கு. போ. கதை - 3: அருவியில் தவம் செய்யும் யோகிகள்

சென்ற பதிவின் தொடர்ச்சி...

தென்காசியிலிருந்து குத்தாலம் 5 கீ.மீ தான். மதியம் போய் சேர்ந்தவுடனே, அப்பாவின் நண்பர் ஏற்பாடு செய்து வைத்திருந்த பிரமாதமான சாப்பாடு உண்டு களைப்பாறிவிட்டு (ஆனந்த் சொல்வதுபோல் இந்த தொடருக்கு மெகா சீரியல் tone வந்துடுச்சுனு நினைக்கிறேன்.. என்ன என்னல்லாம் சாப்பிட்டோம்னு பொறுமையா எழுதலாம்னு நினைச்சேன். ஆனா படிப்பவர் மேல் பாவப்பட்டு விட்டுவிட்டேன். இன்னும் இந்த மாதிரி எப்படியெல்லாம் என்னுடைய இந்த லட்சியப் பயணத்தொடரை இழுக்கலாம் என்று ஐடியா தருவோரின் பதிவுகளுக்கு வழக்கம் போல் பின்னூட்டங்களும், நட்சத்திரங்களும் குத்தப்படும்), மாலை 5 மணி சுமாருக்கு மெயின் அருவி என்றழைக்கப்படும் பேரருவிக்கு கிளம்பினோம்.

ஆகஸ்ட 15 வீக்கெண்ட் முந்தைய தினமே முடிந்துவிட்டதால் ஓரளவிற்கு கூட்டம் குறைவுதான். அருவிக்கு அருகிலேயே "malish" கடைகள், அதான் ஆயில் மசாஜ்... ஏராளம். வேறுவேறு சைஸ்களில், பளபளவென்று எண்ணெய் கோட்டிங்-கோடு சிலர் குப்புறப்படுத்து நிஷ்டையில் ஆழ்ந்திருக்க, அவர்களின் முதுகிலே மத்தளம் வாசித்துக்கொண்டிருக்கின்றனர் மசாஜ் ஸ்பெஷலிஸ்ட்கள். அவர்கள் அடிக்கும் அடியில், நீவும் வேகத்தையும் பார்க்கும் நமக்கே வலிக்கிறது. இதற்கெல்லாம் பேரம் பேசி ஒரு ரேட் பிக்ஸ் செய்து கொள்ளலாம். ரேட்டுக்கு தகுந்தாற்போல் மசாஜ். ரொம்ப குறைச்சு கேட்டாலும் ஒத்துக்கிட்டு செஞ்சுவிடுவாங்க. என்ன, பக்கத்து டீக்கடையிலேர்ந்து முந்தைய நாள் வடை சுட்ட எண்ணெய் மசாஜ் கிடைக்கும். அவ்ளோதான்.

அருவியிலிருந்து வரும் தண்ணீர் ஒரு சிறு குட்டையாக தேங்கி, அதிலிருந்து ஆறாக கிளம்புகிறது. குட்டை மிகவும் அசுத்தமாக இருக்கிறது. காலியான சோப்பு, ஷாம்பு டப்பாக்கள் மற்றும் இன்னவென்று விளக்கமுடியாத ப்ளாஸ்டி குப்பைகள் - இவற்றுடன் அருவியில் குளிப்பவர்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ, எண்ணெய் ஆகியவை எல்லாம் கலந்து ஒரு வித நுரையுடன் மிதக்கிறது. இந்த குட்டையிலும் சிறுவர்கள் ஏதோ pool மாதிரி குதித்து குதித்து விளையாடுகின்றனர். பெற்றோர்களும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றனர். இந்த குட்டையிலிருந்து கிளம்பும் ஆற்றில் கரையிலேயே உட்கார்ந்து, பிக்னிக் வந்த குடும்பத்து பெண்மணிகள் எல்லாம் சாப்பாடு பாத்திரங்களை கழுவிக்கொண்டும், துணிமணிகளை துவைத்துக் கொண்டும் இருக்கின்றனர்.

இவர்களைத்தாண்டினால் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனிப் பகுதிகளாய் தடுப்பு கட்டி அழகாகப் பிரித்துள்ளனர். எல்லா நேரமும் இரு காவலர்கள் காவலுக்கு இருக்கின்றனர். ஆண்கள் பகுதியில் நுழைந்தால், சோப்பை முழுதாய் முகத்திற்கும் சேர்த்து தடவிக்கொண்டு, அருவி விழும் பாறையை துழாவியபடியே போவோர் வருவோர் மேலெல்லாம் இடித்துக்கொண்டே அலைகின்றனர் சிலர். இவர்களாவது பரவாயில்லை. தண்ணி பட்டால் சோப்பு போய்விடும். ஆனால் வெளியில் ஆயில் மசாஜ் செய்து கொண்டு வருவோரின் தொல்லை தாங்க முடியவில்லை. இவர்கள் புண்ணியத்தால், எல்லோருக்கும் எண்ணெய் குளியல் நிச்சயம். அடடா, இந்த தடவையும் சென்ற முறை மாதிரி ஒரு disgusting அனுபவம் தான் கிடைக்கப்போகிறது என்று பெரிய எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் இல்லாமல் போனேன்.

அருவி கிட்டே வந்தாகிவிட்டது. உள்ளே போவதா, சாரலே இவ்வளவு குளிருகிறதே, அருவிக்குள் சென்றால் உறைந்தே போய்விடுவோம் என்று நினைத்துக்கொண்டே சுற்றும்முற்றும் பார்த்தால் டவுசர்கூட போடாத சின்னப் பசங்களெல்லாம் சர் சர்ரென்று அருவிக்குள் உள்ளே நுழைந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சரி, இவங்களே பண்ணும்போது நாமும் பண்ணினால் என்ன என்ற வேண்டாத திமிருடன் உள்ளே நுழைந்தது தான் தெரியும். அப்பா.. இத்தனைக்கு நாங்கள் உள்ளே நுழைந்த இடத்தில் அவ்வளவு வேகம் கூட இல்லை. ஆனால், வெடவெடக்கும் குளிர். போன மச்சான் திரும்ப வந்தான் கதையா திரும்பி வெளியே ஓடி வந்துவிட்டேன். ஒரு ஐந்து நிமிடத்திறகு ஒன்றும் புரியவில்லை. பழைய டைப் ரைட்டர் மாதிரி ஆகிவிட்டது. மறுபடியும் சகஜ நிலைக்கு வந்தவுடன், பார்த்தால் என் தம்பி அருவிக்குள் உள்ளே சென்று செட்டிலாகிவிட்டான். சரி, நாமும் போவோம் மறுபடியும் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மீண்டும் நுழைந்தேன்.

இந்தமுறை உள்ளே நுழைந்தபோது அவ்வளவு குளிரில்லை. இன்னும் தைரியம் வந்து, சரி அருவியின் நடுப்பகுதிக்கு செல்வோம் என்று பார்த்தால், க்யூ என்று ஒன்று பெயருக்குத்தான் இருக்கிறது. நகருவதற்கான அறிகுறிகளே இல்லை. புகுந்தவர் வந்திலர் என்று தான் சொல்லவேண்டும். அருவியின் உள்ளே சென்றோருக்கு வெளியில் வருவதாக எண்ணமே வந்ததாக தெரியவில்லை. அருவியின் உள்ளே புகுந்து பாறையில் சாய்ந்துகொண்டே தவம் செய்வது போல் கண்மூடி, கைகளை மேலே தூக்கிக்கொண்டே தியானத்தில் இருக்கின்றனர். சொல்வதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், உண்மையில் எரிச்சல் மூட்டும் ஒரு விஷயம் இது. எல்லோரும் குளிக்கத்தானே வந்திருக்கிறார்கள், அவர்களுக்கும் இடம் கொடுப்போமே என்றெல்லாம் சிறிதும் எண்ணமில்லாமல் தங்கள் private அருவி போல் ஆக்கிரமித்து கொள்கின்றனர். கூட்டமில்லாத சமயத்திலேயே இந்த மாதிரியென்றால், சீசன் நேரத்தில் இன்னும் மோசமாக இருக்கும் போல. க்யூவில் எங்களைப் போன்று பலர் பே வென்று நின்று கொண்டிருக்க, எண்ணெய் மசாஜ் போட்டவரெல்லாம் எங்களை பை-பாஸ் செய்து கொண்டு நேரடியாக அருவிக்குள் புகுந்துகொள்கின்றனர். எண்ணெய் தேய்க்காதோர் எல்லாம் இந்த எண்ணெய் பிசுக்கு மாபியா-வுக்கு பயந்து இடம் கொடுத்து ஒதுங்க வேண்டியிருக்கிறது. இதை எப்படியாவது ஒழுங்கு படுத்தினால் நன்றாக இருக்கும்.

கடைசியில் might is right - என்பதுதான் இந்தியாவில் செல்லுபடியாகும் என்றபடியால் நாங்களும் அடித்து பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தால்... ஷாக் தான். ஒரு சில கணங்களுக்கு என்ன நடக்கிறதென்றெ புரியவில்லை. தலையில் டமடமவென்று கற்கள் விழுவது போல் கொட்டுகிறது. கண்ணைத் ஒரு நொடிகூட திறந்து பார்க்கமுடியாத அளவிற்கு வேகம். இடிமுழக்கம் தான் கேட்கிறது. ஆனால் ஒரு இனம்புரியாத பரவசம். அப்படியொரு சுகம். விட்டால் நின்று கொண்டே இருக்கலாம் என்பது போல் தான் இருக்கிறது. இந்த பரவசம் தான் உள்ளே போனவரையெல்லாம் வெளியில் வரவிடாமல் செய்கிறது என்று புரிந்தது. வெளியே வந்தவுடன் விவரிக்க முடியாத ஒரு தனிப் புத்துணர்ச்சி.

ஒரு தடவையோடு வந்துவிட முடியுமா? மீண்டும் ஒரு நான்கைந்து முறை உள்ளே சென்று வந்தோம். வெளியில் வர மனமே வரவில்லை. அருவி விழும் பெரிய பாறை முழுவதும் சிவலிங்கங்கள், முனிவர்கள் சிற்பங்கள் எல்லாம் செதுக்கி வைத்துள்ளார்கள். ஆங்காங்கே சிவலிங்கங்களை சிறுசிறு cavity களில் வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி இடங்களில், ஒரு ஆள் உட்காரக்கூடிய அளவிற்கு இடம் இருப்பதால் இங்கு போய் செட்டில் ஆனால், சிவனோடு சேர்த்து நமக்கும் அபிசேகம் தான். வற்றாத வடவருவி என்பது இந்த பேரருவியின் பழங்காலப் பெயர். அகத்தியர் போன்றோர் நீராடிய மிகவும் புண்ணியமான அருவி என்று தலவரலாற்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் அருவி சூப்பர். ஆனால் கூட்டத்தை இன்னும் கொஞ்சம் ஒழுங்கு படுத்தினால் வந்தவர் எல்லாரும் அனுபவிக்கலாம்.

ஒரு முக்கால் மணிநேரம் மற்றவர் எண்ணையாடி, அதைப் போக்க நீராடி ஒருவழியாக வெளியில் வந்தாச்சு. பேரருவியின் அருகிலேயே திருக்குத்தாலநாதர் கோயில். அவரைப் பற்றியும், மத்த அருவிகளைப் பற்றியும் அது அடுத்த முறை!!

(தொடரும்...)

இன்னும் எவ்வளவு நாள் தான் இந்த உருப்படாத கதையை இழுத்து இழுத்து ரம்பம் போடப்போகிறாய் என்று குமுறுவோர்க்கு ஒரு நற்செய்தி! அடுத்த பதிவுடன் மெகா பயணத்தொடர் முற்று பெறலாம். முற்றவேண்டும் என்று வேண்டி பிள்ளையாருக்கு இன்று ஒரு எக்ஸ்ட்ரா கொழுக்கட்டை போடுங்கள். ;-)

இதற்கு முந்தைய பதிவுகளைப் படிச்சாச்சா?
1. குத்தாலம் போன கதை - 1 : திருவில்லிபுத்தூர், சங்கரன்கோயில், திருநெல்வேலி
2. கு. போ. கதை -2: கோவிந்தர் காட்டும் வாழ்க்கைத் தத்துவம், திருச்செந்தூர், தென்காசி

6 Comments:

  1. துளசி கோபால் said...

    இதுக்கெல்லாம் பயந்துருவமா? அதுவும் புலியையே வெறும் முறத்தாலே தொறத்தியவங்களாச்சே நாங்க!

    நல்லா நகைச்சுவையாதான் எழுதக் கைவந்திருக்கு. விட்டுடாதீங்க. எதையும் இப்படி நகைச்சுவையோடு பார்க்கர பார்வை வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம்.

    அதான் 'துன்பம் வந்தால் நகுக'
    சொல்லிட்டுப் போயிட்டாங்கல்லெ.

    //வடை சுட்ட எண்ணெய்// ரொம்பப் பிடிச்சது:-)

    என்றும் அன்புடன்,
    அக்கா


  2. தாணு said...

    இவ்ளோ சலிச்சுக்கிற நேரத்துக்கு மடமடன்னு செண்பகாதேவிக்கு ஏறியிருக்கலாமில்லே! குற்றாலத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் குடமுருட்டின்னு ஒரு தனிமையான அருவி இருக்குதாமே?
    அது பற்றி தெரியுமா?


  3. rv said...

    துளசி அக்கா,
    ரொம்ப நன்றி

    தாணு
    செண்பகாதேவி அருவிக்கு ஒரு முக்கால் மணிநேரம் நடக்கவேண்டும் என்று சொன்னதால், போகவில்லை. அம்மாவால பாவம் நடக்கமுடியாதுன்னு விட்டுட்டோம் ;) நேரம் வேற இல்லை.

    குடமுருட்டி பத்தி தெரியல. ஆனா பாபநாசம், பாணதீர்த்தம் என்னும் அருவிகள் குத்தாலத்திலிருந்து ஒரு மணி நேரம் பயணம்னு போகாம விட்டுட்டோம். ஊருக்கு திரும்பி வந்ததுக்கப்புறம் தான் நண்பர் ஒருவர் அந்த இடங்களில் எடுத்த படங்களை பார்த்து, அடடா போகாமல் விட்டுட்டோமேன்னு ஆயிடுச்சு. அவ்ளோ சூப்பரா இருந்தது இடம். ரோஜா படத்தில் வரும் 'சின்ன சின்ன ஆசை' பாடல் எடுக்கப்பட்ட அருவியாம் அது.

    நன்றி


  4. Anand V said...

    //வடை சுட்ட எண்ணெய்

    ஹி ஹி..
    நான் எப்பத்தான் சென்னையை தவிர மற்ற இடங்களையும் பார்ப்பேனோ தெரியவில்லை.


  5. Thangamani said...

    //'சின்ன சின்ன ஆசை' பாடல் எடுக்கப்பட்ட அருவியாம் அது//

    பாடல் பெற்ற தலம்னு சொல்லுங்க!


  6. rv said...

    தங்கமணி,

    //பாடல் பெற்ற தலம்னு சொல்லுங்க! //

    :)))


 

வார்ப்புரு | தமிழாக்கம்