மருதைக்கு போலாமா - 3

மருதைக்கு போலாமா - 3: பழநி, குச்சனூர், திருப்பரங்குன்றம், ஆர்த்தி

இது சென்ற பதிவின் தொடர்ச்சி

ஒரு வழியா காலை பூஜை ஆரம்பித்தது. தண்டாயுதபாணிக்கு திருநீறு, பால், பஞ்சாமிர்தம் என பல அபிஷேகங்கள். இந்த முறை கட்டளைக்காரர்கள் யாரும் இல்லாததால், நாங்கள் மட்டுமே. மிக அமைதியாய், தள்ளுமுள்ளு இல்லாமல் முருகன் தரிசனம். சில வருடங்களுக்கு முன்னர் வரை முருகனின் நிலை மிகவும் பரிதாபம். ஒன்றுமே இல்லாமல், கோவணம் மட்டும் தரித்த ஆண்டியானால் கூட சுரண்டுவதில் கில்லாடிகளாச்சே நம்மாட்கள். அப்படி நவபாஷாண சிலை சுரண்டப்பட்டதால் முருகனே தடியின் துணையின்றி நிற்க முடியாத ஒரு சூழ்நிலை. இப்போது குமரனின் விக்கிரகம் எங்கும் பல இடங்களில் வீங்கி இருப்பதுபோல் இருக்கிறது. ஏதோ மூலிகை மருந்தோ என்னவோ தடவி ஒரு மாதிரி பூசி வைத்திருக்கிறார்கள்.

ஓதுவார் ஒருவர் திருப்புகழ் பாட, அவர் சுமாராகப் பாடினாலும் பக்தியில் பாடுவதால் அந்த ambience மிகவும் நன்றாக இருக்கும். பல சமயங்களில் உருவாய் உளதாய் இல்லன்னா ஏறுமயில் ஏறி என்று திரும்பத் திரும்ப ஒரே பாட்டை பாடியே ஓட்டிவிடுவார். ஆனால் இந்த முறை பாடியவரோ கேட்டிராத பல பாட்டுக்களை பாடினார். நன்றாக இருந்தது. இந்த மாதிரி கோயிலில் பாட்டு என்றவுடன் இந்த முறை சென்ற இன்னொரு கோயில் நினைவுக்கு வருகிறது. கீழப்பழுவூர். திருவையாற்றிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் இருக்கிறது இந்த ஊர். பழுவேட்டரையர்கள் காலத்திய சிவன் கோயில் ஒன்று மெயின் ரோட்டிலிருந்து சற்று உள்ளடங்கி இருக்கிறது. அங்கே இப்படித்தான் பணம் எதிர்ப்பார்த்து ஒரு கோயில் ஊழியர்.

அம்பாள் சன்னதியில் அர்ச்சகர் அர்ச்சனை செய்யவிடாமல் பெருங்குரலெடுத்து அந்த ஊழியர் பாட ஆரம்பித்தார். 'தனந்தரும் கல்வி தரும்' என்று அபிராமி அந்தாதிப் பாடலின் முதல் வரியைத் தாண்டவில்லை. வெறுமனே வார்த்தைகளை திருப்பி திருப்பிப் போட்டு ஐந்து நிமிடம் பாடுகிறேன் என்று படுத்தி, திடீரென்று ஞானம் வந்தவராய் 'அபிராமி கடைக்கண்களே' என்று எங்கிருந்தோ கொண்டு வந்து முடித்தார். இதைத்தான் பாட பத்து காசு, பாட்ட நிறுத்த இருபது காசுன்னு சொல்வாங்கன்னு நினைக்கிறேன்.

விபூதி அபிஷேகம் முடிந்ததும் பிரஷ்ஷாக கொடுப்பார்கள். அதைப் பூசினாலே குளுகுளுவென்று இருக்கும். ஆனால் விபூதி கொடுத்து போனபின் உடனே பால், சந்தனம் எல்லாம் கொடுப்பதால் அவையெல்லாம் மேலே கீழே கொட்டி, கொஞ்ச நேரத்திற்கு இசுக் பிசுக் தான். இந்த வினியோகம் முடிவதற்கும் அலங்காரம் முடிந்து திரை திறப்பதற்கும் சரியாக இருக்கும். ஒரு வழியாய் அலங்காரமெல்லாம் பண்ணிக்கொண்டு.. சும்மா சொல்லக்கூடாது. அலங்காரம் மட்டும் பிரமாதமாக பண்ணி அமர்க்களப்படுத்தி விடுகின்றனர் இந்த பழநி அர்ச்சகர்கள்.

முருகனேயே சுரண்டும் பழநி கூட்டம் நம்மை மட்டும் விடுமா என்ன? பிரகாரத்திற்கு வந்தீர்களானால், ஒரு பெரிய பட்டாளமே காத்திருக்கும். கோயிலில் வேலை செய்பவரோ செய்யாதவரோ நம்மிடம் கறக்க ரெடியாய் இருப்பார்கள். அவர்களிடமெல்லாம் சாமர்த்தியமாக தப்பித்துக்கொண்டு மடப்பள்ளி அருகேயுள்ள அலுவலகத்திற்குள் சென்றோம். அங்கே, மீண்டும் பால். அப்புறம் பிரசாத பாக்கெட். ரூமில் வந்து பிரித்துப் பார்த்தால் பிரசாதம் கொஞ்சம் தாராளமாகவே கொடுத்திருந்தார்கள். எள் சாதம், புளியோதரை, சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல். நிறைய முந்திரிப்பருப்பு, நெய்யெல்லாம் போட்டு சக்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும் பிரமாதம். பஞ்சாமிர்தத்தை முன்னெல்லாம் ஒரு மட்டமான பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுத்தருவார்கள். ஆனால், இந்த முறை மிக நேர்த்தியாக சீல் செய்யப்பட்ட டின்னில் கொடுத்தார்கள். அதில் date of mfg, exp date எல்லாமே இருந்தது கூடுதல் சிறப்பு.

அங்கிருந்து குச்சனூர். தேனி தாண்டி 30 கிமி தெற்கில், சின்னமனூரில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து (NH-49) பிரிந்து ஒரு 2 கி.மீ செல்ல வேண்டும். திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் கூட்டத்தோடு கூட்டமாக இருக்கும் சனீஸ்வரனுக்கு இங்கே குச்சனூரில் தனி கோயில். இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் தனிகோயில். சமீபத்தில் தான் பிரபலமாயிருக்கிறது என்று நினைக்கிறேன். கோயில் எதிரிலியே முல்லையாறு ஓடுகிறது. சனீஸ்வரனுக்கு மிகவும் விசேஷமான பரிகாரத்தலம் இது. சனிப்பெயர்ச்சியின் போது மிகவும் கூட்டம் இருக்கும் என்று சொன்னார்கள்.

சரி, குச்சனூர் முடிந்துவிட்டது. இனியென்ன. மருத தான். தேனியிலிருந்து மதுரை செல்லும் சாலையை மிகவும் ரசித்தேன். மலைகளுக்கு நடுவேயெல்லாம் புகுந்து வளைந்து செல்லுகிறது இந்த NH-49. மதுரைக்கு சற்று முன்னரே, காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நேரெதிரில் பிரிந்தால் அந்தப்பக்கம் திருமங்கலத்தில் திருநெல்வேலி-கன்னியாகுமரி செல்லும் NH-7ல் சேர்ந்து அங்கிருந்து அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சென்று விடலாம்.

குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கு இன்னொரு உதாரணமாக இங்கேயும் மலை தான். சூரனை வதஞ்செய்த முருகப்பெருமான் இம்மலையில் அமர்ந்து அயர்ச்சி நீக்கி, சிவபார்வதி முன்னிலையில் தெய்வானையை மணஞ்செய்து திருத்தலம் இது. மலையிலேயே கோயிலின் கர்ப்பக்கிரகத்தைக் குடைந்து, மலைப்பாறையிலேயே முருகப்பெருமானையும் செதுக்கியிருக்கிறார்கள். பார்க்கவேண்டிய கோயில் இது.

அங்கிருந்து கிளம்பி, பெஸ்ட் வெஸ்டர்ன் ஜெர்மானஸ் போகலாம் என்று நானும் தம்பியும் கூற, 'உங்க ரெண்டு பேருக்கும் மதுரையைப் பத்தி ஒண்ணுமே தெரியில.. இப்படி ஊருக்கு வெளியிலலாம் தங்கினா, கத கந்தல் தான்.. அதனால் கூடலழகர் கோயிலுக்கு எதிர்த்தாற்போல் ஆர்த்தி என்று ஒரு ஓட்டல் இருக்கிறது. அங்கே தான் போகப் போகிறோம்' என்று முடிவாக சொல்லி விட்டார் அப்பா. மனதிற்குள் ஆர்த்தியை சபித்துக்கொண்டே மதுரைக்குள் நுழைந்தோம்.

(தொடரும்..)

இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?
1. மருதைக்கு போலாமா - 1: திண்டுக்கல், இராஜகாளி
2. மருதைக்கு போலாமா - 2: பழநி, சில்லி பரோட்டா, WWF

PS: As usual, got carried away with the title for this post. எத்தன தடவை ப்ளாக்கர் தலையில் குட்டினாலும், மரமண்டையில ஏற மாட்டேங்குது :(

11 Comments:

  1. rv said...

    testing...


  2. Anand V said...

    இராமநாதன்,
    அசத்தலாய் பயணக் கட்டுரை எழுதி கலக்கிறீங்க.

    அதற்கு என்ன முடிவு பண்ணீங்க ? YES or NO ?


  3. rv said...

    ஆனந்த்,
    thanks.

    //அதற்கு என்ன முடிவு பண்ணீங்க ? YES or NO ?//
    இப்போதைக்கு வேணாம், கொஞ்சம் டயம் கொடுங்கன்னு சொல்லிருக்கேன். சரின்னு சொல்லிருக்காங்க. நீங்க?


  4. Anand V said...

    மத்தவங்க நம்மலால கஷ்டப்படணும் என்று இருப்பதை நாம் மாத்தவா முடியும் ;)

    YES. but I got lot of time !


  5. துளசி கோபால் said...

    என்ன தம்பி ராமநாதா,

    ச்சும்மாவே இருக்க முடியாதா? இப்ப என்னாத்துக்கு திருமங்கலம்,
    திருப்பரங்குன்றம் எல்லாத்தையும் இழுக்கறீங்க?:-))

    இப்படி கொசுவர்த்திச் சுருள் வாங்கியே கோபாலோட காசெல்லாம் தீந்துருதேப்பா!

    திருமங்லத்துலே நாங்கரெண்டு வருசம் இருந்தோம். என் கல்விக்கண்ணு தொறந்தது அங்கெதான்.ஒண்ணாப்பும் ரெண்டாப்பும்!

    திருப்பரங்குன்றத்துலேதான் மொட்டை அடிச்சாங்களாம்.

    நல்லா ஜோரா எழுதிக்கிட்டு வர்ரீங்க.

    அப்புறம் என்ன ஆச்சு?

    சொல்ல மறந்துட்டேனே,

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலே ஒருத்தர்
    வாயாலேயே( மூக்காலேயே?) வயலின் வாசிச்சுக்கிட்டு இருந்தார். நிஜமாவே அருமையா இருந்தது.

    எல்லாம் வயித்துப்பட்டுக்குன்னு ஆயிருச்சுல்லே.


  6. Karthikeyan said...

    இராமநாதன் சார்,
    கலக்கிறீங்க தொடருங்கள்,


  7. Ganesh Gopalasubramanian said...

    நல்லாயிருக்கு ராமநாதன்....


  8. rv said...

    கணேஷ், கார்த்திக்,

    ரொம்ப நன்றி


  9. rv said...

    என்ன அக்கா,
    //திருமங்லத்துலே நாங்கரெண்டு வருசம் இருந்தோம்//

    அக்கா, இது டூ மச்... இந்தியாவுல எந்த ஊர் பெயர் சொன்னாலும், அங்க கொஞ்ச நாள் இருந்திருக்கேன் - றீங்க... தமிழ்நாட்டுல மட்டும் 600 நகரங்கள் இருக்குன்னு ரிலையன்ஸ்காரங்க சொல்றாங்க. ஒரு ஊருக்கு ஒரு வருஷம்னு வெச்சுகிட்டாலே ... 600 வயசாச்சு.. இந்தியாவுக்கும், அப்புறம் வெளி நாட்டுக்கும் சேத்து கணக்கு போடவே பயமாருக்கு. :)))

    அகத்தியர், வள்ளுவர்-லாம் ஒழுங்கா கிளாஸுக்கு போனப்போ நீங்க கட் அடிச்சிட்டு கொசுவத்தி வாங்கிருக்கீங்கன்னு இப்பதான் புரியுது.. அப்புறம் பிள்ளையார் எப்ப தோன்றினார்னு சந்தேகம் ஏன் வராது? :)))

    //காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலே ஒருத்தர்
    வாயாலேயே( மூக்காலேயே?) வயலின் வாசிச்சுக்கிட்டு இருந்தார். நிஜமாவே அருமையா இருந்தது.

    எல்லாம் வயித்துப்பட்டுக்குன்னு ஆயிருச்சுல்லே//
    போன தடவை சொன்னீங்களே, காஞ்சிபுரம் போனது பத்தி.. அப்போ நடந்ததா இது?


  10. G.Ragavan said...

    ஆகா பழநிக்கும் போய் அப்படியே திருப்பரங்குன்றத்திற்கும் போய் வந்திருக்கின்றீர்கள். அருமை.

    பழநியில் காசு பிடுங்கக் காத்திருப்பவர் நிறைய, முருகனைத் தவிர.

    முன்பு நாங்கள் பழநிக்குச் சென்ற பொழுது ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி நடந்தது.

    எங்கள் குடும்பம், பெரியப்பா அத்தை என்று பெருங் கூட்டமே சென்றோம். வாடகை வண்டி பிடித்துக் கொண்டு.

    நான் மலையில் நடந்துதான் ஏறுவேன். வருகிறவர் வரட்டும் என்று முதலிலேயே சொல்லி விட்டேன். எனது சித்தியைத் தவிர யாருமே தயாராக இல்லை. எல்லாரும் விஞ்சில் போகவே விரும்பினார்கள். கூட பாட்டியும் இருந்தார்கள். அவர்களுக்கு ஒரு வருடம் முன்புதான் காலில் தகடு வைத்து ஆபரேஷன் செய்திருந்தார்கள்.

    பழநிக்குப் போனால் விஞ்சில் ஏற மூன்று மைலுக்கு வரிசை. இளவட்டங்கள் உட்பட. ஆக பாட்டியை வண்டியிலேயே விட்டு விட்டு மற்றவர்கள் நடப்பது என்று முடிவு செய்தோம். (விஞ்சு கனவு பலருக்குத் தகர்ந்து போனது. இதில் என்னை வேறு விஞ்சுக்கு வரச்சொல்லி அழைத்தார்கள்.)

    ஆனால் பாட்டி ஒத்துக் கொள்ளவில்லை. காசிக்குப் போயும் கருமம் தொலையாதது போல பழநிக்கு வந்து சாமி கும்பிடாமல் போக முடியாதுன்னு அடம் பிடிச்சாங்க. ஒவ்வொரு படியா நின்னு நிதானமா ஏறி வர்ரேன்னு அவங்க ரொம்ப சொல்லவும், அவங்களையும் கூட்டீட்டு ஏறுனோன். ஆனா கொஞ்ச நேரத்துலயே முடியலைன்னுட்டாங்க. அவங்க அங்கேயே இருக்கேன்னு உத்தரவாதம் சொன்னதும், அங்க விட்டுட்டு நாங்கள்ளாம் மேல போனோம்.

    கூட்டமோ கூட்டம். ஸ்பெஷல் தரிசனத்துக்குக் காசு கட்டி, அங்கயும் கூட்டமோ கூட்டம். எப்படியோ உள்ள போய் முருகனை ராஜ அலங்காரத்தில் பார்த்துட்டு வந்தோம். வந்து உக்காந்து தேங்கா பழம் புளியோதரை பஞ்சாமிர்தம் எல்லாம் சாப்பிட்டு கதை பேசினோம்.

    ரெண்டு புளியோதரைய பாட்டிக்கும் வாங்கீட்டு கீழ எறங்குனா, நாலு படிக்கு முன்னாடி பாட்டி எறங்குறாங்க. ஓடிப் போயி விசாரிச்சோம். அவங்க கீழ உக்காந்திருக்கும் பொது ஒரு புருஷன் பெண்டாட்டி, ரெண்டு பசங்களோட வந்தாங்களாம். "ஏன் உக்காந்திருக்கீங்க, எங்களோட வாங்க. மெள்ளக் கூட்டிக்கிட்டுப் போறோம்,"னு சொல்லி ரெண்டு பசங்களும் கைத்தாங்கலா கூட்டிக்கிட்டு போனாங்களாம்.

    அங்க ஏதோ தரிசனத்துக்குப் போனாங்களாம். நேரா சாமியப் பாத்துட்டு ஒடனே வெளிய வந்துட்டாங்களாம். இறங்குற படி வந்ததும், பாட்டிதான் "எங்க புள்ளக இங்கதான் வரனும். நான் காத்திருந்து அவங்களோட வர்ரேன்னு" சொல்லீருக்காங்க.

    அவங்களும் ரெண்டு மூனு வாட்டி கேட்டுப் பாத்துட்டு அங்கயே விட்டுட்டுப் போயிட்டாங்களாம். அப்புறம் அங்கேயே ஒரு பதினஞ்சு நிமிசம் காத்திருந்துட்டு, நாங்க வரலைன்னதும் கீழ எறங்கத் தொடங்கீருக்காங்க. அப்பதாம் நாங்க கண்டு பிடிச்சோம். அவங்களுக்குப் புளியோதரையக் கொடுத்து சாப்பிட வெச்சோம்.

    இதுல எங்களுக்கு சில கேள்விகள்.
    1. நாங்க அத்தனை பேரும் வேகமாவே ஏறினோம். எங்களுக்கு நேரம் ஆனதே வரிசைலதான். அதுவும் ஸ்பெஷல் தரிசனம். ஆனா பாட்டி போன தரிசனத்துல கூட்டமே இல்லையாம். நேரா கோயிலுக்குள்ள போனேன்னு சொல்றாங்க. அலங்காரத்தோட முருகனப் பாத்ததா சொல்றாங்க.

    2. கண்டிப்பா பாட்டி மெதுவாத்தான் ஏறியிருக்கனும். ஆனால் சாமி கும்பிட்டிட்டு பதினைஞ்சு நிமிசம் காத்திருந்தது எப்படி? அதுக்கப்புறம் எறங்கும் போதுதானே நாங்க பாத்தோம்.

    3. ஒருவேள பாட்டிக்கு முன்னாடி நாங்க கீழ இறங்கி அங்க பாட்டி இல்லைன்னா....என்னென்ன குழப்பம் இருந்திருக்கும். என்ன டைமிங்!

    என்னவோ.


  11. rv said...

    ராகவன் சார்,
    ரொம்ப interesting-ஆ இருக்கு உங்க அனுபவம். நிஜமாவே, எப்படி அவங்களாலே அவ்வளவு சீக்கிரம் பார்த்து, அதுவும் கோயிலிலிருந்து வெளியிலும் வர முடிந்ததுனு எனக்கும் புரியவில்லை.

    எனக்கும் இந்த மாதிரி சில அனுபவங்கள் இருக்கு. விளக்கங்கள் கொடுக்கவே முடியாதவை. ஒரு முறை திங்கட்கிழமையன்று காலை சண்முகார்ச்சனைக்கு திருச்செந்தூர் சென்றிருந்தோம். 'அப்போ நாங்கள் அனுப்பிய டி.டி முந்தைய நாள் விடுமுறை ஆதலால் இன்னும் வந்துசேர வில்லை' என்றார் தேவஸ்தான அலுவலக ஊழியர். அந்தப் பணம் வராமல் பூஜைக்கு செல்ல முடியாதே என்று கவலைப்பட்ட வேளையில் சிறிது நேரத்தில் அங்கே வந்த மற்றொருவர் 'நீங்கள்(என் தந்தையின் பெயரும் ஊரும் குறிப்பிட்டு) வரப்போகிறீர்கள் என்று முன்கூட்டியே சுப்பிரமணியம் என்பவர் எங்களுக்கு HR&CE மெட்ராஸ் ஆபிஸிலிருந்து போன் பண்ணார். அதனால், டி.டி வரபடி வரட்டும். அதப்பத்தி கவலப்படாதீங்க. நீங்க சண்முகார்ச்சனைக்கு போலாம்' என்றார்.

    இதில் ஆச்சரியம் என்னவென்றால்,
    எங்களுக்காக போன் செய்த அந்த சுப்பிரமணியம் யார் என்று இன்றுவரை எங்களுக்குத் தெரியாது!


 

வார்ப்புரு | தமிழாக்கம்