அனுராக் காஷ்யப்பின் மாஸ்டர்பீஸ் - Black Friday

"An eye for an eye makes the whole world blind - Mahatma Gandhi" என்று தொடங்குகிறது இந்த அற்புதமான திரைப்படம். ஜனவரியிலேயே வெளிவர இருந்து சென்ஸாரால் அனுமதிக்கப்பட்டும், உச்சநீதி மன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய படமென்று இணையத்தில் வாசித்த நினைவு இருக்கிறது. நேற்றுதான் பார்க்கமுடிந்தது.

மார்ச் 12,1993 - ஒரு குறுகிய கால நேரத்திற்குள் தொடர்குண்டு வெடிப்புகளால் மும்பையை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் பீதியில ஆழ்த்திய நாள். 250-மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர், இன்னும் பல ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த தீவிரவாதச் செயலைப்பற்றியும், அந்த தீவிரவாதிகளின் சமூகப்பார்வையைப் பற்றியும், விசாரித்த அதிகாரிகளின் பார்வையும், வழக்கை நடத்திய விதத்தையும் விளக்கமாக விவரிக்கும் ஹூசேன் சாயித்தி-யின் "Black Friday" என்ற புத்தகத்தின் தழுவலாய் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார். எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் ஜட்ஜ் செய்யாமல், அவர்களின் காரியங்களை கொண்டு படம்பார்ப்போரே ஒரு முடிவுக்கு வரும் வகையில் நேர்மையான நடுநிலைமை படமெங்கும் இருக்கிறது.

மேலும் படிக்க...

அயோத்தியாவில் சமூக மற்றும் சட்ட விரோதமாய் நடத்தப்பட்ட பாப்ரி மசூதி இடிப்பின் எதிரொலியாகவும், பின்னர் மும்பையில் நடந்த கலவரத்தில் இரு மதத்தவரும் செய்த அநியாயங்களின் காரணமாகவும், டைகர் மேமோன் மற்றும் தாவூத் இப்ராஹிம் எப்படி இந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டனர், இந்த குண்டுவெடிப்புகளை நடத்திய டைகர் மேமோணின் கைப்பாவைகள் எப்படி, எங்கு பயிற்சி பெற்றனர், பின்னர் அவனால் எப்படி வஞ்சிக்கப்பட்டனர், இதில் பாகிஸ்தானின் பங்கு என்றெல்லாம் மிக பொறுமையாக கிட்டத்தட்ட ஒரு விவரணப்படம் போலவே இயக்குநர் தன் திறமையை வெளிச்சம் காட்ட ஒரு சாதனமாக இல்லாமல், underplay பண்ணியுள்ளார். இது மிகவும் பாராட்டுக்குரியது. அதே போல் காமிராவும், எடிட்டிங்கும் narrative-ஐ பாதிக்காமல் பிரமாதமாக உள்ளன.

இது உண்மைக்கதையாதலால் இந்தக்கதைப் பற்றி விமர்சனம் செய்ய இயலாது. சில காட்சிகள் திகில் கிளப்புகின்றன. கர்சேவக்குகளின் முட்டாள்தனத்தாலும், பின்னர் முஸ்லீம்கள் மற்றும் இந்துக்களின் மதவெறிக்கலவரத்தாலும் எத்தகையதொரு mutual துவேஷம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பார்த்தால் அதிர்ச்சியைத் தருகிறது. எனக்கு இந்த படத்திலேயே மிகவும் பிடித்த, பாதித்த காட்சியை மட்டும் சொல்லிவிட்டு முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.

ராஜேஷ் மரியா (கே.கே.மேனன்) பிடிபட்ட பாட்ஷா கான் (ஆதித்ய ஸ்ரீவாஸ்தவ்) என்பவனை விசாரணை செய்யும் காட்சி. பாட்ஷா கான் தங்கள் பக்கமே அல்லாஹ் இருப்பதனால்தான் இப்படிப்பட்ட துணிமிகு காரியத்தில் காபிர்களை கொல்லமுடிந்தது என்றும் பணப்பிரச்சனையும் அல்லாஹ்வின் கருணையாலேயே தீர்க்கப்பட்டது என்று இறுமாப்போடு சொல்வான். அதற்கு ராஜேஷின் பதில் உலகில் உள்ள எல்லா மதப் பிரச்சனைகளையும் தூண்டி தீவிரவாதம் செய்வோர்க்கு சாட்டையடி போன்றது. "இல்லை, அல்லாஹ் இந்த விஷயத்தில் எங்கள் பக்கமே இருக்கிறார்". பாட்ஷா,"என்ன கிண்டல் செய்கிறீர்களா?". ராஜேஷ் - "அல்லாஹ் என்பவ்ர் எல்லாருக்குள்ளும் இருக்கிறார். இப்படி அடுத்தவரை துன்புறுத்தும் விஷயங்களை அல்லாஹ் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். அல்லாஹ் எங்கள் பக்கமிருப்பதாக நான் கூறுவதற்கு காரணம் இதோ. அவர் உங்கள் பக்கமிருந்தால் நீ என் முன்னால் விசாரணையில் சிக்காமல் வேறெங்கோ தப்பித்திருப்பாய். எங்களுக்கு ஒரு துப்பும் கிடைத்திருக்காது. இரண்டே மாதங்களில் சம்பந்தப்பட்ட 200 தீவிரவாதிகளை எங்களால் கைது செய்திருக்க முடியாது. உன்னோடு அல்லாஹ் இருந்திருக்கவில்லை. வெறும் டைகர் மேமோனே இருந்தான்."

இதற்கு மேல் மதத்துவேஷத்தை வளர்க்கும் கொடியவர்களுக்கு என்ன பதில் வேண்டும். மதத்தின் பெயரால் கொல்லுபவர்கள் தங்கள் சுயநலத்திற்காக மதங்களை திரித்து அப்பாவிகளை கொன்று குவிக்கிறார்கள் என்பதே உண்மை. ஒரு சமூகத்தைப் பற்றியே குறைகூறுகிறமாதிரி தோன்றாமல், நடுநிலையோடு ஒரு சாது (அவர் பேசுகிற பேச்சைக்கேட்டால் சாதுவென்று கூறவே அருகதையற்றவர்) மற்றும் பூரி சங்கராச்சாரியார் (?) ஆகியோரின் நிஜமான இந்து ஆவேச பேட்டிகளும் உள்ளது. இதைத்தவிர பாகிஸ்தானின் ஒரு முக்கிய அதிகாரியிடம் உள்ள பேட்டியும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் வெளிவந்து என்னை மிகவும் பாதித்த, மிகவும் கவர்ந்த திரைப்படங்களின் வரிசையில் இந்த Black Friday-உக்கு இடமுண்டு. "பாம்பே, தில் சே" போன்று சினிமாத்தனமாக இல்லாமல் மிகவும் யதார்த்தமான நடிப்பும் ஒரு பெரிய ப்ளஸ். இதைப்படிப்போருக்கு நான் கூறவிரும்புவது. கண்டிப்பாய் இந்தியர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய படம். ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல் பேசும் peace hawks (வேண்டுமேன்றே தான் hawks பயன்படுத்தியுள்ளேன்) இல்லை ஒரு பக்கமே குறை இருக்கிறது என்று தங்களையே ஏமாற்றிக்கொள்ளும் pseudosecularists போன்றோரைப் போலில்லாமல் இருபக்கமும் தவறிருக்கிறது என்று தைரியமாக சொல்லுகிறது இந்தப்படம்.

பிகு: எதற்காக உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது என்று எண்ணிப்பார்க்கும் போது, இப்படத்தில் வருணிக்கப்படும் இஸ்லாமிய தீவிரவாதிகள், இந்துத்வா கரசேவக்குகள்: இதைப்பார்க்கும் radical எண்ணங்கொண்ட இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் எல்லோரும் சதிகாரர்களே என்ற வக்ர எண்ணம் உதிக்கலாம். அதே போல் தீவிரமான இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் நம்மை அடக்கியாள்வதால், தீவிரவாதமே சரியென்று தோன்றலாம். இன்னும் matured audience-ஆக இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் நிலையில் நம்மில் பலரும் இருக்கிறோம். திரையில் உள்ளதை ஆராயாமல் இம்மாதிரி வெறும் எமோஷனலாக செயல்படும் mob mentality இருப்பதுதான் முக்கியமான காரணமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

4 Comments:

  1. Thangamani said...

    appadiye 'In the name of God', 'Final solution', Father, son and Holy war' paarkkavum.


  2. rv said...

    தங்கமணி அவர்களே,
    பின்னூட்டத்திற்கு நன்றி.
    நீங்கள் குறிப்பிட்டவை mainstream திரைப்படங்களா? இல்லை விவரணப் படங்களா? இதுவரை கேள்விப்பட்டதில்லை. கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கிறேன்.

    நன்றி


  3. Boston Bala said...

    Hats off... excellent review.


  4. rv said...

    பாஸ்டன் பாலா அவர்களே,
    மிக்க நன்றி

    இராமநாதன்


 

வார்ப்புரு | தமிழாக்கம்