடியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. வரும் 18ஆம் தேதிக்குள் முடிவு காணவேண்டியது அவசியமாகிறது.


  4. ENNAR said...

    ம் ம் என்னமோ போங்க


 

வார்ப்புரு | தமிழாக்கம்