168. மழை, பசி, கலாம் - 2

உரை முடிந்தவுடன் மாணவர்களுடன் கலந்துரையாடல் என்பது நிகழ்ச்சி நிரல். பாஞ்சாலி சபதத்தின் சரஸ்வதி வணக்கத்திலிருந்து ஒரு மேற்கோளுடன் தனது உரையை ஆரம்பித்தார் கலாம். தமிழில் தான் முழு உரையும் இருக்குமென்று நினைத்தால், சிறிது நேரத்தில் ஆங்கிலத்துக்கு தாவிவிட்டார். பர்னாலாவின் நன்மைக்காக இருக்குமென்று நினைக்கிறேன்.

சுருக்கமாக இதோ:

ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் பொருளாதார வளர்ச்சியிலும் அந்நாட்டின் பாதுகாப்பிலும் தான் அடங்கியிருக்கிறது.

இருபத்தியோராம் நூற்றாண்டு உலகத்தில் சமூகங்களின் முக்கிய மூலதனம் பணமோ, தொழிலாளர்களின் அளவோ அல்ல. மாறாக அறிவே முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. சமூகத்தில் அறிவாற்றலின் சீரான வளர்ச்சி மற்றும் அதன் முறையான பயன்பாட்டின் மூலம் வாழ்க்கைத் தரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும். சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு முதலிய அளவீடுகளைக் கொண்டு வாழ்க்கைத் தரத்தை அளக்கலாம். நம் கனவு முன்னேறிய இந்தியா. அதற்கு அடிப்படைத் தேவை அறிவுசார் சமூகம். இந்தியாவில் இயற்கை வளங்களுக்கும், மனித வளத்துக்கும் பஞ்சமேயில்லை. நம் நாட்டிற்கென்று சில core competencies உள்ளன. நம் நாட்டின் மக்கட்தொகையை சுமையாக எண்ணக்கூடாது. ஆனால், இவை isolated pockets ஆக சிதறிக்கிடக்கின்றன. இந்தியாவின் கிராமங்களுக்கு நகரங்களைப் போன்ற வசதிகள் கிடைக்கிற போதுதான் நாம் முன்னேறிய நாடாக ஆவோம்.

புதிதாக அறிவாற்றலைப் பரப்புவதும் இவ்வளர்ச்சியினை sustain செய்வதும் முக்கியமானது. தகவல்தொடர்பு தொழில்நுட்பம், வேளாண்மை, தொழிற்துறை மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் knowledge creation மற்றும் knowledge deploymentஐ எவ்வளவு திறமையாக செய்கிறது என்பதைக் கொண்டுதான் ஒரு நாடு வளர்ந்த அறிவுசார் சமூகமென்ற நிலையை அடைந்துவிட்டதா என்று சோதிக்க இயலும்.

*******************
இவ்விடத்தில் teleprompterஇல் பிரச்சனையா அல்ல உரை எழுதியதிலேயே பிரச்சனையா என்று தெரியவில்லை. இரண்டு பத்திகளை இரண்டு முறை படித்தார். இரண்டாவது முறை பாதி படித்தவுடன் குழப்பத்தை உணர்ந்து, அதி வேகமாக மனப்பாடம் செய்வது போல படித்து முடித்தார் கலாம். நமது குடியரசுத்தலைவரின் தளத்திலுள்ள உரையிலும் இத்தவறு இருக்கிறது.
***************
நம் நாட்டின் அடிப்படை படிப்பனைகளாக வல்லுநர் குழுக்களால் அடையாளம் காட்டப்படுபவை:
1. தகவல்தொடர்பு தொழில்நுட்பத்துறை
2. விண்வெளி ஆராய்ச்சி
3. பயோ-டெக்னாலஜி
4. வானிலை முன்னுரைத்தல் தொழில்நுட்பம்
5. நவீன tele-medicine மற்றும் tele-education

மேற்கூறியவை எல்லாமும் த.தொ.தொழில்நுட்பத்துறையென்னும் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

நம் இந்தியா தகவல்தொடர்பு சமூகமாக மாறிக்கொண்டுவருகிறது. ஆனால் அறிவுசார் சமூகமாக மாற இத்துறையில் மட்டுமில்லாமல் பல்முனைகளிலும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காணவேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் நமக்குச் சாதகமாக உள்ளது.

**************
பின்னர் இந்தியா 2020 பற்றிப் பேசினார். பிறகு கல்லூரியைப் பற்றிப்பேசியவர், நடுவில் நம் நாட்டின் மருத்துவமுறைகளான சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி முறைகளில் lack of scientific evaluation மற்றும் standardization பற்றிச் சொன்னார். இதற்கு அகில இந்திய அளவில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து வல்லுநர்களின் உதவியால் standardize செய்வதன் மூலம் இவ்வரிய முறைகளின் முழு potential-உம் மக்களைச் சென்றடைய உதவ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடல். முன்னரே யார் யார் என்னென்ன கேள்விகள் கேட்கப்போகிறார்கள் என்று குடியரசுத்தலைவரின் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கல்லூரிக்கு சொல்லப்பட்டிருக்கிறது (இத்தகவல் அக்கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கூறியது). அதனால் spontaneity குறைவுதான். சில கேள்விகளும் அதற்கான பதில்களும் பேராசிரியர் சொன்னதை உறுதிப்படுத்தின. இதில் எனக்கு நினைவில் நின்றவற்றை மட்டும் இடுகிறேன்.
____________________________________
1. உலகப் பொருளாதாரச் சந்தையை ஏன் வரவேற்கிறீர்கள்?
***
இப்படித்தான் கேட்டார். கலாம் அவர்களுக்கும் எதைக் குறித்துக் கேட்கிறார் என்று புரியவில்லை. பின்னர் WTO என்று விளக்கம் சொன்னார் கேட்டவர்.
***
பதில்: நாட்டின் முன்னேற்றத்திற்கு competitiveஆக் பொருட்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது இன்றியமையாதது. அப்படி செய்யக்கூடாது என்று சொன்னால் முன்னேறிய நாடுகள் அந்நிலையில் இருக்காது. அவை அதே கொள்கையை நமக்கும் விதித்தால், நம் முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்படும். உ.வர்த்தக சந்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், இந்தியாவுக்கு அதில் சில reservations இருக்கின்றன. இந்தியாவின் கொள்கைகளுக்கும், வளர்ச்சிக்கும் எதிரான அவற்றை நிவர்த்தி செய்யும்வரை பாரதம் விடாமல் போராடும்.

________________________________________________________________________
2. நீங்கள் பலருக்கு inspiration ஆக இருக்கின்றீர்கள். உங்களுக்கு யாரை ரோல்-மாடலாக கொண்டுள்ளீர்கள்?
பதில்: இந்தியாவில் ரோல் மாடல்களுக்கா பஞ்சம். வள்ளுவரில் தொடங்கி காந்தியடிகள் வரை பலர் இருந்திருக்கின்றனர்.

_________________________________________________________________________
3. தென்கோடி இராமேஸ்வத்தில் ஒரு மிக வறிய குடும்பத்திலிருந்து உயர்ந்து குடியரசுத்தலைவராக முடிந்ததன் பின்னால் உள்ள ரகசியம் என்ன?

பதில்: இதில் பெரிய ஆச்சரியமோ அதிசயமோ ரகசியமோ ஒன்றுமே இல்லை. உழைப்பு உழைப்பு உழைப்புதான். உழைப்போடுகூட நல்ல சிந்தனைகளும் இருந்தால் யார் வேண்டுமானாலும் வளர்ச்சியடையலாம். ஒருவராலும் தடுக்க இயலாது. அய்யன் வள்ளுவன் சொன்னதுபோல "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு". எவ்வளவுக்கெவ்வளவு நல்ல உயர்ந்த எண்ணங்களை வச்சுருக்கோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு முன்னேற்றமும் உண்டாகும். இதை எப்பவும் நினைவில் வச்சுக்கணும்.

-----------------------------------------------------------------
4. நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருந்ததற்கும் ஜனாதிபதியாக இருப்பதற்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

பதில்: பெரிதாக ஒன்றுமே இல்லை. சொல்லப்போனால் இரண்டுக்கும் பெரிய ஒற்றுமைதான் இருக்கிறது. அது hard work. விஞ்ஞானியா இருந்தப்பவும் செய்தேன். இப்பவும் செய்கிறேன்.

------------------------------------------------------------------
5. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நல்லுறவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா? இவ்விஷயத்தில் ஒரு முஸ்லீம் என்ற முறையில் உங்கள் கருத்தென்ன?
பதில்: அம்மா, இப்படித்தான் நான் நாகாலாந்து போயிருந்தப்ப ஒரு கல்லூரியில ஒரு மாணவன் கேட்டான். 'நீங்க சைண்டிஸ்டா? பிரசிடெண்டா? முஸ்லீமா? தமிழ் ஆளா?ன்னு'. நான் அவனுக்கு ஒண்ணே ஒண்ணு தான் சொன்னேன். நான் இது எதுவும் இல்லை. நான் ஒரு நல்ல மனிதன். அவ்வளவுதான்.

-------------------------------------------------------------------
6. இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்கிறீர்கள். ஆனால் இந்திய இளைஞர்களோ வெளிநாட்டில் இருக்கிறார்களே?
பதில்: இளைஞர்கள் மட்டுமில்லம்மா. இளைஞிகளும் தான். (**கேட்டவர் ஒரு மாணவி**) நம் நாட்டுல ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் பொறியாளர்களும், ஒரு லட்சம் மருத்துவர்களும் படிச்சுட்டு வராங்க. இதுல வெளிநாட்டுக்கு போகிறவர்கள் என்பது ஐந்து சதவிகிதம் கூட இருக்காது.

அதுவும் இல்லாம 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' நம்ம பெரியவங்க சொல்லிட்டு போயிருக்காங்க இல்ல. அப்படி வெளிநாடு சென்று சம்பாதிப்பவர்களுக்கும் இந்தியாவிற்குத்தானே பணத்தை அனுப்புகிறார்கள்? ஒரு வீடு நன்றாக இருந்தால் ஒரு தெரு நன்றாக இருக்கும். ஒரு தெரு நன்றாக இருந்தால் ஒரு ஊர் நன்றாக இருக்கும். இப்படி நாடே நன்றாக இருக்கும், இதில் தவறொன்றுமில்லை.

------------------------------------------
இன்னும் ஒரிரு கேள்விகள் கேட்டார்கள். எனக்குத்தான் மறந்துவிட்டது. :(

இப்படி நேரம் போய்க்கொண்டிருப்பது தெரியாமல் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தவரின் முன்னால் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தாமதமாகிவிட்டதென்று குறிப்பை வைக்கவும், இதோடு முடித்துக்கொள்ளலாமா என்று கேட்டுவிட்டு பின்னர் சில உறுதிமொழிகளை தான் சொல்லி மாணவர்களைத் திரும்பச் எடுத்துக்கொள்ளச் சொன்னார்.

உரையை முடித்து இருக்கைக்குச் சென்றவர், ஒரு புத்தக bundleஐ கல்லூரி நூலகத்திற்கு தன் அன்பளிப்பென்று தானே மைக் முன்னர் மறுபடி வந்து கூறிச்சென்றார். அதற்குப்பின்னர், கல்லூரி முதல்வர் துரிதகதியில் நன்றியுரையை வாசிக்க, அதற்குள் கார் பட்டாளம் மறுபடி அணிவகுப்பிற்கு வந்து நின்றிருந்தது. கிடுகிடுவென்று கூட்டத்தை நோக்கி கையசைத்தவாறே மேடையிலிருந்து இறங்கிப் பறந்தார் நம் குடியரசுத்தலைவர். மணி அப்போது ஆறு முப்பத்தியைந்து. இருபதுநிமிடத்தில் முடியவேண்டிய விழா ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்ததற்கு காரணம் நம் ஜனாதிபதிக்கு மாணவர்களின் மேலுள்ள அன்பும் அக்கறையும். இந்த ஒரு மணி நேரத்திற்காக ஒரு வாரகாலமாக ஏற்பாடுகளுக்காக உழைத்து, பின்னர் காலையிலிருந்து கால் கடுக்க வெய்யிலிலும் பின் மழையிலும் காத்திருந்து கலாமைப் பார்க்க மாணவர் கூட்டம் ஒழுங்குடன் காத்திருந்தது என்றால் அதற்கு அவர் மேலுள்ள அன்பு என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?

வழியெங்கும் தோரணங்களும், ட்யூப் லைட்டுகளும், ஆளுயர மாலைகளும், கட் அவுட்களும், ஒருவரை ஒருவர் செயற்கையாக புகழ்ந்துகொள்ளும் முகஸ்துதியும், வாழ்க கோஷங்களும் என ஒரு அரசியல் தலைவர் கலந்து கொள்ளும் விழா என்பதற்கு ஒரு அடையாளம் கூட இல்லாமல் - கல்லூரிவிழாக்களில் நடக்கும் அமளிதுமளிகள் ஒன்றுமில்லாமல், தள்ளுமுள்ளு இல்லாமல் - கல்லூரிக்கும் அதன் விழாவிற்கு சம்பந்தமேயில்லாமல் திருவிழா போலப் பார்க்கச் சென்ற என்னுள்ளும் மாறாத தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுத்தான் சென்றார் நம் மேதகு குடியரசுத்தலைவர். முடிவில் மழையுமில்லை, பசியுமில்லை. கலாம் மட்டுமே மனதில் நின்றிருந்தார்.

வாழ்க கலாம்! இது கல்ட் இல்லை. அரசியலையும் ஆர்ப்பாட்டத்தையும் தாண்டி நாட்டின் வளர்ச்சி மேல் உண்மையான அக்கறை கொண்ட ஒர் நல்ல மனிதரை வாழ்க வென்று சொல்வதில் தவறேதுமில்லையே?

----------
திரு. அப்துல் கலாம் அவர்கள் பூண்டி கல்லூரியில் ஆற்றிய உரையின் முழு வடிவம் இங்கே

இவ்விழாவைப் பற்றிய என் முந்தைய பதிவு.

167. மழை, பசி, கலாம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை இருபத்தி நான்காம் தேதி தஞ்சாவூர் அருகில் பூண்டி கிராமத்தில் உள்ள ஆ. வீரய்ய வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நம் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களும் தமிழக ஆளுநர் திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வருவதாக இருந்தனர். மதியம் நான்கு மணிக்குத் தொடங்கி இருபது நிமிடங்கள் மட்டுமே நடக்கப்போகிறது என்று அழைப்பிதழில் இருந்தது. மதியம் இரண்டு மணிக்கே வந்துவிட வேண்டும், கைத்தொலைபேசி கூடாது, காமிராக்கள் கூடாது, குழந்தைகளுக்கு அனுமதியில்லை என்று ஏகப்பட்ட நிபந்தனைகளும் கூடவே போட்டிருந்தார்கள்.

முதலில் கூட்டத்திற்கு பயந்து போகவேண்டாமென்று நினைத்துப் பின்னர், இவருக்கு ஏன் இப்படி ஒரு cult following இருக்கிறது என்று பார்த்தே விட வேண்டுமென்று எண்ணி போவது என்று முடிவெடுத்தோம். நாலரைக்கு விழா முடிந்துவிட்டால் ஐந்து மணிக்கு வீட்டுக்கு வந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று தெனாவட்டாக மதியம் இரண்டு மணிக்கு சென்றோம். பாதுகாப்புச் சோதனைகள் என்று பெயரளவில் கூட இல்லை. ஒரே ஒரு மெட்டல் டிடெக்டர் உள்ளே சென்று வரச் சொன்னார்கள். அதுவும் நூற்றுக்கணக்கானவர்கள் இருந்ததால் தகுந்த முறையில் சரிபார்த்தார்களா என்றால் இல்லை. பொதுவாக எங்காவது ரொம்ப சோதனையிட்டார்கள் என்றால் நேரம் விரயமாகிறதே என்று அலுத்துக்கொள்வோம். ஆனால், இப்படி விழாக்களுக்கும் முக்கிய இடங்களுக்கும் செல்கையில் தகுந்த பாதுகாப்புச் சோதனைகள் இல்லாவிட்டால் கொஞ்சம் படபடப்பாகத்தான் இருக்கிறது. :)

திறந்தவெளி அரங்கம் தான். நடுவில் ஒரு பகுதி மட்டும் அஸ்பெஸ்டாஸ் கூரை. மிச்ச இடங்களில் பந்தல் போட்டிருந்தார்கள். மேடையிலிருந்து ஒரு இருபது அடி தள்ளிதான் பார்வையாளர்கள் வரிசைகளே ஆரம்பித்தன. அதில் நான்காவது வரிசையில் இடம் கிடைத்தது. அப்படியும் இடப்பற்றாக்குறையால் பலர் பந்தலுக்கு வெளியே. உள்ளே சென்று அமர்ந்தவுடன் பிடித்துக்கொண்ட மழை விட்டு விட்டு பெய்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. அரிமா சங்கத்தின் உபயத்தில் எல்லோருக்கும் கலாமின் பொன்மொழிகள் என்று ஒரு தாளில் அச்சிட்டுத்தந்தார்கள் கூடவே மினி தினமலரும். மழை நின்றாலும் பந்தலின் உள்ளே வழிந்த சகதிநீர் மூலம் அமர்ந்திருந்த எல்லோருக்கும் தலைவழியே drips ஏறிக்கொண்டிருந்தது. வெளியில் நின்றிருந்தவர்கள் குளித்தே முடித்திருந்தார்கள். கலாமின் அறிவுரைகள் வாழ்க்கையில் உதவியதோ இல்லையோ மழையிலிருந்து பலரின் தலையைக்காக்க உதவியது.

ஒரு மணி நேரம் தாமதமாக ஐந்தரை மணி சுமாருக்குத்தான் குடியரசுத்தலைவர் வருவாரென்று மூணரை மணிக்கு அறிவித்த உடன் திடிரென்று பசிக்க ஆரம்பித்தது. எங்கும் எழுந்து போக முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நாங்களாவது பரவாயில்லை. காலை பதினோரு மணியிலிருந்தே காத்திருந்த மாணவர்கள் கூட்டம் பொறுமையிழக்க ஆரம்பித்தது. அதுகூட எப்போதாவது ஒரு விசில் சத்தம், ஒரு கூச்சல் என்ற அளவிலே தான். அதற்கு சந்தர்ப்பம் கொடுக்கும் வகையில் விழாவுக்கு டி. ஜெவாக இருந்தவர்கள் ஒலிபெருக்கியில் அவ்வப்போது 'நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்' போன்ற தத்துவப் பாடல்களை ஒலிபரப்பி கிளுகிளுப்பூட்டினார்கள். மொத்தத்தில் கல்லூரி மாணவர்கள் என்றே சொல்ல முடியாத அளவில் அமைதியாக காத்திருந்தார்கள். நடுநடுவில் போலீஸ் உயரதிகாரிகளும் மற்ற முக்கியஸ்தர்களும் கார்களில் வர, கலாம் தான் வந்துவிட்டார் என்று கூட்டத்தில் சலசலப்பு எழுந்து கொண்டிருந்தது.

தமிழ்ப்பல்கலைக்கழகம், பெரியார் மணியம்மை பொறியியற் கல்லூரி, சண்முகா நிகர்நிலைப்பல்கலைக்கழகம் என்று பல இடங்களில் விழாக்களை முடித்து சரியாக ஐந்தரை மணிக்கு சர் சர்ரென்று உள்ளே வரிசையாக நான்கைந்து அம்பாசிடர்கள், ஒரு வெள்ளை மெர்சிடிஸ், இன்னோவா, ஐகான் அப்புறம் மறுபடி சில அம்பாசிடர்கள் என்று ஒரு பெரிய பட்டாளமே வந்து நின்றவுடன் கறுப்பு உடையணிந்த சிறப்புக் பாதுகாப்புப் படையினர் மெர்சிடிஸின் முன் சீட்டிலிந்து வேகமாக இறங்கவே கலாமும், பர்னாலாவும் அதிலிருந்து இறங்குவார்கள் என்று கூட்டமே பார்க்க, முன்னால் இருந்த அம்பாசிடரிலிருந்து பளிச்சென்று இறங்கினார் ஜனாதிபதி. இறங்கினவர் வரவேற்பை ஏற்று ஓட்டமும் நடையுமாக கையசைத்துக்கொண்டே மேடைக்குச் சென்றார். அப்படி ஒரு உற்சாகம். இதுவரையில் மழையில் நின்று, உணவில்லாமல் பசியில் வாடிக்கொண்டிருந்த கூட்டம் அத்தனையும் மறந்து வரவேற்புக் கோஷங்கள், கைதட்டல் என்று ஆரவாரத்தில் அரசியலும் இல்லாத சினிமாவும் சாராத ஒரு தலைவருக்காக இத்தனை நேரம் காத்திருந்ததை அனைவரும், நாங்கள் உட்பட மறந்தே போனோம். தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் முடிந்து தாளாளர் ஸ்ரீமான் துளசி ஐயா வாண்டையார் அவர்கள் மாணவர்கள் கூட்டம் ஜனாதிபதி பேசுவதைக் கேட்கவே ஆவலுடன் இருப்பதை உணர்ந்து சுருக்கமான இனிய வரவேற்புரை அளித்து அமர்ந்தார். பின்னர் வந்த மேதகு தமிழக ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றிவிட்டு சம்பிரதாயப்படி 'னன்றி வனாக்கம்' சொல்லி கைத்தட்டல் பெற்று அமர்ந்தார். அவர் சொல்லியது எதுவும் மாணவர் காதில் விழுந்ததோ இல்லையோ, என் காதில் விழவில்லை. கவனிக்கவில்லை. இந்தியாவே போற்றும் கலாம் அவர்கள் எப்போது பேசப்போகிறார் என்றுதான் என்னைப்போலவே எல்லோரும் காத்திருந்தனர்.

உதவியாளர் ஒரு LCD திரையை மைக் அருகே கொண்டு வந்து பவ்யமாக வைக்க, நம் குடியரசுத் தலைவர் பேச எழுந்தார். கரகோஷம் உண்மையாகவே காதைக் கிழித்தது.

166. இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் - என் எண்ணங்கள்

அரசாங்கள் மிகவும் வலிமை பெற்றிருக்கும். இல்லை மோனோபாலியாக இருக்கும் ஒரு தனியார் நிறுவனம் அரசை டம்மியாக வைத்திருக்கும். இதில் மட்டும் இப்போதைக்கும் வருங்காலத்திற்கும் மாற்றம் இல்லையென்று நினைக்கிறேன்.

பெண் பார்க்கும் படலங்கள் அற்றுப் போகும். அரசே மரபணுக்களுக்கு ஏற்ற வகையில் எட்டுப்பொருத்தம் பார்த்து திருமணம் நடத்தி வைக்கும். திருமணம் என்ற ஒன்று மாற வாய்ப்புகள் குறைவு. மலட்டுத்தன்மை அதிகரித்திருக்கும் என்பது என் ஊகம். electronic transfer மாதிரி அதற்கும் Bluetooth / WiFi (பேரு கூட பொருத்தமாகத்தான் வைத்திருக்கிறார்கள் ;) ) போல ஏதாவது வந்திருக்கும். இது ஏதோ ஒரு ஆங்கில B-Movie யில் பார்த்த நினைவு. இதனால், கணினிபோன்ற வெளி உபகரணங்களில் (external devices) ஒரு conscious being-ஐ virtual ஆக வளர்க்கக்கூடிய/இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும். ஒரு பெரிய விஞ்ஞானியோ, அறிவாளியோ 'இறக்க' வேண்டிய அவசியமே இல்லாமல் போகும். இறவாமல் இருக்க வரம் பெற்ற அசுரர்கள் போல வலம் வரலாம்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்கிற மூன்றும் உயிர் என்பதில்லாமல் அடிப்படையாக மாறமுடியும் என்று நினைக்கிறேன். வைரஸ்கள் போல transfers (ட்ரான்ஸ்பர் என்றால் உடனே கூட வருவது infection-உம் தான். எ. கா: பேய் வகையறா?) of consciousness சாத்தியமாகுமோ? ஏதுடா ஆயிரம் வருஷத்துக்கு அப்புறம் யோசின்னா, நமக்கு ஆதிகாலத்து கூடுவிட்டு கூடுபாயுற டெக்னிக்தான் நினைவுக்கு வருது. :))

ஆனால் இந்த டிரான்ஸ்பர்கள் சாத்தியமானால், omnipresence அல்லது குறைந்தபட்சம் multi tasking; multipresence (intraconscious மற்றும் interconscious network களில் தற்போதைய சாட் ப்ரோக்ராம்கள் போல ) ஆவது கிடைக்குமா என்று யோசிக்கத்தோன்றுகிறது. அதாவது திருவான்மீயூர் பீச்சில் காதலியைக் கொஞ்சிக்கொண்டே, மொனாக்கோ காஸினோவில் தாயம் உருட்டிக்கொண்டே, கொல்கத்தாவில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டே, லண்டனில் ஆபீஸில் காபி சாப்பிட்டுக்கொண்டே ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் புல்வெளியில் படுத்து சுகமாக தூங்கிக்கொண்டிருப்பது. இப்படி பல இடங்களில் physical presence தற்காலத்திய விஞ்ஞானத்தின் படி சாத்தியமே இல்லை. live feedகள் மூலம் நமக்கு வந்து, அதை நம் மூளை ப்ராஸஸ் செய்வதால் வரும் ரியாக்ஷன்களை வைத்து; திரும்பவும் பீட் வரும் இடத்தில் presence simulation? இப்படி பல இடங்களில் பலவகை பீட்கள் வரும் பட்சத்தில் நம் மனித மூளை தாக்குப்பிடிக்குமா என்பது வேறு சங்கதி.

இப்படி ட்ரான்ஸ்பர் சாத்தியமாவது போலவே knowledge transfer உம் சாத்தியமாகும். அந்த ட்ரான்ஸ்பர் டிஜிட்டல் முறை போல இன்ஸ்டண்டாக நடக்கக்கூடியது.
எவ்வித வேலைகளுக்கு ஆட்கள் தேவையோ அதற்கு தக்கவாறு அரசே சீனியாரிட்டி முறையிலும் மரபணுக்கள் முறையிலும் படிப்பை அளிக்கும். இடத்தைவிட்டு நகராமல் வர்ச்சுவலாக ஆபீஸ் முதல் காய்கறி கடை வரை சென்று பார்த்து வேலை செய்து வர முடியும் (பாத்ரூம் விஷயங்களும் இதில் முடியுமா என்று தெரியவில்லை :) ) செய்வதன் மூலம், விமானங்கள் போன்றவை பெரும்பாலும் இராணுவ பயன்பாட்டிற்கே பயன்படும். இடத்தைவிட்டு நகரவேண்டிய தேவை குறைவதாலால் மோட்டார் வாகனங்கள் குறைந்து படிப்படியாக இயற்கை மீண்டும் வலுப்பெற ஆரம்பிக்கும்.

மடி மற்றும் டெஸ்க்டாப் கணினிகள் பயோ-பவரில், அதாவது பயன்படுத்துகிற மனிதனின் ஆற்றலிலேயே இயங்கக்கூடிய வகையில் இருக்கும். எரிபொருள் தட்டுப்பாடு என்பது இருக்காது என்பது வராது என் ஊகம். அப்படியே வந்தாலும் அது மனித சமூதாய முன்னேற்றத்தை எவ்விதத்திலும் நிரந்தரமாக பாதிக்கமுடியாது. மாற்றுமுறைகள் கண்டிப்பாக உருவாக்கப்படும். அதுவும் தவிர, இப்போதைய நிலையை விட விரயம் குறையும்.

கலிபோர்னியாவில் கொசு கடித்தால் வத்தலகுண்டில் ஏன் சுனாமி அடிக்கிறது என்று இன்று போலவே விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தின் இயக்கம், ஆக்கம் பற்றி புரியாமல் தவிப்பர். இயந்திர கதியான வாழ்க்கை வெறுத்து பூவுலகை நீத்து மேற்சொன்னபடி 'ஆவி'யுலகில் சாமியார்களின் எண்ணிக்கை அதிகமாகும். மதங்களும் அவற்றின் எழுத்துகளும் infallible அல்ல என்று ஆத்திகர்களுக்கும் விஞ்ஞானத்தின் குறைபாடுகள் நாத்திகர்களுக்கும் புரிய வரும். இதனால் சண்டைகள் குறையும். சண்டை ஏற்பட்டால் ஏற்படப் போகும் பேரழிவிலிருந்து தற்காத்துக்கொள்ளவாவது மனித இனம் ஒன்றுபடும்.

கொஞ்சம் pessimistic ஆக யோசித்தால் மேட்ரிக்ஸ் படங்களைப் போல ஆட்டுமந்தைகள் போலவே மனிதர்களை அரசுகள் வளர்க்கும். (இப்போது மட்டும் என்ன வாழுகிறதாம் என்று கேட்கக்கூடாது). இப்படி ஆட்டுமந்தைத்தனம் அதிகமாகி வாழ்க்கையே வெற்றாய் போவதால் மனித மனம் இறைவனை மேலும் தேட ஆரம்பிக்கும். ஆனால் கொஞ்சம் sophisticated ஆக 'அஹம் பிரஹ்மஸ்மி' போன்ற (போன்ற தான் - இது பழையது என்று எனக்கும் தெரியும் :)) தத்துவங்கள் நிலைபெறும்.

quantum physics கொஞ்சம் கொஞ்சம் கோடிட்டு காண்பிக்கிறது. பிரபஞ்சமும் அதனுள் இருக்கும் பலகோடி கோள்களும், நட்சத்திரங்களும், அதில் நம் துளியளவு பூமியும் அதனுள் எல்லாமுமே என உயிர்கள் உட்பட big bangஇற்கு முன்னர் வரை ஒரு கடுகளவு (கடுகளவு என்பது கற்பனைக் கூட செய்யமுடியாத அளவு மிக மிகச் சிறிய என்று கொள்க) இடத்திற்கும் குறைந்த இடத்தில் அடைந்து இருந்தவை தான்.

ஒரு ஆத்மா எப்போதும் potential ஆக இப்பிரபஞ்சத்தினுள் இருந்து ஒரு பிறவியென்று உயிர் பெறுகிறது. இப்படி உடலில்லாமல் consciousness (ஆத்மா) இருக்க முடியுமா என்கிற் கேள்விக்கு பதிலாய் பிரபஞ்சத்தின் நீட்சியான ஆத்மா கண்டிப்பாக ஒரு உடலில்லாமல் இருக்க முடியும் என்றூ தோன்றுகிறது. அப்படியானால் பிரபஞ்சத்திற்கென்று ஒரு அந்தராத்மா இருக்கிறதா என்ற இடியாப்பச் சிக்கல் கேள்வியும் வந்து தொலைக்கிறது.

இதெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? :))

அப்பாடி, இத எழுதறதுக்குள்ளேயே மண்டை கிர்கிருத்து போயிடுச்சி. இனிமே எதுனாச்சும் தோணினா அப்புறமா எழுதறேன்.

முந்தைய பதிவு

165. இன்னும் ஆயிரம் ஆண்டுகளில்...

நாளை என்ன நடக்கப் போகிறது என்பதே நம் தலையாய பிரச்சனையாய் இருக்கையில், இது கொஞ்சம் bigger picture கேள்வி. உண்மையில் பத்து ஆண்டுகளோ, நூறு ஆண்டுகளோ பூமியின் வயதுடன் ஒப்பிடுகையில் அவை ஒரு நொடிக்கூட கிடையாது. ஆயிரமாண்டுகள் என்பது கொஞ்சம் பெரிய அளவாக இருக்கிறது. நம் நவீன வரலாற்றை புரட்டினாலே ஆயிரமாண்டுகளில் எத்தனையோ சமூக, பூகோள, தொழில்நுட்ப மாற்றங்களை கண்டுள்ளோம். அப்படி,

இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் - அதாவது செப்டம்பர் 7, 3006-ல் நாம் பூமியில் திடுமென வந்து குதித்தால் தென்படும்

1. பூகோள ரீதியான மாற்றங்கள்

2. மனித இனத்தில் நிகழப்போகும் biological, behavioural மாற்றங்கள்

3. நாடுகளுக்கு இடையிலோ, சமூக அளவிலோ நடந்திருக்கக்கூடியவை

4. தொழில்நுட்பத்தால் சாத்தியப்படும்

என்று நீங்கள் நினைப்பவற்றை பதிவிடலாமே. இந்தியா, தமிழ்நாடு என்று குறிப்பிட்டு எழுதினாலும் பரவாயில்லை.

எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவே இது. பெரிய அளவில் டெக்னிக்கல் திறனாய்வெல்லாம் செய்யவேண்டும் என்கிற அவசியமில்லை. அப்படி அறிவியல் சார்ந்து எழுதுபவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

இதை இங்கே பின்னூட்டமாய் இடாமல், தங்கள் பதிவில் கதையாகவோ, கட்டுரையாகவோ அல்லது bullets போட்டு பாயிண்ட்களாகவோ எழுதலாம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட மாற்றம் நிகழும் என்று நீங்கள் எண்ணினால், அது ஏன் நடக்குமென்று நினைக்கிறீர்கள் என்றும் சொன்னால் நன்றாக இருக்கும். இதற்கும் லாஜிக், அறிவியல் எல்லாம் அப்ளை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. வெறுமனே கற்பனை செய்தாலும் பரவாயில்லை. அதற்குரிய சாத்தியங்களை விவரம் தெரிந்தோர் விளக்கலாம்.

உங்கள் பதிவில் பதித்துவிட்டு, இங்கே பின்னூட்டத்தில் சுட்டி கொடுக்கலாம் (நிறைய வலைப்பதிவுகள் இருப்பதால் ஒரே இடத்தில் சுட்டிகளை சேகரிக்கவே இது. பின்னூட்டக் கயமைத்தனம் இல்லை. இல்லவே இல்லை. :)) )
நிறைய பதிவர்கள் எழுதினால் புதிய தகவல்கள் கண்டிப்பாக தெரியவரும்.

இப்பதிவு போட்ட என்னுடைய கருத்தைக் கேட்கிறீர்களா? தோன்றாமல் தானே உங்களுக்கு கொக்கி போடுகிறேன். விளையாட்டை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பிக்கலாம். நானும் சீக்கிரம் பதிக்கிறேன் இதுபற்றி.

இவ்விளையாட்டில் ஏதேனும் திருத்தங்கள், மாற்றங்கள் செய்யலாமெனில் தாராளமாக செய்யலாம்.

தானாகவே பதிவர்கள் முனவராத பட்சத்தில், நாலுவிளையாட்டு போல 'டேக்' செய்துவிட்டு மற்றவரை மிரட்டிப்போடச் சொல்லலாம். :))

tag செய்வதுதான் இப்படிப்பட்ட பதிவுகளுக்கு சிறந்த வழியென்பதால் இதோ நான் அழைக்கும் ஐந்து பதிவர்கள். ஏன் ஐந்து? நாலு ஆச்சு ஆறாச்சு. அதான் ஐந்து. கூப்பிட்டவர்கள் மட்டுந்தான் போடவேண்டுமென்றில்லை. இதை எல்லோருக்குமான அழைப்பாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். உங்கள் பூவிலேயே பதிவைப் போட்டுவிட்டு சுட்டிமட்டும் கொடுங்கள்.

1) செல்வன்
2) பாஸ்டன் பாலா
3) மோகன் தாஸ்
4) பொன்ஸ்
5) வெளிகண்டநாதர்

 

வார்ப்புரு | தமிழாக்கம்