அரசு மருத்துவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

இன்றைய தேதியில் அரசியலைத் தொழிலாகக் கொண்டோரைத் தவிர மிகவும் சாடப்படும் வர்க்கம் மருத்துவர்கள் தான் என்று நினைக்கிறேன். எந்த ஒரு மருத்துவரையும் விட்டு வைப்பதில்லை. முதலிலேயே நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் எல்லாத்துறைகளைப் போல இத்துறையிலும் பெருச்சாளிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களைப் பற்றி பேசுவதில் சிறிதும் பிரயோசனமில்லை.

ஆனால் அத்தகைய சிறுபான்மையினரால் ஒட்டுமொத்த மருத்துவ வர்க்கமே அநியாயமாக கெட்ட பெயருக்குள்ளாகின்றது.முக்கியமாக அரசு மருத்துவர்களைப் பற்றி. முன்பே கூறியது போல், ஊழல்க்காரர்களைப் பற்றி பேசவில்லை. அரசு மருத்துவரென்றாலே அவர் அத்தகையவர் என்ற கருத்து நிலவுகின்றது. இதை நான் என் கண்ணால் பார்த்திருக்கின்றேன். மிகச்சமீபத்தில் தமிழகத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில் பார்வையாளனாய் (observer) இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மருத்துவத்துறையை சார்ந்தவனாயினும்,அயல்நாட்டில் படித்ததால் அங்கே சேரும்முன்னர் எனக்கும்கூட கொஞ்ச கெட்ட அபிப்பிராயம் இருந்தது..அதைத்தவிர இந்தியன், ரமணா பார்த்தது கூட காரணமாக இருக்கலாம்!

முதலில் இந்த எ.மு.சி பிரிவின் அமைப்பை பற்றி கூறிவிடுகிறேன். 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர், இரு மருத்துவர்கள், நான்கு பட்டதாரி மாணவர்கள். ஒரு குழு அறுவைச் சிகிச்சையும், ஒரு குழு வெளிநோயாளிகளையும் கவனித்துக் கொள்ளும். இதில் மூன்றாவது குழு மற்ற இரு குழுக்கள் பணி முடிந்தபின்னர், 24 மணி நேர அவசர சிகிச்சையை கவனித்துக்கொள்ளும். இது சுழற்சி முறையில் நடைபெற்று வரும்.

வெளிநோயாளிகள் பிரிவைப் பற்றி இப்போது. காலை 8-ல் இருந்து 8 30க்குள் இரு மருத்துவர்களும் வந்திடுவர். தலைமை மருத்துவர்களுக்கு அநேகமாக அலுவலக காரியங்களுக்கே நேரம் சரியாகப்போய்விடும். இந்த போர்ட், அந்த போர்ட் என்று சொல்லி அவர் வருவதற்கே 11 ஆகிவிடும். காலை 8 மணிக்கு முன்னர் நானே ஒரு நாளும் போனது கிடையாது. ஆனால் அப்போது இருக்கும் கூட்டம் சொல்லிமாளாது. ஒரு நாளைக்கு 200-300 என்பது சர்வ சாதாரணமாக நடக்கக்கூடியது. இதில் என்ன பெரிய விஷயம், தனியார் பொது மருத்துவர்கள் பார்ப்பதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பொது மருத்துவமல்ல இது. ஒரு நாளைக்கு 150 வெளிநோயாளிகளைப் பார்க்கும் நிபுணர்களை அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறெங்கும் காணமுடியாது. அதிகபட்சம் 50. அதுவே மிக அதிகம். இதில் குழுவிற்கு வரும் கூட்டத்தில் அட்மிட் செய்யவேண்டியோர் குறைந்தபட்சம் 20 என்று வைத்துக்கொள்வோம். இந்நோயாளிகள் டிஸ்சார்ஜ்- ஆகும் வரை இக்குழுவே கவனித்துக் கொள்ளும்.

இப்போது அறுவைச் சிகிச்சை பற்றி. நான் பார்த்த வரையில் காலை 745-க்குள் பட்டதாரி மாணவர்கள் வந்து நோயாளிகளை தயார்ப்படுத்துவதில் ஈடுபடுவர். 830-9பதுக்குள் மற்ற இரு மருத்துவர்கள் அவர்களின் முந்தைய நாளின் அட்டவணையின்படி 24-மணி நேரச் சிகிச்சைப் பிரிவிலிருந்தோ வீட்டிலிருந்தோ வந்துவிடுவர். வாரத்தில் பாதி நாட்கள் அங்கு தான் காலைச் சிற்றுண்டி அவர்களுக்கு. தலைமை மருத்துவர்களும் வந்திடுவர். ஓரு நாளில் surgery-யின் தன்மையை பொறுத்து 3-4 வரை செய்ய முடியும். அதுவும் எ.மு.சி அறுவை சிகிச்சைகள் மற்ற பிரிவுகளுடன் ஒப்பிடும்போது அதிக physical exertion உண்டாக்கக் கூடியவை. (பெரும்பாலும் சுத்தியலும் கையுமாய் அலைவதால் தான் எ.மு. மருத்துவர்களை 'carpenters' என்று மற்ற மருத்துவர்கள் கிண்டலடிப்பர்.) இந்நிலையில் ஒருநாளில் அதிகபட்சமாக 7 நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யமுடியும்.

இப்போது முந்தைய பத்தியைப் பார்த்தீர்களானால் அதில் ஒரு நாளைக்கு 20 நோயாளிகள் அட்மிட் செய்யப்படுகின்றனர். ஆனால் அடுத்த நாள் அறுவை சிகிச்சை செய்யமுடிவதோ 7 பேருக்கு மட்டுந்தான். மிச்சம் 14 முடிக்கவே இன்னும் இரு அறுவைச் சிகிச்சை நாட்கள்
தேவைப்படும். ஆனால் அவ்விரு நாட்களுக்குள் அட்மிட் ஆகியும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கமுடியாமல் மேலும் தள்ளிப்போடப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40! உயிருக்கே ஆபத்து என்ற நிலை இருந்தாலேயொழிய seniority முறையில் தான் நடக்கும். இது ஒரு குழுவிற்கு மட்டும். மற்ற இரு குழுக்களுக்கும் இதே நிலைதான்.

சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கமுடியவில்லையெனின் நோயாளியின் நிரந்தர disability-களும் இன்னபிற complications-um வர வாய்ப்புகள் மிக மிக அதிகம். அப்படிப்பட்ட நிலையில், சிகிச்சையால் முழுகுணமாகாமல் போகலாம். இப்படி ஆவதில் மருத்துவர்களைக் குறை கூற முடியுமா என்று சிந்தித்து பாருங்கள்.

நான் இதுவரை சொன்னது எல்லாம், எவ்வித தங்குதடையின்றி இந்த சிகிச்சை மையம் இயந்திரம் போல் செயல்பட்டால். எ.மு. சிகிச்சைப் பிரிவின் மருத்துவர்கள் அடிதடி, சாலைவிபத்துக்கள் போன்ற MLC(medico-legal cases) வழக்குகள் போன்றவற்றிற்கு சாட்சி சொல்ல போகவேண்டும். undergraduate மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு பாடம் மற்றும் லெக்சர்கள் எடுக்கவேண்டும். அதைத்தவிர அவர்கள் குடும்ப சூழ்நிலைகள். அடுத்தது bureaucracy. சில நோயாளிகளுக்கு அவ்வளவு அவசரம் இல்லையாயினும் அரசியல் பின்னணியோடு வருவோர் ஏராளம். அவர்களுக்கு முதலில் சிகிச்சை அளியுங்கள் என்று dean தன் கைப்பட எழுதிய கடிதங்களை நான் அங்கு இருந்த குறைந்தகாலத்திலேயே ஏராளமாக பார்த்திருக்கிறேன்.

இவைத்தவிர அறுவைச்சிகிச்சைக்கான உபகரணங்கள் பழைமையானதாகவும், பல நேரம் வேலையே செய்யாதாகவும் இருக்கும். நம்பினால் நம்புங்கள். மின்சாரம் இல்லாமல் unipolar hemiarthroplasty செய்யப்பட்டு பார்த்திருக்கிறேன். இவ்வகை சிகிச்சை இப்போது மேல்நாடுகளில் செய்யப்படுவதில்லை. அதற்கு பதில் bipolar வந்துவிட்டது. ஆனால் அதை செய்வதற்கான உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் கிடையாது. அதே போல் ஒருமுறை open செய்த பின்னர் மின்சாரம் கட் ஆனதால் bleeders-ஐ கட்டுப்படுத்த மருத்துவர்கள் பட்டபாடு பார்த்தால் தான் தெரியும். நான் டார்ச் லைட் பிடிக்க, மற்ற மருத்துவர்கள் லிகேட் பண்ணுவதற்குள் திண்டாட்டமாகிவிட்டது. பாதி நாட்கள் குளிர்சாதன வசதி இருக்காது. கையுறைகளை autoclave முறையில் recycle செய்வதையும் இங்குதான் பார்த்தேன். எ.மு அறுவை சிகிச்சை தியேட்டர்களில் check X-Ray எடுக்க வசதி கிடையாது. இதெல்லாம் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரிவதில்லை.

அதே போல் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மருந்துசீட்டுகளை கொஞ்சம் கவனித்து பாருங்கள். இந்த துறையை பொறுத்தவரை இருப்பது 6 மருந்துகள் தான். அதில் ஒரு பாரசிட்டமால், டைக்லோபினாக், பி காம்ப்ளெக்ஸ், அமாக்ஸிசிலின் இன்னும் எதொ ரெண்டு இருக்கும். ஞாபகமில்லை. எந்த condition-க்கும் இதுதான் available மாத்திரைகள். புதிய தலைமுறை மருந்துகள் எவ்வளவோ வந்தபின்னும், இந்த மருந்துகள் பயனில்லை என்று கூறவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட conditions- களுக்குத்தான் பயன்படுத்த முடியும். மருந்துகளை நிர்ணயிப்பது இந்த மருத்துவர்கள் அல்ல. அதற்கென்று ஒரு மாநில குழு இருக்கிறது. அது என்ன செய்கின்றது என்று எனக்கு விளங்கவில்லை.

நல்ல மருத்துவர்கள் பலர் இருந்தும் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. கைகட்டி நின்று கொண்டு, இருக்கின்றவற்றை வைத்துக்கொண்டு தங்களால் இயன்றவரை சிறப்பாக செய்யமுயன்றும், பலனின்றி அந்நோயாளிகளிடமிருந்தே தாங்கள் செய்யாத தவறுகளுக்காக வசவும் வாங்கிக்கொண்டு இருந்து வருகின்றனர். இது தமிழ்நாடு முழுக்கவும் முக்கால்வாசி அரசு மருத்துவர்களின் நிலை என்று நான் நினைக்கிறேன். இதையெல்லாம் விட கொடுமை நவீன உபகரணங்கள் கிடங்கில் கிடந்தாலும், திறப்பு விழா நடத்த 5-வது கூட பாஸ் பண்ணாத ஒரு வட்டத்திற்கோ மாவட்டத்திற்கோ காத்துகிடக்க வேண்டிய அவலநிலையே நம்நாட்டில் இருக்கிறது. யாரை குற்றஞ்சொல்ல?

5 Comments:

 1. BR said...

  Dear Ramanathan

  An excellent vivid description of the chores of a standard government hospital. I have met some extraordinary committed and talented clinicians who have done their level best given the resources. Hope you have more experiences to share


 2. Moorthi said...

  அரசு மருத்துவர்களின் நிலையையும் யோசிக்க வைத்த ராமநாதன் அண்ணா... நீர் வாழ்க! இந்தமாதிரி தொல்லையே வேனாம்னுதான் டாக்டருங்க... பார்ட்டிங்கள அப்படியே தன் கிளினிக்குக்கு நவுத்திட்டு போறாங்களா... சரி சரி புரியுது.. அங்க கொண்டு போயி சுகப் பிரசவமானாலும் எடு கத்தியன்னு சொல்லி வயித்த வெட்டி... அடப்பாவிங்களா... கெடைக்கிற 10ஓ..15 ஆயிரத்துக்கோ பொம்பளப் புள்ளைங்க வயித்த வெட்டி.. நெனைக்கவே நெஞ்சு அதிருது! அவங்க வீட்டு பெண்கள்னா வெட்டுவானுங்களா? எத்தனை மருத்துவனுக்கு தமிழ் உணர்வு இருக்குது? எத்தனை பேர் குழுமங்களில் எழுதறாங்க? எத்தனைபேர் வலைப்பூ வச்சிருக்காங்க..? தமிழுணர்வு கொஞ்சமாச்சும் இருக்கா அவங்க கிட்ட? எழுதுற இங்கிலிபீசே நம்மால படிக்க முடியலை!


 3. இராமநாதன் said...

  இரவிக்குமார், மூர்த்தி
  உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
  இதில் மூர்த்தி கிண்டலடிக்கிறாரா இல்லை serious-a சொல்றாரானு தெரியல!

  இருந்தாலும் ப்ளாக் பண்ணி கழுத்தறுப்பதே என் தலையாய கடன் என்பதால் பதில் கூறிவிடுகிறேன். நீங்கள் கூறுவதுபோல் சும்மாவே வெட்டற மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மறுக்கவில்லை. ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த மருத்துவ சமுதாயத்தையும் குற்றம் சொல்வது சரியானதன்று. இல்லையா? அரசு மருத்துவர்கள் தனியாருக்கு நோயாளிகளை தள்ளிக்கொண்டு போகின்றவர் அல்லர். நம் வீட்டின் முன் குழி அவர்களாகவே வெட்டிவிட்டு, பின்னர் அதை மூட நகராட்சிப்பணியாளர்கள் பணம் கேட்கும் கலாச்சாரத்தில் நாம் வாழ்கிறோம். இதில் மருத்துவப்படிப்பு சேர்வோரும் ஒன்றும் வானிலிருந்து குதித்தவரல்லர். அதிலும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து சேரவேண்டிய நிலை வேறு. அதற்காக அவர்கள் செய்வதை நான் நியாயப்படுத்தவரவில்லை. இத்தகையோர் எல்லாத்துறைகளையும் போலவே இங்கும் இருக்கின்றனர்.

  இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? இப்போது caesarian section வேணும்னு கேட்கிற பெண்மணிகள் எவ்வளவு என்று? சுகப்பிரசவமா? வேண்டாம். வலி தாங்க முடியாது. நல்ல நேரத்தில், ஜாதகப்படி எடுக்கவேண்டும் என்று ஏகப்பட்ட condition-கள் வரும். நான் சொல்வது என்னவென்றால், மருத்துவர்களின் கண்ணோட்டத்திலேயும் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். இன்னும் இருக்கிறது. அதை தனிப்பதிவாகவே சில தினங்களில் செய்கிறேன்.

  மருத்துவர்கள் தம் வேலை நேரம் முழுதும் கணினிகளின் அருகினில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லையென்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். என்னைப் போன்ற வேலையற்றோர்க்கு இது பொருந்தாது!


 4. Moorthi said...

  எனது கூற்று கிண்டல் அல்ல. மன வேதனை மட்டுமே. மற்றபடி தாங்கள் சொல்வதுபோல நல் மாணிக்கங்களும் மருத்துவத் தொழிலில் உண்டு. அடுத்த ஆக்கம் விரிவாய் இடுங்கள் ராமநாதன் அண்ணா.


 5. அல்வாசிட்டி.சம்மி said...

  உண்மையான கருத்துக்கள். சில நேர்மையான மருத்துவர்கள் தான் இத்தகைய சிக்கலில் மாட்டுகிறார்கள். மற்றவர்கள் அரசியல் மற்றும் பணபலத்தால் இக்குற்றச்சாட்டுகளில் மாட்டுவதில்லை.

  எனது மனைவி பல் மருத்துவராகையால், இறுதியாண்டில் (அரசு மருத்துவமனையில்) அவர்கள் பட்ட கஷ்டங்களை கூறுவார், அது நீங்கள் விளக்கிய கருத்துக்களுடன் ஒத்துப்போகிறது.

  அரசு மருத்துவமனைக்கான பண ஒதுக்கீட்டில் செலவு விகிதம் பார்க்கவும்.

  வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளப்பணம் 60%
  மருந்து வாங்க - 20%
  பராமரிப்பு செலவு - 20%

  இதில் மருந்து வாங்கியதில் 15% அமுக்கப்படுகிறது, 5% மட்டுமே மக்களை சென்றடைகிறது.

  இந்திய மருத்துவமனைகளின் அவலம் என்று மாறும்?


 

வார்ப்புரு | தமிழாக்கம்