custom-made babies: மரபணு விற்பனை?

சமீபத்தில் spike lee-இன் "She Hate Me" படம் பார்த்தேன். ஒரு மருந்துத்தயாரிப்பு கம்பெனியில் VP-ஆக இருப்பவன் ஜாக். தீடிரென்று சில காரணங்களால் வேலையை இழக்க நேர்கிறது. முன்பு வேலை செய்த கம்பெனிக்காரர்களின் சதியால் அவனின் வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டு பணத்தட்டுப்பாடு. படம் கொஞ்சம் ஸ்லோவென்றாலும், கதை பல இடம் தாவுகிறது என்றாலும்.. அவன் பின்னர் பணத்திற்கு என்ன செய்தான் என்பதுதான் இந்தப் பதிவிற்கு காரணம்.

அவன் மூலம் இயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க விரும்புகிறார்கள் சில லெஸ்பியன் தம்பதிகள். அதுவும் இருவரும் ஒரே சமயத்தில். அதற்கு 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுக்கவும் தயாராய் இருக்கிறார்கள். ஏன் sperm bank-ற்கு சென்று குழந்தைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்று கேட்பவர்களுக்கு. விந்தணு தானம் செய்தவர் உடல்நிலை, பயோடேட்டா எல்லாம் இருந்தாலும், பல சமயங்களில் தெரியாத ஒருவரின் பிள்ளையைப் பெறுவதற்கு தைரியமில்லை என்கிறார்கள். தங்கள் குழந்தைக்கு தந்தையின் பாதியாய் நல்ல மரபணுக்கள் கிடைக்கவேண்டும் என்ற கவலை அவர்களுக்கு. அதே போல், தத்தெடுப்பதிலும் ஓரினப் பெண் தம்பதியினருக்கு சட்டச் சிக்கல்கள் நிறைய என்கிறார்கள். நம் ஹீரோவிடம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவோர் பட்டியல் நீளமாகிக் கொண்டே போகிறது. ஆனால், தம்பதியர் எல்லோரும் முன்னமேயே அவனிடம் அந்தக் குழந்தைகளுக்கு உரிமை கொண்டாடக்கூடாது என்றும் இது வெறும் ஒரு பிஸினஸ் transaction மட்டுந்தான் என்றும் எழுதி வாங்கிக்கொண்டு விடுகின்றனர். இவனும் அதற்கு ஒத்துக்கொண்டு பணத்தையும் பெற்றுக்கொண்டு கடைசியில் 19 குழந்தைகளின் தந்தையாகி விடுகிறான்.

வித்தியாசமான கதைக்களமாக எனக்கு பட்டது. ஓரினச் சேர்க்கை தம்பதிகளின் பாதுகாப்பிற்காக இருக்கும் கணக்கற்ற அமைப்புகளில் ஒன்றுகூடவா செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க உதவ முடியாது? creative license என்றுதான் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். ஓரளவிற்கேனும் ஓரினச்சேர்க்கை குறித்த acceptance மற்றும் புரிதல் உள்ள அமெரிக்காவில்கூட தத்தெடுக்க இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இதில் ஹீரோவின் நிலைப்பாடு என்ன? விந்தணு என்பதை வெறும் biological product-ஆக வகைப்படுத்தி அதை பணத்திற்கு விற்கும் vendor என்று மட்டுமே அவனை கருத்தில் கொள்ள முடியுமா? ஏனென்றால் விந்தணு வங்கிகள் இந்தக் காரியத்தைத் தானே செய்து வருகின்றன. என்ன, அவ்வகையில் தானம் செய்வோர் தாயையும் சேயையும் பார்க்காமலேயே தந்தைகளாகிறார்கள். இதனால் மட்டும் பிறந்த குழந்தைக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லையென்று ஆகிவிடுமா? குழந்தைகள் தான் பிரதான செல்வங்களாய் இருக்கும் நம் வாழ்க்கையில், தம் வாழ்க்கையில் ஒளியாய் இருக்கப் போகும் ஒரு குழந்தையைப் பெற இன்றியமையாத விந்தணுவிற்கு விலைதான் என்ன? உங்கள் பிள்ளை ஆரோக்கியத்துடனும், அறிவுடனும் பிறக்க எவ்வளவு பணம் கொடுக்க தயாராக இருக்கிறீர்கள்? அந்தக் குழந்தைக்கு சிறந்த மரபணுக்கள் கிடைக்கவேண்டும் என்பதற்கு எத்தனை பணம் கொடுத்தால் தகும்? பணத்தால் வாங்கக் கூடிய ஒரு பொருளாக இதைப் பார்க்கவும் முடியுமா? ஓரினத் தம்பதிகளை விடுங்கள். சாதாரணத் தம்பதிகள்?

அப்படிப் பார்க்க ஆரம்பித்தால்.. அதே படத்தில் ஒரு நண்பன் இதே போலவே கூறுகிறான். நீ ஒரு வேலையற்றவன். பொழுதுபோக்குக்காகவும், பணத்திற்காகவும் விற்கிறாய். இதுவே நியூட்டன், ஐன்ஸ்டைன், கேட்ஸ், டாம் க்ரூஸ் போன்ற வாழ்க்கையில் வெற்றி பெற்றோரின் விலை என்ன? அதே போல முட்டைகளையும் வாங்கலாம்.. அரிதா, மதர் தெரஸா, வீனஸ் வில்லியம்ஸ்.. இதை கிண்டலாகவும் கொச்சையாகவும் சொல்வதாகக் கொள்ளாமல் வேறு மாதிரி யோசிப்போமே. தம் பிள்ளைகளுக்கும் நல் ஆரோக்கியமும், புகழும், பெயரும் கிடைக்க வேண்டும் என்று பெற்றோர் எண்ணலாம் இல்லையா? தம் குழந்தை என்பதற்காக தம்முடையதையும் அதுதவிர ஏற்கனவே மதியாலும், உடலாலும் புகழ்பெற்றவர்களின் மரபணுக்கள் கூடுதலாக குழந்தைகளுக்கு கிடைக்குமெனில் அவற்றை பெற பெற்றோர்கள் விரும்புவது பாவமா? எதிர்காலத்தில் இத்தகைய வழிமுறைகள் சாத்தியப்படுமா? இப்போதே ஓரளவிற்கு சாத்தியப்படும் என்றாலும் பயன்படுத்துவதில் ஏகப்பட்ட சட்டசிக்கல்களும், நடைமுறைச்சிக்கல்களும் இருக்கின்றன. பல முன்னேறிய நாடுகளில் இதில் ஆராய்ச்சி செய்வதே தடைசெய்யப் பட்ட விஷயமாக இருக்கிறது. மனித குல மேம்பாடு என்று பார்த்தால் இது தேவையானதொன்றாகிறது. பல நோய்கள் வருவதற்கான ஜீன்களை ஆப் செய்துவிட்டால், அவை ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் என்றால் ஏன் செய்ய மறுக்கிறோம்? நடைமுறையில், மதமும் அது சார்ந்த கொள்கைகளும் அதன் மூலம் நமக்கு வந்த thinking-குமே இந்த வகை ஆராய்ச்சிக்கு எதிராக இருக்கிறது என்று தோன்றுகிறது. custom made குழந்தைகள் என்று வந்துவிட்டால், அப்புறம் ஆண்டவன் கொடுத்தான் என்ற சொல்லிற்கே அர்த்தமில்லாமல் போய்விடுமே. ஒன்று இந்த ethical box லிருந்து நாம் வெளி வர வேண்டும். இல்லை, மரபணுக்கள் மூலம் நம் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை (குறைந்த பட்சம் advantage) பற்றி மறந்தே போக வேண்டும். எதைச் செய்யப்போகிறோமோ தெரியவில்லை.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். இது வரை, இந்த முறைகள் அவ்வளவு வெற்றிகரமாக இல்லை. இன்னும் நிறைய ஆராய்ச்சி, trials தேவை. ஆனால் trials-க்கு தம் க்ளொனிங் பிள்ளைகளை கொடுக்கப் போவது யார் என்ற கேள்வி உடனே வருகிறது.

படம் என்னவோ முன்னாள் காதலியுடனும் அவளின் தோழியுடனும் ஹீரோ சேர்ந்தே வாழ்வது போல் சுபம் போட்டு முடித்தாலும், பல ethical மற்றும் moral கேள்விகளை கேட்கிறது இந்தப் படம்.

10 Comments:

  1. துளசி கோபால் said...

    ஆண்டவன் கொடுக்கறாந்தான். ஆனா பலசமயம் வேணும் வேணுமுன்னு கேக்கறவங்களுக்குக் கொடுக்காம, வேணாம் வேணாம்னு தள்ளறவங்களுக்கு.


  2. பத்மா அர்விந்த் said...

    சற்றே மாறுபட்ட என் கட்டுரை:http://udaru.blogdrive.com/archive/52.html
    Knock off gene experiments are good in some cases and helped to get an answer in some syndormes. But we have not gone beyond that in creating a flawless foetus


  3. G.Ragavan said...

    எல்லாம் சரிதான். இந்த முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். அப்பொழுதுதான் சாதி, மத, இன வேறுபாடுகளற்ற சமுதாயம் அமையும்.

    ஆனால் இந்த முயற்சி பெருவாரியான வெற்றியைப் பெற்றால் நாளிதழ்களில் இப்படியும் விளம்பரம் வரலாம்.

    இந்து, 30 வயதிற்குள், செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த முழு ஆரோக்கியம் உடையவரின் விந்தணு தேவை. தொடர்பு கொள்ளும் முகவரி.........

    ஆனால் இந்த முறை விரைவிலேயே வருமென்று என் மனம் சொல்கிறது.


  4. rv said...

    துளசியக்கா,
    நீங்க சொல்றதும் கரெக்ட் தான்.. ஆண்டவனோட விளையாட்டெல்லாம் நமக்கு புரியவா போகுது...

    தேன் துளி,
    //we have not gone beyond that in creating a flawless foetus //
    இது சரி.. ஆனா ஆராய்ச்சி செய்யறதே சர்ச்சைக்குரிய விஷ்யமான இருக்கு. அதுதான் வருத்தமளிக்கிறது. உங்களோட பதிவ பாக்கமுடில..
    //Upgrading servers. We'll be back up in a few of minutes.We are currently storing submitted entries for later processing// அப்டின்னே வருது.. அப்புறமா பாக்கறேன்.

    g.ragavan,
    //சாதி, மத, இன வேறுபாடுகளற்ற சமுதாயம் //
    //30 வயதிற்குள், செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த முழு ஆரோக்கியம் உடையவரின் விந்தணு தேவை. தொடர்பு கொள்ளும் முகவரி.........//

    சரியா வராது போலிருக்கே.. இதிலேயும் ஜாதி பாக்க ஆரம்பிச்சா, அவ்ளோதான்..
    அக்கா சொன்னா மாதிரி வேணும் வேணுமுன்னு கேக்கறவங்களுக்குக் கொடுக்காம, வேணாம் வேணாம்னு தள்ளறவங்களுக்கு கொடுக்கிறான். அப்படி பிள்ளை பிறக்கவில்லையேன்னு கோயில் குளம்னு சுத்தறவங்களுக்கு பயன்படவாவது சீக்கிரமா வந்தா பரவாயில்லை.


  5. துளசி கோபால் said...

    பச்சைக்கலர்மேலே என்ன கோபமோ?

    'அம்மா'க்குப் பிடிச்சிருந்ததா?:-)

    புதுத் தோற்றம் நல்லா நீட்டா இருக்கு.

    ஆனா என்னமோ'மிஸ்ஸிங்'


  6. Thangamani said...

    குழந்தைகளை நம்முடைய சொத்தாகக் கருதுவதும் அதற்காக அதனை நேசிப்பதுமே இந்த விதயத்தில் ஒரு விதமான நெருடலையும், குறுகலான பார்வையையும் தருகிறது. ஆனால் குழந்தைகள் ஒரு சமூகத்தின் சொத்து என்று அணுகப்படும் போது, அவர்கள் குழந்தைகள் என்ற காரணத்துக்காகவே நேசிக்கப்படும் போது பார்வை மாறலாம்.

    கலீல் ஜிப்ரனின்
    "Your children are not your children.

    They are the sons and daughters of Life's longing for itself.

    They come through you but not from you,

    And though they are with you, yet they belong not to you.

    (Prophet-http://www.columbia.edu/~gm84/gibtable.html)

    சுட்ட விரும்புகிறேன்.

    இந்த விதயத்தை மிக நிதானமாகவும், அழகாகவும் பதிவு செய்தமைக்கு நன்றி!


  7. rv said...

    துளசியக்கா,
    நேத்திக்கு சும்மா விடுமுறை (என்னன்னு கேட்க்காதீங்க.. நானே எடுத்துக்கிட்டது தான்.. :) )

    அதான் பொழுதுபோகாம, கொஞ்ச நேரம் பளாக்கரோட விளையாடினேன். வேறொன்னு ஸ்பெஷல் காரணமெல்லாம் இல்லை.

    //'அம்மா'க்குப் பிடிச்சிருந்ததா?//
    நேத்து விடுமுறைன்னு தெரிஞ்சா பிடிக்க சான்ஸே இல்ல. ;)


  8. rv said...

    தேன் துளி,
    உங்க பதிவ இப்பத்தான் படிக்க முடிஞ்சுது. அந்த வக்கீல் பெற்றோர் கேஸ் இண்டெரெஸ்டிங்கா இருக்கு. நீதிபதிகளின் தீர்ப்பு என்னவா இருக்குமோ? பிறக்க போற, பிறந்த குழந்தைகளின் கண்ணோட்டத்தில் பார்த்தால், அம்மா ஆசைப்பட்டு பணம் கொடுத்து வாங்கின பல பொருட்களில் ஒன்றாக மட்டுமே தன்னையும் கருதக்கூடிய அபாயம் இருக்கிறது.

    inter-racial marriages மூலமா பிறக்கற குழந்தைகளுக்கு சாதாரணமாகவே பிரச்சனைகள் உண்டு. அதிலேயும் இந்த மாதிரி முகம் தெரியாத தந்தை என்பது அந்தக் குழந்தைக்கு கொடூரமானது.

    genetic manipulation குறித்து இன்னும் அவ்வளவு ஆராய்ச்சிகள் நடைபெறுவதில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. இந்த முறைகள் வெற்றியே பெற்றாலும், இவற்றை பணம் படைத்தோரால் மட்டுமே அடையக்கூடிய விதமாய் ஆகிவிடுமோ என்ற கவலையும் வருகிறது.

    சாதாரணமாக சொல்வதானால் பிறக்கும் குழந்தைக்கு எந்த feature அத்தியாவசியமானது, எது காஸ்மெடிக் என்று வகைப்படுத்தி, அதற்கு தகுந்தாற் போல் கட்டணம் வசூலிப்பார்களோ? இதைப் பற்றி இன்னும் பேசிக்கொண்டே போகலாம் என்று நினைக்கிறேன்.

    மீண்டும் நன்றி


  9. rv said...

    தங்கமணி,

    //குழந்தைகளை நம்முடைய சொத்தாகக் கருதுவதும் அதற்காக அதனை நேசிப்பதுமே இந்த விதயத்தில் ஒரு விதமான நெருடலையும், குறுகலான பார்வையையும் தருகிறது. //

    இதுவும் நீங்கள் கொடுத்த சுட்டியில் இருந்தவையும் தத்துவார்த்தமாக, உலகமே மாயை.. இதில் பிள்ளையென்ன, பெண்டாட்டியென்ன என்பது போன்ற துறவு நிலையில் இருந்தால் தான் சாத்தியப்படும் என்று நினைக்கிறேன்.

    evolution படி உலகத்தில் எல்லா ஜீவராசிகளும் இனவிருத்தி செய்வதைப் போல, நாமும் survival of species -க்காகவே செய்கிறோம் என்று மூளைக்கு தெரிந்தாலும்... reproduction என்றும் offspring என்றும் சர்வசாதாரணமாக பேச்சுப்போக்கிலே சொன்னாலும்...

    காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு தானே!

    நன்றி


  10. G.Ragavan said...

    // சரியா வராது போலிருக்கே.. இதிலேயும் ஜாதி பாக்க ஆரம்பிச்சா, அவ்ளோதான்.. //

    நான் பாக்கனுமுன்னு சொல்லலை. ஆனா மக்கள் பார்க்க வாய்ப்பிருக்குன்னு சொல்ல வந்தேன். அவ்வளவுதான்.

    இந்த முயற்சி வெற்றி பெற என்னுடைய ஆவலும் வாழ்த்துகளும் கண்டிப்பாக உண்டு. இது பரவலானால் மதவாதிகளுக்கும் மொழிவாதிகளுக்கும் இனவாதிகளுக்கும் வேலை குறையும்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்