என் பாஸ்தா புராணம்!

இத்தாலிய உணவு வகைகள்னாலே பீட்ஸாவுக்குத் தான் மவுசு ஜாஸ்தி. பாஸ்தாவின் மேன்மை இன்னும் நம்மூரில் அவ்வளவா தெரியவில்லை. பாஸ்தா இருக்கு பாருங்க. அருமையான சமாச்சாரம் இது. தினமும் சாதமே சாப்பிட்டு போரடிச்சு போச்சுன்னா, நூடுல்ஸ் தின்னு அலுத்துப் போச்சுன்னா பாஸ்தா பகவான் இருக்கவே இருக்கார். இதை எனக்கு அறிமுகப்படுத்தியது அண்டோனியோ கார்லுச்சியோன்னு ஒரு செப் தான். பிபிசியில வருவார். என்னவோ எதோன்னு இருந்த என் பயத்தை போக்கி, பாஸ்தாவின் மேன்மையை உணர்த்தியவர். அப்புறம் இன்னொரு கடவுள் டீலியா ஸ்மித். இவங்க பிபிசி ப்ரைம்ல வருவாங்க.

பாஸ்தாவில நிறைய வகைகள் இருக்கு. ஸ்பாகெட்டி, மாக்கரோனி, பென்னி, ரென்னின்னு. எல்லாம் அடிப்படையில ஒரே மாவால ஆனதுன்னாலும், கலரிலும், வடிவங்களிலும் வித்தியாசங்கள் இருக்கும். சேமியா மாதிரிதான் என்றாலும் ஸ்பாகெட்டில கீரை, முட்டைன்னு பல வகைகள் இருக்கு. கொழுப்புச் சத்து குறைவானது பாஸ்தா என்பது டயட்டர்களின் கவனத்திற்கு. கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம். அதை இப்போதைக்கு விட்டுடுவோம்.

பாஸ்தா வரலாறுன்னு பாத்தீங்கன்னா இத்தாலிக்கு கிழக்கிலிருந்து திரும்பிய மார்க்கோ போலோ தான் அறிமுகம் செஞ்சார். ஆனா, நாலாவது நூற்றாண்டிலேயே பாஸ்தா மாதிரியான உணவுப் பண்டம் இருந்து வந்திருக்குன்னும் சொல்றாங்க. இத்தாலியில் வீடுகளில் அவர்களே ப்ரெஷ்ஷா மாவு பிசஞ்சு, பாஸ்தா செய்வதற்கேவென்று அச்சு இயந்திரங்கள் மூலமா அந்த மாவிற்கு வடிவங்கள் எல்லாம் செய்வாங்க. இதெல்லாம் நமக்கு ஒத்துவராத விஷயம். ரெடிமேட் பாஸ்தாக்கள் எல்லா சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கும். அதில இந்த மாக்கரோனி பாஸ்தா செய்யறது ரொம்ப சுலபம்.

சரி, இப்போ இந்தியனைஸ்ட் வெஜ் மாக்கரோனி வித் சீஸ் அண்ட் டொமேட்டோ சாஸ்

கேக்கவே ஏதோ exotic உணவோட பேர் மாதிரி இருக்குல்ல? இத நீங்களும் சமைக்கலாம். இருபது நிமிஷம் போதும். என்னென்ன தேவை?

1. மாக்கரொனி பாஸ்தா - 1 பாக்கெட் (பொதுவா 500 கிராம் இருக்கும்)
2. பீஸ்களா வெட்டி உறைய வைக்கப்பட்ட காய்கறிகள் (பீ.வெ.உ.வை.கா) - என்ன வேணா போட்டுக்கலாம் (பிராக்கோலி, காலிப்ளவர், காரட், கார்ன், பட்டாணி, மஷ்ரூம் இப்படி) இதுவும் 500 கிராம் இருந்தாப் போதும்
3. பூண்டு - இது ரொம்ப முக்கியம். நாலஞ்சு பல் தேவைப்படும். தோல உரித்துவிட்டு ஒரு மீடியம் சைஸ் பல்லை ரெண்டு அல்லது மூன்று பீஸ்களாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்
4. தக்காளி பேஸ்ட்
5. எண்ணெய், உப்பு
6. மசாலா - இந்தியனைஸ்டுன்னு சொல்லிருக்கோமே. பிஷ் மசாலா, சிக்கன் மசாலா என்று உங்களுக்கு தோணினது எதுவேணா
7. காரப்பொடி
8. சீஸ் - சிறிய துண்டு தனியாக வாங்கி ஸ்டிரிப்ஸாக வெட்டி வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் நான் செய்வது பிரெட்டிற்கு தடவ கிடைக்கும் சீஸ் ஸ்ப்ரெட். இதுதான் பெஸ்ட்.

அவ்வளவுதான். இனி ஆரம்பிக்கலாமா?

அடுப்பு பத்தவைக்கணும், பாத்திரத்தை வைக்கணுமெல்லாம் சொல்லப் போறதில்ல. அதனால, ஒரு பெரிய பாத்திரத்தில் பாஸ்தா பாக்கெட்டை மொத்தமாக கவுத்துடுங்க. கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி நல்லா மிக்ஸ் பண்ணிக்குங்க. இது எதுக்குன்னா பாஸ்தா ஒட்டிக்காம இருக்க. எவ்வளவு பாஸ்தா இருக்கோ அதுக்கு ரெண்டு மூன்று அளவு தாராளமா தண்ணீர் விடுங்க. அடுப்பு பத்தவெச்சாச்சா? குப்பத்தொட்டியில தூக்கிப்போட்டிருப்பீங்களே காலி பாஸ்தா பாக்கெட். அதை எடுத்து எத்தன நேரம் வேகவிடணும்கரத பாருங்க. அநேகமா 7-9 நிமிடங்கள் போதும். 10 நிமிஷத்திற்கு மேல் வேகவெச்சா சவசவன்னு ஆயிடும். அதனால அதுக்குமேல வேகவிடாம பாத்துக்கணும்.

இப்ப சாஸ். கொஞ்சூண்டு எண்ணெய் ஊத்தி அதில நாலு காஞ்ச மிளகா வேணுமுன்னா போட்டுக்கலாம். மிளகா தாளிச்சு முடிஞ்சோன்ன பீ.வெ.உ.வை.கா-களை போடுங்க. கொஞ்சம் ஜாக்கிரதை. காய்கறிகளை முன்னாடியே "thaw" செய்யணும்னு அவசியமில்லை. அதனால் கொஞ்சம் படபடவென்று வெடிக்கும். அதப் பாத்துட்டுகிட்டே ஒரு 5 நிமிஷம் இருங்க. நேத்திக்கு சாப்பிட்டு வெச்ச தட்டையெல்லாம் இந்த நேரத்திலே அலம்பலாம். அஞ்சு நிமிஷம் ஆச்சா? இருக்கற மசாலாவெல்லாம் வகைக்கொன்னுன்னு ஒரு சின்ன டீஸ்பூன் அளவு போட்டு காரப்பொடியும் உப்பும் வேனுங்கற அளவு சேத்துக்குங்க. உப்பு எப்பவுமே ஒரு டீஸ்பூன் அளவு கொஞ்சமா போட்டுட்டு சாப்பிடும் போது சேத்துக்கறது நல்லது. நல்லா மிக்ஸ் பண்ணிட்டு மூடி வெச்சுருங்க.

இதுக்குள்ள பாஸ்தா வெச்சு குறிப்பிட்ட 7-9 நிமிடங்கள் ஆச்சுன்னா, அடுப்ப அணைச்சிடலாம். அடுப்ப ஆரத்தழுவச் சொல்லல. ஆப் பண்ணிடுங்கன்னு சொன்னேன். அப்படியே கொஞ்ச நேரத்திற்கு பாஸ்தா பத்தி மறந்துடுங்க.

சாஸுக்கு திரும்ப வருவோம். மசாலாவெல்லாம் நல்லா மிக்ஸ் ஆகி கமகமன்னு வாசனை வருதுன்னா, உடனே தக்காளி பேஸ்ட் போட்டு ஒரு அரை நிமிஷம் கிளறிட்டு எவ்வளவு சாஸ் வேணுமோ அவ்வளவு தண்ணி ஊத்திடுங்க. உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டீங்கன்னா சாஸ் திசைமாறிப்போயிடும். அதனால, சாஸுக்கு மட்டும் ஊத்துங்க. நிறைய சாஸ் பண்ணலாம்னு ரொம்பவும் கொட்டக்கூடாது. அப்புறம் ரசம் தான் மிஞ்சும். ரெண்டு மூணு கப் அளவு பொதுவா போதும். திரும்பி மூடி வெச்சுடுங்க. ஒரு கொதி வந்தவுடனே, நறுக்கிவெச்ச பூண்ட சேத்துடணும். அஞ்சு நிமிஷம் வெயிட். இதோ முடிவுக்கு வந்தாச்சு. சீஸ் ஸ்ப்ரெட் இருக்கே அத நல்லா மூணு நாலு ஸ்பூன் அளவு போடுங்க. ஒரு ரெண்டு நிமிஷம் பொறுமையா இருந்தா சீஸ் அழகா உருகி மிக்ஸாகும். ரசமா இருந்தது கெட்டியா சாஸ் ஆகும். ஒரு கிளறு கிளறினா ரெண்டு நிமிஷத்தில இறக்கிடவேண்டியதுதான்.

சரி, இப்ப பாஸ்தான்னு ஒன்னு பண்ணோமே, நியாபகம் வருதா? அந்த பாத்திரத்திற்கு மூடி போட்டு, தண்ணிய மட்டும் கொட்டிடுங்க. கொஞ்சம் wet ஆக வெறும் பாஸ்தா மட்டும் இருக்கும்.

எப்படி சாப்பிடறது? ரெண்டுத்தையும் சாதம், குழம்பு மாதிரி சாப்பிடும் போது மிக்ஸ் பண்ணி சாப்பிடலாம். இல்லைன்னா சாம்பார்சாதம் மாதிரி சாஸ் பண்ணி முடிச்சோன்னவே ரெண்டத்தையும் ஒன்னா சேத்து premix பண்ணிடலாம். உங்களுக்கு எப்படியோ, அப்படி சாப்டுக்கலாம்.

இது தனியா கஷ்டப்படறவங்கள்ள சமைக்கணுமேன்னு ஆர்வம் உள்ளவங்களுக்கு. அப்படி இல்லாதவங்களுக்கு வேற ரெசிபி முன்னாடியே இங்க சொல்லிருக்கேன்.

மேலும் விபரங்களுக்கு

1. iLovePasta
2. Delia Smith

இதைப் பார்த்த ஆர்வத்தில் எழுதியது.

10 Comments:

  1. முகமூடி said...

    இதை விட சுலப முறை நான் செய்வது ::

    1) இந்த குறிப்பை சமைக்க ஆர்வம் உள்ள என் நண்பருக்கு அனுப்புவது

    2) இரவு அவர் வீட்டில் பாஸ்தா பார்ட்டி. தண்ணி (mineral water) செலவு நம்முது


  2. சின்னவன் said...

    Everyday Italian அப்படின்னு food network ஒரு ப்ரோக்கிராம் வரும். அதை நான் விரும்பி பார்பதற்கு பாஸ்தா, பீட்சா தான் காரணம் ,

    அதை நடாத்தும் Giada De Laurentiis இல்லை இல்லை !


  3. Balaji-Paari said...

    :) mmhm...nallathu!!


  4. துளசி கோபால் said...

    தம்பின்னா தம்பி தங்கக்கம்பி.
    அக்காவோட இந்த போஸ்டிங்கைப் பாக்கலையாக்கும்?

    http://thulasidhalam.blogspot.com/2005/04/blog-post_26.html


  5. Ramya Nageswaran said...

    இங்கே பசங்க பாஸ்டா தான் விரும்பி சாப்பிடுவாங்க..நான் அதிலே நிறைய காய்கறிங்க போட்டு, தாளிச்சு கொட்டி ஒரு இந்தோ-இத்தாலிய கூட்டு தாயாரிப்பா ஆக்கிடுவேன்.


  6. அன்பு said...

    நல்லதொரு சமையல் குறிப்பு. ஆனா கண்டிப்பா நான் தனியா இருந்தா இவ்ளோல்லாம் கஷ்டப்பட மாட்டேன். பிஸ்ஸா ஹட்டுக்குபோனா கொடுக்குறான்... ஹி. ஹி...

    குப்பத்தொட்டியில தூக்கிப்போட்டிருப்பீங்களே காலி பாஸ்தா பாக்கெட். அதை எடுத்து எத்தன நேரம் வேகவிடணும்கரத பாருங்க.

    பலமுறை இந்தமேட்டர் நடந்து குப்பைத்தொட்டில கைவிட்டதால - என்னையறியாம கத்தி சிரிச்சுட்டேன்...

    இப்பல்லாம் உங்க பதிவுல்ல நகைச்சுவை கலக்கலா இருக்கு, "அதாவே வருதுன்னு" நீங்க சொன்னாலும்... துளசிக்கா பதிவுகள் அதிகம் படிப்பதால் வந்த பாதிப்பா இருக்கலாம் என்று நினைக்கிறேன்!

    அப்புறம் அதென்ன...
    இது தனியா கஷ்டப்படறவங்கள்ள சமைக்கணுமேன்னு ஆர்வம் உள்ளவங்களுக்கு.
    எழுதிட்டு சும்மா ஒரு கிலோ அளவுக்கு செய்முறை சொல்லிருக்கீங்க...!?

    மற்றப்படி, இந்த பாஸ்தா பதிவ எங்கயோ/எப்பவோ படிச்சிருக்கேனென்னு,நினைச்சு மேல போய் எப்ப பதிஞ்சதுன்னு வேற பார்த்து தொடர்ந்தேன் - கீழே பின்னுட்டத்துல பார்த்தபிறகுதான் தெரிஞ்சது நம்ப "ஆல்இன்ஆல்" இதுமாதிரி ஏற்கனவே எழுதியிருக்காங்கன்னு...


  7. rv said...

    பமக கண்ட ஆழக்குத்தரே,
    நல்லாருக்கு உங்க ஐடியா

    //தண்ணி (mineral water) செலவு நம்முது // சத்தியமா நானும் மினரல் வாட்டரைத் தான் சொல்றீங்கன்னு நினைச்சேன்! பிராக்கெட்ல மெனக்கெட்டு எழுதினோன குட்டியூண்டு டவுட்!

    சின்னவர்,
    //அதை நடாத்தும் Giada De Laurentiis இல்லை இல்லை //

    பாருங்க பாருங்க. இதுவரை நீங்க டிவில கியாடா வந்தாலும் அவங்கள பாக்காம இதுக்குன்னே பார்த்த பீட்ஸா, பாஸ்தா பத்தி ஒரு பதிவு போடுங்களேன் ;-)


  8. rv said...

    பாலாஜி-பாரி,
    இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள சாப்பிட்டு முடிச்சிருங்க. அப்புறம் ஊசிப்போயிடும் :)

    ரம்யாக்கா,
    //காய்கறிங்க போட்டு, தாளிச்சு கொட்டி //

    இது கரெக்ட். எல்லாத்திலேயும் காரப்பொடியும், தாளித்தலும் இல்லேன்னா உள்ள இறங்கறது ரொம்பவே கஷ்டமாயிடுச்சு!


  9. rv said...

    துளசியக்கா,
    //அக்காவோட இந்த போஸ்டிங்கைப் பாக்கலையாக்கும்?
    //
    இல்லக்கா, இப்பத்தான் பார்த்தேன். நான் செஞ்சதும் இதுதான். நீங்க சிக்கன் மட்டும் கூடுதலா சேர்த்திருக்கீங்க.

    பார்த்தீங்களா, நாம சேர்ந்து மிரட்டினதுல, தாணு அவங்களே டயட் இருக்காங்களாம்!


  10. rv said...

    அன்பு,

    ரொம்ப நாள் தனியா வெளிநாட்டில இல்லியோ? மனைவியோடவே போய்ட்டீங்கன்னு நினைக்கிறேன். தப்பா நினச்சுக்காதீங்க. ஏன்னா //பிஸ்ஸா ஹட்டுக்குபோனா // ஆகுற செலவு பல இதர விஷயங்களுக்கு பயன்படும் :P

    //இப்பல்லாம் உங்க பதிவுல்ல நகைச்சுவை கலக்கலா இருக்கு, "அதாவே வருதுன்னு" நீங்க சொன்னாலும்... துளசிக்கா பதிவுகள் அதிகம் படிப்பதால் வந்த பாதிப்பா இருக்கலாம் என்று நினைக்கிறேன்!
    //

    நன்றி. நானா வந்துதுன்னு சொல்லவேயில்லீங்க. தமிழ்மணத்திற்கு வரதுக்கு முன்னாடி பொன்னியின் செல்வன் தவிர்த்து வேற தமிழ் எழுத்தோ எழுத்தாளர்களையோ ஆழமா படிச்சதெல்லாம் இல்லை. அதனால் இன்னும் மோல்ட் செய்யற நிலையில தான் நான் எழுதறது இருக்குன்னு நினக்கிறேன். அப்படி, என்னை influence செய்தவர்கள்னு பார்த்தா கண்டிப்பா துளசியக்காவுக்குத்தான் முதலிடம். அதே போல் கோ.ராகவன். இன்னும் முகமூடி, வீ.எம், சின்னவர்னு லொள்ளும் கொள்ளும் கொப்பளிக்கறவங்க பலர் இருக்காங்க. நான் எழுதறது அநேகமா emulate செய்யும் முயற்சியாகத்தான் இருக்கும். கண்டிப்பா பாதிப்பு தான். கரெக்டா கண்டுபிடிச்சு என் இமேஜைத் தகர்த்த அன்புவின் பதிவுகள் எல்லாவற்றிலும் "+" ஆக விழுந்து சொதப்பல் பதிவுகள் ஆக சபிக்கிறேன்!

    //எழுதிட்டு சும்மா ஒரு கிலோ அளவுக்கு செய்முறை சொல்லிருக்கீங்க...!?
    //
    பின்ன ரெண்டு நாளைக்கு சேர்த்து சமைச்சா, அப்படித்தான் இருக்கும்!

    //நம்ப "ஆல்இன்ஆல்" இதுமாதிரி ஏற்கனவே எழுதியிருக்காங்கன்னு//
    எனக்கு இதுதோணாம போச்சே.. ஓரியண்டல் பாஸ்தா பதிவ அவங்க சுட்டி கொடுத்தோன்ன தான் பார்த்தேன்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்