177. சக்கரவர்த்தி திரு(ட்டு)மகன்


தமிழ்நாட்டை விட்டு மாஸ்கோவுக்கு வந்தபுதிதில் கொஞ்சம் வியந்துதான் போனேன். இங்குள்ள கட்டிடங்களையும், அவற்றின் அழகையும் பார்த்துமட்டும் அல்ல. Piracy என்னும் பேய் செய்யும் அட்டகாசங்களை பார்த்து. நம்ம ஊரு பஸ் ஸ்டாண்டு ப்ளாட்-ஃபாரத்துல விற்கப்படும் கண்ணாடி, சீப்பு, சோப்பு டப்பாக்களைப்போல மைக்ரோசாஃப்டும், மாக்ரோமீடியாவும், அடோபியும் கூறுகட்டி விற்கப்பட்டதை பார்த்து. இது தவிர, உலகத்துல யாரெல்லாம் மென்பொருட்கள் பண்றாங்களோ அவங்களோட படைப்புகளையும் தெருவுக்கு கொண்டுவந்துவிடுகிறார்கள்.

மென்பொருள்-னு நான் சொல்றது பீ.ஸி-விளையாட்டுக்களில் தொடங்கி அன்றாடம் நாம் பயன்படுத்தும் தளங்கள் (OS), மேசை பிரசுர செயலிகள் (Desktop Publishing), தினசரி உபயோகிக்கும் Media Players/Converters, CD-Writing, Anti-Virus, அறிவியல் மென்பொருள், உலக இசை படைப்புகள் (MP3 வடிவில்), இப்படி ஒன்றையும் விட்டுவிடாமல் எல்லாமே கிடைக்கும். ஒரு மென் தட்டை (CD)
எடுத்துக்கொண்டால், அதனுடைய 650 MBக்குள் எத்தனை செயலிகளை நிரப்பமுடியுமோ அத்தனையும் நிரப்பி ஒரு கூட்டாஞ்சோறாக கொடுப்பார்கள். இதில் பல வகை உள்ளது. ஒன்று, ஒரு நிறுவனத்தின் பொருட்களை மட்டும் நிரப்புவது, எ.கா-வாக, மாக்ரோமீடியா என்று எடுத்துக்கொண்டால், அவர்கள் நிறுவனத்தைத் தொடங்கியது முதல் நேற்று வெளியிட்ட மென்பொருள் வரை அனைத்தையும் அதில் நிரப்பிவிடுவார்கள். இப்படி நிறுவனங்களுடைய செயலிகளை மொத்தமாக பிரித்துவிடுவது. இரண்டாவது, செயலிகளை ஜாதிவாரியா பிரித்து வெளியிடுவது. எ.கா-உலகின் பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் மேசை பிரசுர செயலிகளினுள் மிகச்சிறந்தவையை தேர்ந்தெடுத்து அவற்றை ஒரு தட்டில் நிரப்பிவிடுவது. இப்படி ஒன்ரிரண்டு தட்டுக்களை வாங்கிக்கொண்டுவந்து வீட்டில் உட்கார்ந்து அவைகளின் உண்மைவிலைகளை இணையதளங்களில் தேடிபார்த்தால், ஒரு மென்பொருள் தட்டின் விலை 1000 அல்லது 1500 டாலர்களைத்தாண்டும்.

Image hosted by Photobucket.com
படத்தில் காண்பது 'Multimedia' என்ற பிரிவில் வெளிவந்துள்ள ஒரு தட்டின் உறை (டிவிடி-யில்)


பல இடங்களில், மிகவும் விலை உயர்ந்த SAP, Oracle, Avid போன்ற நிறுவனங்களின் செயலிகளும் கிடைக்கும். இவைகளெல்லாம், பெரிய பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் செயலிகள். ஒருமுறை வீடியோ படத்தொகுப்புக்கென ஒரு தட்டினை வாங்கினேன். அதில் Avid Newscutter XP என்ற ஒரு செயலி இருந்தது. அதனைப் பற்றி இணையத்தில் தேடியதில், அது உலகின் மிகப் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களும், ஹாலிவுட் ஸ்டுடியோக்களும் பயன்படுத்தும் செயலி என்று அறிந்தேன். அதன் விலை? அதிகமில்லை ஜென்டில்மென், பிச்சைக்காசு 7000 டாலர்கள்தான். இத்தனைக்கும் அந்த செயலி, வாங்கிய தட்டிலிருந்த பல செயலிகளில் ஒன்றுதான். அதைத்தவிர, அடோபி, பின்னகிள், இப்படி பல நிறுவனங்களின் செயலிகளும் அதில் அடக்கம்.

Image hosted by Photobucket.com
மென்பொருள் தட்டு உறையின் பின்புறம்


இந்த திருட்டு தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்ப்பு இங்கே. இதற்கு பல காரணங்கள் உள்ளது. விலையில் இவை மிகக்குறைவு என்பது ஒரு காரணம். மாஸ்கோவிலோ, சான்க்ட் பீட்டர்புர்கிலோ நான் பார்த்தவரை அனைவருமே ஒரே விலைதான். அதாவது, ஃப்லாட் ரேட்டாக, ஒரு தட்டு 70 ரூபிள்கள் (Roubles). இது டாலர் கணக்கில் 2.4$ வரும். கிடைக்கும் பொருளின் தரத்தோடு ஒப்பிடும்போது, இது சில்லரைக் காசுதான். ஆனால், விலை குறைவாக இருந்தாலும், ஒவ்வொரு தட்டும், அதை அவர்கள் செய்திருக்கும் தரமும் வியக்கவைக்கும். முதலில், வெளிப்புரத்தை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு சிடி-க்கும் கண்டிப்பாக ஒரு சிறப்பான Plastic Case கிடைக்கும். அந்த உறையின் முகப்பில், உள்ளிருக்கும் மென்பொருள்களில் சிறந்தவைகளை குறிப்பிட்டு அவற்றுக்கு தொடர்புடைய அழகான படம் ஒன்று பின்னணியில் இருக்கும். மேலும் பின்புறத்தில், உள்ளடங்கிய மென் பொருட்கள் ஒவ்வொன்றின் விபரம் அழகாக அச்சிடப்பட்டு காணலாம். பார்ப்பவர்களுக்கு, ஏதோ ஒரு அசல் நிறுவனமே வெளியிடும் பொருளைப்போல இருக்கும்.

வெளியில் அப்படி என்றால், தட்டின் உள்ளேயும் ஒரு நேர்த்தியை காணலாம். தட்டை கனிணியுள் செலுத்தியவுடன் Auto-run ஆகும் பட்சத்தில், Flash அல்லது HTMLலில் செய்யப்பட்ட ஒரு பக்கம் தொடங்கிவிடும். உள்ளிருக்கும் செயலிகளைப்பற்றி அறிந்துகொள்ளவும், பிடித்தவற்றை இறக்கிக்கொள்ளவும் வசதியாக சுட்டிகளும், விவரங்களும் அதில் இருக்கும். மேலும், தேவைப்படும் செயலிகளுக்கு உறிய Crack-களும் இருக்கும். இதுவரை நான் வாங்கியுள்ள தட்டுகளில் ஒன்றுகூட மாறி இருந்ததில்லை. அனைத்திலும் ஒரு நேர்த்தி, அழகு. உலகின் பல இடங்களில் இப்படிப்பட்ட கொள்ளை செய்யப்பட்ட மென்பொருள் தட்டுக்கள் கிடைத்தாலும், இங்கு கிடைக்கும் தட்டுக்கள் போல நான் கண்டதில்லை.

Image hosted by Photobucket.com
'Pirates' பீ.ஸி-விளையாட்டின் தட்டு மற்றும் உறை


ரஷ்ய அரசியல் சட்டத்தில் இந்த திருட்டுக்களை ஒழிக்க பலமான விதிமுறைகள் இன்னமும் வரவில்லை என்பதே இவர்கள் இன்று தழைப்பதற்கு காரணம். சில வாரங்களுக்கு முன் AllOfMP3.com என்ற ரஷ்ய இணையதளத்தை, International Federation of the Phonographic Industry (IFPI)-இன் உந்துதலின் பேரில் கோர்ட்டுக்கு இழுத்தது ரஷ்ய போலிஸ். காரணம், அவர்களது தளத்தில் உலகின் பல மூலைகளில் இருந்தும் வெளியாக இசை ஆல்பங்களை போதிய பதிப்புரிமை இல்லாமல் MP3 வடிவில் விற்கிறார்கள் என்பதே. அதுவும் எப்படி, ஒரு பாட்டுக்கு இவ்வளவு விலை என்றில்லை. 5$-க்கு 500 பாடல்கள் என்ற கணக்கில். எதிர்பார்த்தார் போல், வெளிநாடுகளிலிருந்தும் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அந்த இணையதளத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்துவிட்டார்கள். எப்படி? ரஷ்ய சட்டத்தில் எந்த ஒரு படைப்பை விற்கவும் Copyright மிக அவசியம் என்றுதான் உள்ளது. ஆனால், online distribution பற்றி ஒரு வரி கூட இல்லை. இவர்களது சட்டம், அனுமதி மீறியதாக சொல்லப்படும் பொருள் Material Goods அதாவது Physical copiesஆக இருக்கவேண்டும். இந்த இணையதளமோ, பாடல்களை MP3 வடிவில்தானே(electronic-ஆக) விற்கிறது. ஆக, அவர்கள் மீது கிரிமினல் குற்றத்தை பாய்ச்ச முடியாது என்று கூறிவிட்டார்கள். இதன் மூலம், ரஷ்ய சட்டத்தில் பதிப்புரிமைக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்று புரியும்.

ஆனால், சென்ற ஆண்டுவரை நகரத்தின் எல்லா இடங்களிலும் நடைபாதைகளில் விற்றுவந்தவர்களை, மாஸ்கோ மாநகராட்சியே ஒரு பெரிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்து அதற்குள் கொண்டுசென்றுவிட்டார்கள். விற்பனையை தடை செய்தபாடில்லை. இந்தியாவில் NASSCOM போன்ற அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் கண்டிப்பாக அசல் செயலிகளைத்தான் வாங்க வேண்டும் என்று கடிவாளம் போடுகிறார்கள். ஆனால், இங்கு அப்படியும் இல்லை. பல அலுவலகங்களிலேயே திருட்டு செயலிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

Image hosted by Photobucket.com
சான் பென்
நடித்த 21 Grams/Mystic River - இரண்டு படங்களை உள்ளடக்கிய டிவிடி

இன்று, கனிணியைத்தாண்டி, இந்த தொழில் DVDகளுக்கும் வந்துவிட்டது. புதிய ஹாலிவுட் படத்தின் DVD வெறும் 80 ரூபிள்தான். இவைகளும் மென்பொருள் தட்டுக்களைப்போல, ஒரு தட்டில் இரண்டு படங்கள் (நடிகர் அல்லது genre வகையில் பிரித்து) அதே 80 ரூபிளுக்கு, சுத்தமான அசல் டால்பி/டீ.டி.எஸ் 5.1 சப்தங்களோடு கிடைக்கின்றன. அப்படி டீ.டி.எஸ் லாம் உங்களுக்கு முக்கியமில்லையெனில் ஒரு தகடில் பத்துபடங்கள் வரை ஸ்டீரியோ ஒலியுடன் வைத்துள்ளார்கள். முக்கியமாக, சான்க்ட் பீட்டர்புர்க் மாநகரத்தில், DVD கடைகள் ஏராளம். இந்த விஷயங்களுக்கிடையில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த திருட்டு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களுடைய பெயரையோ, விலாசத்தையோ, வெளியிட சிறிதுகூட யோசிப்பதில்லை. ஒவ்வொரு தட்டிலும், அதை தயாரித்த நிறுவனத்தின் பெயர், அதன் முழு விலாசத்துடன் பின் பக்கத்தில் இருக்கும். படங்களை உற்று கவணியுங்கள், ஒவ்வொன்றிலும், ஏதோ அசல் தயாரிப்பு போல Bar-Code கூட இருப்பதைக் காணலாம். சிலர் ஒருபடி மேலே போய், அவர்களது வெளியிடும், வெளியிடப்போகும் தயாரிப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள இணையதளங்களையே நடத்திவருகிறார்கள். 'செய்வதை திருந்தச் செய்' என்ற முதுமொழியை தவறாமல் பின்பற்றுபவர்கள் இவர்கள்.

shop505 - சான்க்ட் பீட்டர்புர்கில் உள்ள ஒரு புகழ்பெற்ற திருட்டு படைப்புகளை விற்கும் '505'
நிறுவனத்தின் தளம். இங்கு அவர்கள் கடைகளின் விவரங்கள், புதிய படைப்புகளின் விமர்சனங்கள், தகவல்களைக் காணலாம். ரஷ்ய-னில்தான் உள்ளது. கொஞ்சம் scroll பண்ணி பாருங்கள்.


----------------
பி.கு: பழைய நண்பரிடம் பழையபடியே சுட்டது.

176. பிரியா விடை பெற்றாள் என் காதலிகளுள் ஒருத்தி!

இது பை பை சொல்லும் காலம். இருந்தாலும் இப்படியொரு கொடுமையான பை பை சொல்லவேண்டி வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் தயாரிப்பில் இருந்துவிட்டு நம்மை விட்டு சென்றுவிட்டாள் எல்லோரையும் கவர்ந்த Zen என்னும் உலக அழகி. அவளுக்கு சரியான obituary கூட கிடையாது. அழகிய இளங்குமரியை கோர கிழவியாக்கி, அக்கிழவியைப் நடைபிணமாக்கி ஒருவழியாக பாக் செய்து வெற்றிகரமாக அனுப்பிவைத்துள்ளனர் மாருதி உத்யோக் காரர்கள். அக்குமரியின் நினைவாக இப்பதிவு.

Classic Yellow Beauty




zen அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தை நினைத்துப்பார்க்கிறேன். ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தேன் அப்போது. ஹிந்துவில் விளம்பரம் வந்திருந்தது. சிகப்பு கலர் ஜென் ஒன்றின் front 1/3 ப்ரோபைல் படம். Engineered for Exhilaration என்ற tag line உடன். பார்த்த நொடியிலேயே crush. அதன் நளினமான stance இலா இல்லை டிசைனிலா - எதில் மயங்கினேன் என்று தெரியவில்லை. ஓட்டவேண்டாம,் பார்த்தாலே பரவசம். பெரிய specifications ஒன்றும் கிடையாது. ஆனால் அதன் கியர்பாக்ஸும், rev செய்ய செய்ய இன்னும் இன்னும் என்று கெஞ்சும் துடிப்பான எஞ்சினும் என அப்போது ஜென்னை ஓட்டியவர்கள் எல்லாரையும் சொக்கிப்போகத்தான் வைத்தது. வந்தவுடன் மிகப்பெரிய வெற்றியடைந்துவிடவில்லை. 93-ல் டெல்லி வீதிளிலேயே சில வண்டிகளை மட்டுமே பார்த்தேன். ஆனாலும் பேப்பரில் பார்த்த மோஹினியை நேரில் பார்த்தது பரவசமாகத்தான் இருந்தது. என்னமோ சினிமா ஸ்டாரைப்போல எப்போதாவது ரோடுகளில் கண்ணில் பட்டு மறைவாள்.


Chic in Stunning Red



பின்னர் என் நண்பன் வீட்டில் புக் செய்து, பலமாதங்கள் காத்திருந்து வாங்கினார்கள். அதுவும் ப்ரீமியம் எல்லாம் கொடுத்து வார்த்தையில் வர்ணிக்க இயலா மஞ்சள். இத்தனைக்கும் பாடி கலர் பம்பர், ORVMகள், அல்லாய்ஸெல்லாம் கிடையாது. ஏன் பவர் ஸ்டியரிங், பவர் விண்டோ, செண்ட்ரல் லாக்கிங் கூட கிடையாது. ஒரிஜினல் மிசெலின் ட்யூப்லெஸ் டயர்களுடன் வந்தது. அந்த அழகியைப் பார்க்கவென்றே அவன் வீட்டிற்கு அடிக்கடி போய் வந்துகொண்டிருந்தேன். நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பது போன்ற அழகு. jelly bean டிசைன் என்று அப்போது அமர்க்களப்பட்டது.


Zen VX - Revamped



ஒரு வழியாக மூன்று வருடங்கள் காத்திருந்ததன் பயனாய் 97-ல் ஒரு சொக்கவைக்கும் வெள்ளை அழகி வீட்டினுள் வந்தாள். மஞ்சள் கூடவே கூடாதென்று மேலிடங்கள் உத்தரவிட்டதன் பேரில் வெள்ளை. இருந்துமென்ன 'a zen is a zen is a zen'. காரினுள் நான்கு 'பெரிய'வர்கள் பயணம் செய்ய இயலாது. அதிகபட்சம் இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள். அவ்வளவுதான் இடம். டிக்கியில் ரெண்டு குடை வைத்தால் இடம் காலி. இப்படி இடப்பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சனையாகத்தான் இருந்தது. இதைத்தவிர nags நிறைய. ஆனால் ஓட்டுநர்களுக்கு எந்தக்கவலையானாலும் அதை மறக்கச்செய்யும் அளவுக்கு போதையேற்ற வல்லவள் zen. போதையின் காரணம் அவளின் எஞ்சின் - கியர்பாக்ஸ் ஜோடி. ஓட்ட ஓட்ட சுகம். கூட உட்கார்ந்து வருபவர்கள் எல்லாம் சோர்ந்து போனாலும், ஓட்டுநருக்கு மட்டும் 'மற்ற மனிதர் உணர்ந்துகொள்ள அது மனிதக்காதல் அல்ல'. கன்னியாகுமரியிலிருந்து திருப்பதிவரை நாகப்பட்டினத்திலிருந்து திருவனந்தபுரம் வரை என ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கூடவே வந்தவளை இன்னொருவரின் கையைப்பிடித்துக் கொடுக்கவேண்டுமென்றால் தாங்குமா? என்ன செய்ய, ப்ராக்டிகல் காரணங்களுக்காகவும் மாருதி சர்வீஸ் செண்டரின் அலட்சியப்போக்கினாலும் மாருதி வைத்துக்கொள்வது இனி லாயக்குப்படாது என்று சொல்லி அந்த வெள்ளை அழகியைக் கொடுத்தாகிவிட்டது.

இப்படி அவளுடனான எனது தேனிலவு வெறும் நான்கு வருடங்களே ஆனாலும் அவளின் அடிமையாய் முற்றிலுமாய் மாற்றிவிட்டு சென்றாள் என்னைவிட்டு.
Zen Classic - What was Maruti thinking?




அவள் இருந்த இந்த குறைந்த வருடங்களில் பல மேக்கப், பல எஞ்சின்கள் என மாற்றி அவளை நிம்மதியாக இருக்கவிடாமல் படுத்திக்கொண்டிருந்தனர் மாருதியைச் சேர்ந்தவர்கள். ஜென் க்ளாசிக் என்று கண்ணாலே பார்க்ககூட முடியாத அந்நியன் மேக்கப்பை போட்டு என் காதலியை அவமானப்படுத்தினர். அவள் இடைக்கும் நடைக்கும் துளியும் பொருந்தாத பீஜோ டிசலை உள்ளே வைத்து பாடாய்ப்படுத்தினர். பின்னர் Lx, Lxi, Vx, Vxi, A, D என ஸ்டிக்கர் மேல் ஸ்டிக்கர் பொட்டாய் ஒட்டித்தீர்த்தனர். இவற்றைக்கூட பரவாயில்லை என்று ஒதுக்கித்தள்ளிவிடலாம்.

ஆனால் புதுசாக்குகிறேன் என்று சொல்லி அவள் முகத்தையும் பின்புறத்தையும் சின்னாப்பின்னப்படுத்தியைத்தான் தாங்கமுடியவில்லை. ஒரிஜினல் '93 டிசைனின் மிகப்பெரிய ப்ளஸ்களான ஹெட் லைட்டுகளையும், டெயில் லாம்ப்களையும் அநியாயத்திற்கு மகா கண்றாவியாய் மாற்றி 2003 இல் 'புத்தம்புதிய ஜென்' என்று தெருக்களில் அவளை அரைநிர்வாணமாய் ஓடவிடுவதுபோல விட்டனர். அப்படியும் நேற்றுமுளைத்த அசிங்கமான சாண்ட்ரோகளுக்கு போட்டியாக நளினமாகத்தான் ஓடினாள் ஜென். மாருதியினர் அவளுக்கு செய்த கொடுமைகளெல்லாம் போதாமல் முத்தாய்ப்பாய் முள்கீரிடம் வைப்பதுபோல 'எஸ்டிலோ' என்னும் அசிங்கத்திற்கு Zen என்கிற அழகியின் பெயரை வைத்துள்ளனர். காதலியைக் கொன்றுபுதைத்துவிட்டு ராட்சசிக்கு இளவரசி பட்டம். அவள் பெயரில் ஆள்மாறாட்டம். மோகினிக்குப் பதில் சூர்ப்பனகை. ராட்சசி காதலியாக முடியுமா என்ன?

The Typical Maruti Makeover. Scarily Made Up! Jelly Bean Design gone down the drain!



மாருதி 800களும் டப்பா ஆம்னிகளும் இன்னும் தயாரிப்பில் இருக்கையில் இவளின் கதையை மட்டும் சட்டென்று முடித்துவிட்டனர். பாவம் மாருதியிடம் சிக்கிக்கொண்டுவிட்டாள் என் காதலி. இந்த அழகி பிறந்திருக்கவேண்டிய இடமே வேறு. அவளை வைத்து நாளும் கொண்டாடியிருப்பார்கள். இருந்தாலும் ஆறுதலாய், இப்போது நம்மைவிட்டு போனாலும், செகண்ட் ஹாண்ட் கார் சந்தையில் பலவருடங்களுக்கு சீரும் சிறப்புமாய் உலாவருவாள் என்பதில் சந்தேகமேயில்லை. அவ்வப்போது சாலைகளில் அதே பழைய மிடுக்குடனும் துடுக்குடனும் எதிர்ப்புறம் அவள் பறக்கையிலே உதட்டோரமாய் ஒரு சின்ன புன்னகை பூக்காமல் போகாது என்பது நிச்சயம்.
This? A Zen? More like Wagon R's Ugly Twin!



--------
முந்தாநேற்றைக்கு ஒரு 94 வருடத்து மஞ்சள் ஜென் பெயிண்ட் கூட மங்காமல், இண்டீரியர்களெல்லாம் பளிச்சென்று பார்க்க நேர்ந்தது. உண்மையாகவே பொறாமையாக இருந்தது. இந்த அழகி நம்மிடம் இல்லையே என்று. அதோடு கூட புது ஜென் எஸ்டிலோவை ஷோரூமில் பார்த்துவிட்டு வந்த ஆத்திரத்தில் எழுதியது.

174. பூச்சி காட்டட்டுமா?

காமிரா வச்சுருக்கவங்க எல்லாரும் அப்பப்போ மாக்ரோ எடுத்து அலட்டறது வழக்கம். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? இதோ சில பூச்சீஸ்.

கைல எடுக்கறது பிடிக்காதுன்னாலும், பூச்சீஸ காமிரால்ல எடுக்க ரொம்பவே பிடிக்கும். எத்தன வண்ணங்கள் எத்தனை டிஸைன்கள்னு கணக்குவழக்கே இல்லாம படைச்சு வச்சுருக்கான். பூச்சிகள்னு சொன்னாலே பலருக்கு ஏதோ தங்க கைல தான் ஏதோ நெளியறாப்போல இருக்கும். ஆனா பாருங்க, அதுங்க இருக்கறது ஒரு தனி உலகம். honey i shrunk the kids னு அந்தக் காலத்துல ஒரு குழந்தைங்க படம் உண்டு. சைண்டிஸ்ட் அப்பா எதையோ செய்யப்போக குழந்தைங்க எல்லாம் அரிசி சைஸுக்கு ஆயிடுவாங்க. டினோசார் மாதிரி கட்டெறும்புகளும், திமிங்கிலம் மாதிரி கரப்பான்பூச்சிகளும், பெரிய பெரிய மரங்கள் மாதிரி புற்களும்னுட்டு பயங்கர தமாஷா இருக்கும்.

பூச்சிகளும் நாமளும் ஒரே பூமியில இருந்தாலும் நம்ம கண்ணுக்குத் தெரியாத உலகம் அதுங்களோடது. வீட்டுத் தோட்டத்துக்கு போய் ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு சுத்தி முத்தி பாத்தா தான் தெரியும். இக லோகம் பரலோகம் மாதிரிதான் தத்துவார்த்தமா சொன்னாக்க. நின்னு கவனிச்சாத்தான் கண்ணுக்கே புலப்படும். அவசர வாழ்க்கையில எங்க இருக்கு நேரம்?னு சலிச்சுக்கறீங்களா.. ஹூம்.. என்ன செய்ய..

அரேபிய பாலைவனங்களா, அமெரிக்க வைல்ட் வெஸ்டா, சைபீரியன் பைக்கல் ஏரியா, ஆர்க்டிக் பனிமலைகளா, இந்திய சமவெளிகளா, ஆஸ்திரேலியாவின் டவுன் அண்டரா, பிஜித்தீவுகளா, ஆப்பிரிக்க காடுகளா, ஸ்காண்டினேவியன் பியார்டுகளா, கனேடிய ராக்கீஸா, தென்னமெரிக்க அமேசோனா, கரீபியன் கடற்கரைகளா, மங்கோலியன் ஸ்டெப்பீஸா? எதைப் பார்ப்பது எதைவிடுவது என்று தெரியாமல் எத்தனை ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் பார்த்து முடிக்க முடியாத அளவுக்கு எழிலும் வண்ணமும் கொஞ்சும் உலகத்துல பிறக்க கொடுத்துவச்சுருக்கோம். ஆனாலும் நின்னு நிதானமா ஒரு நொடி ரசிக்கக்கூட முடியாம அப்படி என்னதான் ஓட்டம் வேண்டிக்கிடக்கோ தெரியவேயில்லை. நாமளே ஏற்படுத்திகிட்ட ஓட்டம். எல்லையில்லா ஓட்டமாகி சற்று தள்ளியிருந்து பார்த்தால் கொஞ்சம் சாடிஸ்டிக்காகவும் இருக்கிறது. நாய்க்கு ஒருவேலையும் இல்லையாம், அலைச்சலுக்கு மட்டும் குறைச்சலும் இல்லையாம் னு சொல்ற மாதிரி ஒரு ஓட்டம்.

நான் என்னவோ எழுதிக்கிட்டிருக்கேன். நீங்களும் கடனேன்னு படிச்சுகிட்டிருக்கீங்க. இத்தோட ஸ்டாப்பு. இனி படம் மட்டும் பாருங்க.

























175. கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு

கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது. விரதமிருப்பதும் தீபம் ஏற்றுவதும் பலருக்கு நடப்பதில்லையென்றாலும் கோபுரத்தையாவது தரிசிக்கலாமே.

இதோ சில கோபுரங்கள்:

1. தில்லை நடராஜர் திருக்கோயில்




2. தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில்



3. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்



4. மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்.


கும்பகோணம் என்ற பெயர் வரக்காரணமான ஈசன். பிரளய காலத்தின் போது மண் குடத்தில் அமிர்தம் மகாமேருவில் இருந்து உருண்டு வர, அதை வேட ரூபம் கொண்டு அம்பெய்தி உடைத்தார் பரமேஸ்வரன். அந்த உடைந்த குடம் தங்கிய இடமே குடந்தை ஆனது. வழிந்த அமிர்தமே மகாமக குளமானது என்று ஐதீகம். இங்கேயுள்ள சிவலிங்கத்தின் மேல் மண் குடத்தின் கலசம் சாய்ந்தாற்போல் கோணலாக இருப்பதால் கும்பகோணம் என்ற பெயர் பெற்றது.

5. திருச்சேறை ஞானாம்பிகை சமேத செந்நெறியப்பர் (சாரபரமேஸ்வரர்) ஸ்வாமி திருக்கோயில்






திருச்சேறை சாரபரமேஸ்வரர் மற்றும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சாரநாதஸ்வாமியும் கால பைரவரும். இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் நாச்சியார்கோயிலுக்கு அப்பால் உள்ளது. ஓரே ஊரில் சாரநாதப் பெருமாளும், சாரநாதஸ்வாமியும் எதிரெதிர் கோயில்களில் உள்ளனர்.

கடன் தொல்லை நிவர்த்திக்கென தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றது இந்த சிவன் கோயில். நாங்கள் தேடிய வரையில் மார்க்கண்டேயரின் பிறவிக்கடனை நிவர்த்தி செய்த சிவலிங்கம் என்று மட்டுமே தலவரலாற்று புத்தகத்தில் இருந்தது. ஆயினும் நமக்கு பிறவிக்கடனை பற்றி தற்போது என்ன கவலை? கவலையெல்லாம் வங்கிகளில் இருக்கும் கடனைப் பற்றிதானே. அதற்கு பதினோரு திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து இச்சிவனை வழிபட்டால் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது. நேரில் வர இயலாதவர்கள் "செயல் அலுவலர், அ/மி சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை - 612605, கும்பகோணம் தாலுக்கா" என்ற விலாசத்திற்கு ரூ. 165 மணியார்டர் அனுப்பினால் அர்ச்சனை செய்து பதினோரு வாரங்களுக்கு பிரசாதம் அனுப்பப்படும் என்று எழுதிவைத்துள்ளார்கள். தொலைபேசி: 0435-2468001

இங்குள்ள காலபைரவருக்கு என்ன விசேஷமென்றால் தமிழ்நாட்டில் திருநாவுக்கரசரால் தேவாரப்பதிகம் பாடப்பெற்ற ஒரே பைரவர் இவர்.

6. கண்ணபிரான் ரவிசங்கருக்காக சாரநாயகி சமேத சாரநாதப் பெருமாள் கோயில், திருச்சேறை



 

வார்ப்புரு | தமிழாக்கம்